வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு என்று டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காலகட்டத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் இன்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில், வயதுவாரியாக எத்தனை மணிக்கு வாங்கலாம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினார்கள். பல்வேறு இடங்களில் வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர். சமூக வலைதளத்தில் காலை முதலே டாஸ்மாக் கடையில் நிற்கும் மக்கள் வரிசை தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்?

ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளைத் திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது?

இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்குப் போகும், பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு. ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இன்று சொல்கிறேன்…..இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.

அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.

நோய் தொற்றிற்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்.

கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக்கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்.

தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்தக் கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கி விட்டது.

அரசுக்கு ஒரு சிறு குறிப்பு :இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மைக் குரல்களுக்குச் செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது .

உண்மையில் இது யாருக்கான அரசோ? இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.