தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படாமல் இருந்த காலத்தில் அதில் இருக்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள்.
அதன்பின்னர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு தேனாண்டாள் முரளி தலைவரானார். அப்போதிருந்து இரண்டு சங்கங்களையும் இணைக்கும் பேச்சுகள் உருவாகின. இப்போது இணைப்புக்கு முன்னோட்டமாக,இரு சங்கங்களும் இணைந்த ஒருங்கிணைந்த கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் கருதி செப்டம்பர் 17 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிவாகிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ’ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு (Joint Producers Committee or JPC)’ அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டிற்கு உதவுவது என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
விளம்பர செலவுகளைக் குறைப்பது குறித்தும், விபிஎஃப் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
ஃபெப்சியுடன் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒப்பந்தங்கள் செய்யப்படும்.
மேலும் ஒவ்வொரு மாதமும் இருமுறை சந்தித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவெடுத்து செயல்படுத்த உறுதி செய்யப்பட்டது…என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கூட்டுக்குழு சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முரளி ராமநாராயணன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.லலீத்குமார், சுரேஷ்காமாட்சி ஆகியோர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு சங்கங்களும் இணைந்து கூட்டுக்குழு உருவாக்கியுள்ள அதேநேரத்தில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் டி.ராஜேந்தர் மற்றும் அச்சங்கத்தில் இருப்பவர்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
இதனால், டிராஜேந்தருக்கே லேசாக முளைத்திருந்த றெக்கை ஒடிக்கப்பட்டு, அவரது தலைமையில் செயல்பட்ட ஒரு சில சொல்லவொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று சென்னை வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.