உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், அரசியல் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்!

தனது தந்தை சாந்தி பூசன் வழியில் கடந்த 30 ஆண்டுகளாக நீதித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உத்திரவாதப்படுத்த அயராது பாடுபட்டு வருபவர் பிரசாந்த் பூசண்!

தற்போது இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது! மூன்று நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்கிறது! ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இவர்மேல் பாய்கிறது ? இதற்கு இவருடைய இரண்டு டிவிட்டர் பதிவுகள் காரணம்!

  1. நான் எமர்ஜென்சி காலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற செயல்பாடுகளைப் பார்க்கிறேன்! தற்போது நமது நீதித் துறை அரசிடம் சரணாகதி அடைந்ததைப் போல எந்தக் காலத்திலுமே நடந்ததில்லை. பெரும்பாலான நீதிபதிகள் அரசியல் சட்டத்தையும்,மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்ததை முற்றிலும் மறந்துவிட்டனர்.

2. இந்தியாவின் சமீபத்திய ஆறாண்டுகளை வருங்கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் யாரேனும் ஆய்வு செய்யும் போது இந்த காலகட்டத்தில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது போல எமர்ஜென்சி காலத்தில் கூட நடக்கவில்லை எனச் சொல்வார்கள்! அதுவும் ஜனநாயகத்தை காப்பாற்றும் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டே முடங்கி இருக்கிறது.அதிலும் குறிப்பாக கடைசியாக பொறுப்புக்கு வந்த நான்கு தலைமை நீதிபதிகளின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குரியது.

இந்த கருத்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது! காரணம் அவர் கூறிய ரஞ்ஞன் கோகாய், தீபக் மிஸ்ரா, ஜெகதீஸ் சிங் கேகர் மற்றும் தற்போதைய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோரின் செயல்பாடுகள் மக்கள் பார்த்து நொந்தது தான்!

ஏற்கனவே பூசண், ’’இது வரையிலான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளில் சுமார் 16 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்’’ என்று கூறியது சர்ச்சையானதை நினைவு கூர்கிறேன்! அப்போது கிருஷ்ண ஐயர் அவர்கள், ’’பிரசாந்த் பூசன் கூறியிருப்பது தொடர்பாக ஒரு தனி விசாரணை நடத்தி உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்’’ என்று கூறி ஆதரித்தது கவனத்திற்குரியது.

இப்படி சொல்வதற்கான துணிச்சல் பிரசாந்த் பூசண் ஒரு நேர்மையாளராக நெருப்பை போல வாழ்வதால் வருகிறது. மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் பிரசாந்த் பூசண் இது வரை பல நூறு பொது நல வழக்குகளை மக்களுக்காக நடத்தியவர்! அவர் தன் வழக்கறிஞர் தொழிலில் 75% பணம் வாங்காத வழக்கிலும், 25% மட்டுமே கட்டணம் பெற்றும் வாதாடுகிறார். அதுவும் பாதிக்கப்பட்டவர் நேர்மையானவர் என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொண்டே ஆஜராவார்!

இந்தியாவில் மக்கள் குறை கேட்பு ஆணைய உருவாக்கத்திலும்,ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட ’ஜன்லோக் பால் மசோதா’ உருவாக்கத்திலும் பூசண் பங்கு குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும்,தங்கள் சொத்து விபரங்களை பதவி ஏற்புக்கு முன்னும், பதவிக்கு பின்னும் தெரியப்படுத்த வேண்டும் என்ற வழக்கில் ஆஜராகி வென்றவர்.

சமீப காலமாக நமது நீதிமன்றங்கள் அரசின் செயல்பாடுகள் பலவற்றை மக்கள் நலன் பாராமல் ஆதரித்து வருவது தொடர்பாக நம் அனைவருக்குமே கடும் மன வருத்தம் இருக்கிறது. கொரானா காலத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதித்தது தொடங்கி ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததில் தலையிட்டது வரை அனைவரும் பார்த்து வருகிறோம்.

அரசியல் சீரழிந்தாலும் கூட நீதிதுறை நேர்மையாக இருந்தால் அது ஒரளவு குறைந்தபட்ச நிம்மதியை நமக்கு ஏற்படுத்தும். ஆனால்,அதுவும் சறுக்கும் போது மக்கள் மன்றத்தில் இருந்து இப்படியான விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாது.

பிரசாந்த் பூசணுக்கு இந்தியா முழுமையிலும் உள்ள ஜனநாயக சக்திகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வண்ணம் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யதக்க வகையில் நடக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் சமூக ஆர்வலர்களிடம் வெளிப்பட்டுள்ளது.

பிரசாந்த் பூசணை முன்னாள் நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ராம்பால், கோபாலகெளடா,கங்குலி உள்ளிட்ட ஏழு பேரும்,ஏராளமான வழக்கறிஞர்களும் ஆதரித்து உள்ளனர்! பத்திரிகையாளர்கள் அருண்ஷோரியும், என்.ராமும் ஆதரித்துள்ளனர். நாமும் வலுவாக ஆதரிப்போம்.

-சாவித்திரி கண்ணன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.