இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தில் முப்பது சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. தனியார் ஊழியர்களுக்கோ சம்பளம் மொத்தமும் கட் செய்யப்படுகிறது. முறைசாரா தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை.
இதே சூழலில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், டெக்னீசியன்கள், உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள் போன்ற பலர் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். முன்னணி திரையுலகப் பிரபலங்கள் சிலரே இதுவரை நிதியுதவி அளித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு என இரண்டுக்குமே நிதியுதவி வழங்கியுள்ளார். ரஜினியோ பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் பணம் வழங்கிவிட்டு சைலன்ட்டாக செட்டிலாகிவிட்டார்.
தற்போது பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே நடிகர் அஜித் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாயும் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி சங்கத்திற்கு 25 இலட்ச ரூபாயும் கொடுத்துள்ளார்.
இதுதவிர திரையுலக மக்கள்தொடர்பாளர்கள் சங்கத்துக்கு ரூ இரண்டரை இலட்சம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றோடு இரண்டு திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா இரண்டரை இலட்சம் கொடுத்துள்ளார். மொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் வரை உதவியாக வழங்கியுள்ளாராம் அஜித்.
தமிழ் திரையுலகிலேயே கொரோனா நிவாரண நிதியாக அதிகம் கொடுத்தவராக அஜித் நிமிர்ந்து நிற்கிறார். கொரோனாவில் நாடே செத்தாலும் தாங்கள் வீட்டு கஜானாவை இறுக்கக் கட்டிப்பிடித்து உறங்கும் மற்ற எல்லா பணக்காரப் புண்ணியவான்களும் ஒருவேளை கொரோனா அடி குடுத்தாத்தான் திருந்துவார்களோ ?