மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றதாலோ என்னவோ ஜிப்ஸி படம் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது.
எல்லோரும் கதையை வைத்து படம் எடுப்பார்கள். ராஜூ முருகனோ கட்டுரைகளை வைத்து படம் எடுக்க முயன்றிருக்கிறார்.
முஸ்லீம்களின் மீதான வன்முறை, மதச்சார்பின்மையின் அவசியம், மத அடிப்படைவாதம் குறித்த அரசியல் சிறிதளவு கூட கலையாக மாறாமல், ஆவணத்தன்மையோடு தேங்கி நின்றுவிடுகிறது
ஜிப்ஸி!
சில இடங்களில் பேசப்படும் புத்திசாலித்தனமான , கவித்துவமான வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு பலம் சேர்த்தாலும், தெளிவான திரைக்கதை இல்லாத பலவீனம், போலி லட்சியவாதப் பார்வை போன்றவற்றால் சலிப்பையும் ஆயாசத்தையும் தோற்றுவிக்கிறது படம்.
ஜிப்ஸி தமிழ் சினிமாவாகவும் இல்லை. இந்திய சினிமாவாகவும் பரிணமிக்கவில்லை.
இந்துமத அடிப்படைவாதத்தை பேசினால் ஒரு சார்பாக இருக்கும் என்று கருதினாரோ என்னவோ படம் முழுக்க வரும் இஸ்லாம் பாத்திரங்களையும் பிற்போக்காளர்களாக, அடிப்படைவாதிகளாக காட்டியிருக்கிறார் முருகன்.
மதச்சமநிலையை வலியுறுத்த படத்தில் எடுத்திருக்கும் முயற்சிகள் அனைத்தும் செயற்கையாக இருக்கின்றன. நாயகனை காஷ்மீர் பண்டிட்டுக்கும் காஷ்மீர் இஸ்லாமியப் பெண்ணுக்கும் பிறப்பவனாக காட்டுவதே ஒருவகையில் பிற்போக்குத்தனம்தான். மணிரத்தினம் கதைகளும் இந்து ஆண், முஸ்லீம் பெண் காதலிப்பதையே பேசுகின்றன. முஸ்லீம் ஆண் vs இந்து பெண் காதல் எனச் சிந்தித்திருந்தால்கூட சற்று முற்போக்கானதாக படம் அமைந்திருக்கக் கூடும்.
படத்தின் பாத்திரங்கள் நிலத்தோடு அதன் பண்பாட்டோடு தொடர்பற்றவர்களாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் செம்மலர் கதைகள் பாதிக்கப்பட்டவர்கள் பார்ட்டி ஆஃபீசை நோக்கி ஓடுவதாக முடியும். இந்தப்படத்திலும் அப்படிதான்!
கேரள அரசியல் சூழல் படத்தில் சற்று தெளிவற்றதாக இருக்கிறது. கதை நிகழும் கேரளாவில் ஏதோ பிஜேபி அரசு நடப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆப்கான் போன்ற நாடுகளில் இஸ்லாம் தாராளவாதம், நவீன இஸ்லாம் அடையாளங்களோடு சினிமா வருகையில், ஜிப்ஸியோ பிஜேபி பார்வையில் தலாக் குறித்து பேசுவதெல்லாம் இஸ்லாமியர்களுக்கும் உதவுவதாக இல்லை.
மேலும், குஜராத் கலவரத்தில் தலித்துகள் எடுப்பார் கைப்பிள்ளையாகப் பயன்படுத்தப்பட்டதுபோன்ற தோற்றத்தை ஜிப்ஸி அளிக்கிறது.
பிஜேபியால் ஆளப்பட்டுவரும் மாநிலமான குஜராத்தில்தான்
2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவிக்கிறது.
நவ்சர்ஜன் எனும் தனியார் அமைப்பு குஜராத்தில் 98 வகையான தீண்டாமைக் குற்றங்கள் கடைப்பிடிக்கப்
படுவதை ஆதாரங்களோடு கூறுகிறது.
குஜராத்தில் 54 சதவீதப் பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியாக அமர்த்தப்படுகின்றனர். கக்கூஸ் கழுவும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய உனா கலவரம் ஒட்டி தலித்துகள் திரண்டெழுந்து தம் பிஜேபி எதிர்ப்பை காட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது!
ஒரு காதல் கதையாகவோ மதச்சார்பின்மை அரசியல் பேசுகிற படமாகவோ ஜிப்ஸி நிறைவடையாதது ஏமாற்றமே!
இடைவேளைக்கு முன் நாயகனிடம், அவன் வளர்ப்புத் தந்தை உனக்கென்று ஒரு துணை வேண்டும். அது நீ சாகும்போது நினைத்துப் பார்க்கும் முகமாக இருக்க வேண்டும் என்பார்.
அப்படி ஒரு அழகான சாந்தமான நாயகியை நாயகன் சந்திக்கும்போது ஒரு அழகான காதல்கதையை அனுபவிக்கப் போகிறோம் எனும் எதிர்பார்ப்பு ஏற்படுவது உண்மை.
தொடர்ந்து வரும் சம்பவங்கள் இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.
உணர்வுகளைத் தூண்டி மனதில் உயரிய மாற்றங்களை விதைப்பதே கலை. ஜிப்ஸியோ ஒரு அரசியல்வாதிபோல் உபதேசிக்கிறது!
#கரிகாலன் முகநூலில் கரிகாலன்.