பார்ட் டைம் அரசியல்வாதியும், நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது உலகறிந்த சமாச்சாரம். இது தொடர்பான சில வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், குறுக்குசால் ஓட்டும் விதமாக அவர் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் பரிதாபமாகக் காட்சி அளிக்கும், அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட, சில புகைப்படங்களும் வலைதளங்களில் உலா வருகின்றன.
அப்படங்களைப் பார்த்து அய்யய்யோ நம்ம கமலா இவ்வளவு மெலிஞ்சிட்டார் என்று பலரும் உச் கொட்ட, தற்போது அவை பழைய புகைப்படங்கள் அவற்றை நம்பி உச் கொட்ட வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர், இயக்குநர் முரளி அப்பாஸ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,…ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
நம்மவர் இன்னும் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோவில் காலில் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பியப்போது வெளியானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தலைவர் நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
– முரளி அப்பாஸ், செய்தி தொடர்பாளர், மக்கள் நீதி மய்யம்.
என்று விளக்கமளித்துள்ளார். இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டே எனக்கே கொரோனா வருகிறதென்றால் மற்றவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கமலும் எச்சரித்துள்ளார்.