‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. உமா உயிரிழந்த தகவலை அவரது தோழியும் நடிகையுமான அம்மு ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கதாபாத்திரம் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை உமா. ‘மஞ்சள் மகிமை’, ‘ஒரு கதையின் கதை’ உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்பு அதிகம் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களாவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.”

இவரது கணவர் கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எதிர்பாராத இறப்பு குறித்து அவருடன் ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த காயத்ரி பேசும்போது, “‘மெட்டி ஒலி சீரியல் எங்கள் எல்லாருடைய வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்த ஒன்று. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் நாங்கள் ஐந்து பேரும் அக்கா, தங்கைகளாகதான் பழகி வந்தோம். குடும்ப நண்பர்கள் நாங்கள். சில வருடங்களாகவே உமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த செய்தி எதிர்பாராத ஒன்று” என்றார்.

உமாவின் சகோதரி ‘மெட்டி ஒலி’ சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வனஜா. இவரது இறப்பு குறித்து, முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை அம்மு ராமச்சந்திரன், ‘சீக்கிரமாக எங்களை விட்டு பிரிந்து விட்டாய். அவள் எங்களுடன் இப்போது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவளது இறப்பு செய்தி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. உன்னையும் உனது புன்னகையையும் நாங்கள் இனி மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

நடிகை அம்மு ராமச்சந்திரனிடம் இது குறித்து பேசினோம், “நானும் உமாவின் அக்கா வனஜாவும் நல்ல நண்பர்கள். அவள் மூலமாகத்தான் உமா எனக்கு அறிமுகமானாள். பிறகு எல்லோரும் குடும்ப நண்பர்கள் ஆனோம். சில வருடங்களாகவே உமா உடல் நலன் சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தாள். ஈரோட்டில் சிகிச்சையில் இருந்த போது, கடைசி மூன்று நாட்களாக தமது குடும்பத்தினரிடம் நேரில் வருமாறு சொல்லியிருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி, முடியவில்லை என்றால் சென்னை அழைத்து வந்து விடலாம் என்று எண்ணியே அவளது குடும்பம் கிளம்பி சென்றது,” என்றார்.

“இன்று காலை 7 மணி அளவில் அங்கே போய் சேர்ந்ததும், அவள் அம்மாவை பார்த்துவிட்டு, ‘வந்துட்டீங்களா?’ என கேட்டு விட்டு, குடும்பத்தை கடைசியாக பார்த்த பிறகே அவள் உயிர் பிரிந்திருக்கிறது. வனஜாவுடன் சேர்த்து அவளுக்கு இரண்டு சகோதரிகள். ஒரு தம்பி. இவள் இரண்டாவது மகள். கணவர் கால்நடை மருத்துவர். இன்னும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை,” என்றார் அம்மு.

உமா அடிப்படையில் மிகவும் தன்மையான அமைதியான பெண். மஞ்சள் காமாலைதான் அவள் மரணத்திற்கு காரணம் என நிறைய செய்திகள் வருகின்றன. ஆனால், அவள் குடும்பத்தில் இருந்து யாரும் சொல்லாமல் இதை உறுதி செய்ய முடியாது. யாரும் எதிர்பாராத மரணம் இது. அவளை நேரில் பார்த்தே சில வருடங்கள் ஆகிறது அவளது இறுதி நிகழ்வுக்கு நேரில் செல்ல வேண்டும்” என்று அம்மு வருத்தத்துடன் தெரிவித்தார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.