– தங்கம்.

எழுத்தாளர் சோ.தர்மன், ஊரடங்கு நாளொன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, குமுக ஊடகங்களில் வெகு விசையுடன் பரவி வருகிறது கொரோனா போல.

  • சோ.தர்மன்

நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி. டாக்டருக்கு போன்பண்ணினேன். க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் வேதனை குறையும் என்றார்.

சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன்.காவல்துறை விசாரணையில் நான் சொன்ன காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.டாக்டரின் மெசேஜ் காட்டினேன்.கண்டுகொள்ளாததோடு என் டூ வீலரைப்பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதோடு வீட்டுக்கு நடந்து போ காலையில் போலீஸ்டேஷனில் வந்து வண்டியைப் பெற்றுக்கொள் என்று ஒருமையில் தான் பேச்சு.அவ்வளவு பேரும்‌சின்னப்பையன்கள்.ஹோம்கார்டுகள் நாலைந்து பேர்.

கொஞ்சநேரம் நின்றேன் அறிமுகமான உயர் போலீஸ் ஆபிசருக்கு போன்பண்ணினேன். போனை போலீஸ்காரரிடம்‌கொடுக்கச்சொன்னார். கொடுத்தேன். அடுத்த நிமிஷமே போனை என்னிடம் கொடுத்தவர் ரைட்டர்னு‌ முதல்லயே சொல்லவேண்டியதுதானே சார் என்றார்.

அதெல்லாம் வெளியிலே சொல்ல வேண்டிய விஷயமில்லையே‌ என்றேன்.

அடுத்து கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி வெட்கப்பட்டுப் போனேன்.
” கடைசியாக எந்த ஸ்டேஷன்ல சார் வேலை பாத்தீக”

“விளாத்திகுளத்தில் வேலைபார்த்து‌ ரிடையர்டு”என்றேன்.

பவ்யமாக வண்டிச் சாவியை கொடுத்த போலீசிடம் என் செல் போன் படங்களை காட்டினேன். தமிழகமுதல்வர்கள் கலைஞர்,அம்மா,தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்,காவல்துறை கண்காணிப்பாளர்,நெல்லை மாவட்ட கலெக்டர்,கோயம்புத்தூர் காவல்துறை உதவி ஆணையாளர் ஆகியோர் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிற புகைப்படங்களைப் பார்த்தவர் அசந்து விட்டார்.
“எல்லாமே வீரதீரச்செயலுக்குத்தான்” என்றேன்.
“அப்படியா சார் “என்று வாயைப்பிளந்தவர்.
“உங்கள் பேர் என்னசார்”
“என் கவுண்டர் எமதர்மன்”
என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி வந்துவிட்டேன்.
தமிழ்நாட்டில் ரைட்டர் என்றால் ஒன்று பத்திரம் எழுதுபவர் இல்லையென்றால் போலீஸ் ரைட்டர்.

எழுத்தாளன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

கேரளாவில் புகழ்பெற்ற திருடன் மணியன் பிள்ளை.இவனுடைய சுய சரிதை புத்தகமாக வந்திருக்கிறது. அதில் ஒரு இடம். மணியன்பிள்ளை கொள்ளையடித்து விட்டு நடுராத்திரியில் வருகிறான். காவல்துறை விசாரிக்கிறது. அவன்சொல்கிறான்.
“எழுத்தாளர் பஷீர் ஐயாவைப்பார்த்துவிட்டு வருகிறேன்.பேசிக்கொண்டிருந்தேன் நேரமாகிவிட்டது”
‌. அடுத்த நொடி காவலர்கள் அவனிடம் பஷீரின் நலன் விசாரித்துவிட்டு அவனை போகச் சொல்கிறார்கள்”

தமிழ்நாட்டில் இவ்வளவு கேவலத்துக்கு காரணம் தமிழ்நாட்டை எழுத்தாளர்களும் நடிகர்களும் ஆண்டதுதான். வேறென்ன காரணம் இருக்க முடியும்.

  • தங்கம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.