சோறு – சாதம்

இந்தச் சாதாரணச் சொற்களுக்கு பின்னால் நுண்ணிய ஆரிய அரசியல் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.

கல்யாண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க” என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.

காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் “அம்மா, தாயே சோறு போடு தாயீ” என்று கூறுவதாக வரும்.

எந்த பிச்சைக்காரனாவது “அம்மா தாயே சாதம் போடுங்க” என்று வருகிறதா?
அது ஏன்?

திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது.

சோறு என்கிற வார்த்தை சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வருகிறது.

“பெருஞ்சோற்று உதியன்” என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று பாரதி பாடியுள்ளான்.

இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது. “சோத்துக்கு வழியில்லாத நாயி” என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். “சாதத்துக்கு வழியில்லாத நாயி” என்று எழுதப்படுகிறதா? காரணம்?
அதன் பின்னால் உள்ள அரசியல்.
“கல்யாண சமையல் சாதம்” என்று புகழ்ந்து பாடல் வரும்.
“எச்ச சோறு” என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

இதன் உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட “தண்டச் சோறு” என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது ” தண்ட சாதம்” என்று சொல்வதுண்டா?

சாதம் என்ற வடமொழிச் சொல், பிரசாதம் என்ற வடமொழிச் சொல்லின் விகுதி. பிரசாதம் என்ற சொல் உயர்வான ஒன்றாக பிராமணர்களால் கோயில்களின் மூலம் நிறுவப்பட்டது.. கோயில்களில் புழக்கத்தில் உள்ள பெரும்பாலான பெயர்கள் சமஸ்கிருதம்-இந்தியில் இருந்து வந்த சொற்களே. பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் – பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்ற வடமொழிப் பெயர் உள்ளது.

பிராமணர்களை எப்போதும் உயர்வானவர்களாக மதிக்கும் சாதீய அடுக்கில் பழகிய நம் சமூகம், அதே போல உயர்வான ஒன்றாக பொது இடங்களில் பிராமணர்கள் பயன்படுத்திய பிரசாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறது. அந்த சொல்லின் சரிபாதி சுருங்கி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது.

பழைய தமிழகத்தின் உணவுமுறை பற்றிய செய்திகள், சங்கப் பாடல்களில் உள்ளன. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் `உணவு’ என்ற சொல் வருகிறது.  உணா என்பதும் உணவைக் குறிப்பதுதான். உணவைக் குறிக்க வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆகாரம், உறை, ஊட்டம், புகா, மிசை என்னும் சொற்கள் இருந்தன. இவற்றில் உள்ள நுட்பமான வேறுபாடுகளில் ருசி, விருப்பம், ஆரோக்கியம் தொடர்பானவையும் அடங்கும்.

சங்க நூல்களில் (பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்றவற்றில் கும்மாயம், மெல்லடை, அப்பம், பண்ணியம், அவல் போன்ற பலகாரங்கள் வருகின்றன. கி.பி.16-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில் அதிரசம், பிட்டு, இடியாப்பம், சட்டினி, தோசை, சீடை போன்றவற்றின் பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு தாக்கத்துக்குப் பிறகு பலவகை உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் சடங்கு, வழிபாடு காரணமாகவே இவை நுழைந்திருக்கின்றன.

தமிழன், ஆரம்பத்திலிருந்தே அசைவப் பிரியனாக இருக்கிறான். சங்ககாலத்தில் பறவை, விலங்குகள் எல்லாவற்றையும் உண்டான். போர் வீரர்கள், பெரும்பாலும் மாட்டிறைச்சியையே உண்டனர். சங்ககால இறுதியில் இதுபோன்ற வழக்கங்கள் அருகின. பக்தி இயக்க காலத்தில் ஆடு உரித்துத் தின்பது பாவமானது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது நமது உணவுப் பண்பாட்டில் பெரும் மாற்றம் உண்டானது. இந்தக் காலத்தில் உண்ணும் முறை, தயாரிப்பு போன்றவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் சோறு முதன்மை உணவுகளில் ஒன்றாகும். பண்டைய காலம் தொட்டே சோறு தமிழர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. பல புராணங்களிலும் சோறு என்ற சொல் வெகுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சோறு முக்கியமாக கறி, குழம்பு, பொறியல், வறுவல், அப்பளம் போன்ற இன்னும் பலவகை இதர பதார்த்தங்களுடன் சேர்த்தே உண்ணல் தமிழர் வழக்காகும். தமிழரின் உணவு வகைகளில் சோறு ஒரு நாளைக்கு ஒரு நேர உணவாக என்றாவது உண்ணுதல் தமிழர் வழக்கமாகும். கறிகள் அற்ற சோற்றை “வெறும் சோறு” என்று அழைக்கப்படும்.

தமிழ் வினைச்சொல் பயன்பாட்டிற்கு ஏற்ப, அரிசியை சோறாக ஆக்கும் செயற்பாட்டை “சோறாக்குதல்” என்பர். சோறாக்கும் போது சோற்றை இரண்டு விதமாக ஆக்கும் வழக்கு தமிழரிடம் உண்டு. ஒன்று அரிசியை பானையில் இட்டு அரிசி அவிந்து சோறாக பதமான நிலையில் பெறுவதற்கு ஏற்ப சரியான அளவில் நீர் விட்டு சமைக்கும் முறையை அல்லது ஆக்கும் முறையை “நிறைகட்டுதல்” என்பர். அதேவேளை சரியான அளவின்றி நீரை விட்டு பின்னர் அரிசி சோறாகும் நிலையில் மிகுதி தண்ணீரை வடித்து எடுக்கும் நிலையை “வடித்தல்” அல்லது “வடித்தெடுத்தல்” என்று குறிப்பிடுவர். அவ்வாறு அரிசி சோறாக மாறும் பதமான நிலைக்கு மேல் வேகுமானால் அது கூழாகிவிடும். அந்த பதநிலையை கூழ் என்பர். சிலவிடங்களில் “கஞ்சி” என்று அழைப்பதும் உண்டு. முதல் நாள் ஆக்கிய சோறு மறுநாள் பயன்படுத்தப்படும் போது அதனைப் பழஞ் சோறு என்பர். பழஞ்சோற்றைச் சிலவிடங்களில் “பழைய சோறு” என்றழைக்கப்படுவதும் உண்டு.

கஞ்சி’ என்ற சொல், வறுமைக்கோட்டின் நிலையைக் காட்டுவது.  `கஞ்சிக்கும் அலைந்த அடிமை’ என்பது பழைய ஆவணம்.

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்று போர்டுகள் வைத்தது முதல் புழக்கத்தில் இருந்த சோறு என்ற வார்த்தை இடமாறி, புளிச் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது என்று சமஸ்கிருத உயர்வாக மாறி நிற்கிறது.

இதுவெறும் வடமொழிச் சொல் – தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே. அதைத்தான் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திப்பான்?

இனி சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே பயன்படுத்துவோம். சோறு என்பது இழிந்த தமிழ் சொல்லல்ல என்பதை நிறுவுவோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.