இரண்டரை லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள்.
இவர்களில் பலர் கல்லூரியில் பகுதிநேர வேலை பார்த்துதான் செலவுகளை சமாளித்து வந்தார்கள்.
கல்லூரிகள் அனைத்தும் மூடபட்ட நிலையில் வேலைகளும் காலி..
உணவுக்கு வழியின்றி, ஊர் திரும்ப விமானங்களும் இன்றி தத்தளிக்கிறார்கள்..
இந்திய தூதரகம் களத்தில் இறங்கி ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்திய உணவகங்கள், கோயில்கள், குருத்வாராக்கள், இந்தியர்கள் ஆகியோரை தொடர்புகொண்டு இந்திய உணவகங்கள் மூலம் உணவிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ஆனால் ஏப்ரல் 30 வரையாவது ஊரடங்கு இங்கே நீடிக்கும் என்ற நிலையில் அத்தனை நாள் இப்படி உணவிட முடியுமா என தெரியவில்லை.
இவர்கள் பிரச்சனை இப்படி என்றால் அமெரிக்கா முழுக்க அனைத்து ஊர்களிலும் சுற்றுலாவுக்கு வந்திருக்கும் இந்திய பெற்றோரின் நிலை படுமோசம்.
எனக்கு தெரிந்து இந்தியர்கள் இல்லாத ஊரே அமெரிக்காவில் கிடையாது. மகன், மகளை பார்க்க வந்திருக்கும் இந்திய பெற்றோர், மகள்/மருமகள் பிரசவம், குழந்தை வளர்ப்புக்கு உதவ வந்த பெற்றோர் ஏராளம்….இவர்கள் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கலாம். இவர்களில் ஏராளமானோர் இங்கே மாட்டிக்கொண்டார்கள்.
ஆறுமாத காலம் விசா முடிந்து உடனே திரும்பவேண்டும்…விசா நீடிக்கவேண்டுமெனில் தலா $400 பக்கம் ஆகும். அது கூட பிரச்சனை இல்லை. ஆனால் முதியவர்களை கொரொனா தாக்கும் என்பதால் இவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் சூழல். பலரும் கொண்டு வந்திருக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாத்திரைகள், இன்சுலின் தீர்ந்த சூழலில் இங்கே மருந்து வாங்கவேண்டுமானால் ப்ரிஸ்கிர்ப்ஷன், இன்சூரன்சு இன்றி வாங்கமுடியாது. இந்தியாவில் இருந்து மருந்தை குரியரில் அனுப்பவும் தடை…இப்படி இந்திய குடும்பங்களில் கடும் நெருக்கடி நிலவுகிறது.
இப்படி சுற்றுலா வந்து மாட்டிக்கொண்ட முதியவர்கள் பலரும் வீட்டுக்குள் அடைபட்டுகிடந்தபடி தொலைகாட்சி சீரியல்களை யுடியூபில் பார்த்தபடி காலம் கழிக்கிறார்கள். மன அழுத்தம், கவலை, இந்தியாவில் விட்டு வந்திருக்கும் வேலைகள், என அவர்கள் மனதில் பல கவலைகள்…இப்படி வரும் பெற்றோருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு இன்சூரன்சு இல்லாமல் மகன்/மகளை ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்யும் சூழலுக்கு ஆட்படுத்திவிடுவோமா எனும் அச்சமும் பெருமளவில் நிலவுகிறது…
இத்தனை லட்சம் பேரையும் விமானம் வைத்து கூட்டிபோக எந்த அரசாலும் முடியாது. இது உருவாக்கியுள்ள பொருள் நட்டத்தில் இருந்து மீள பலருக்கும் மிகநீண்ட காலம் பிடிக்கும். இதுதான் சாக்கு என விமான கம்பனிகள் மேமாத டிக்கட் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. அப்படி டிக்கட் புக் செய்தாலும் அந்த விமானம் பறக்குமா, இந்தியாவுக்கு வந்தால் 14 நாள் க்வாரன்டைனில் இருக்கணுமா…இப்படி பல கேள்விகள்.
ஆக அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு இது மிக கடுமையான சோதனைக்காலம். மத்தியகிழக்கு, ஐரோப்பாவாழ் இந்தியர்கள் நிலைமையும் இதுபோலவே அல்லது இதைவிடவும் மோசமாக இருக்கலாம் என நினைக்கிறேன். மத்தியகிழக்கு நாடுகளில் கட்டுமானத்துறை உள்ளிட்ட அடிமட்ட வேலைகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளரின் நிலையை நினைத்து பார்க்கவும் இயலவில்லை.
ஒருவருக்கு ஒருவர் உதவி, தோள்கொடுத்தால் மட்டுமே இதில் இருந்து இவர்கள் மீளமுடியும்.
-வாட்சப்பில் Neander Selvan