பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு,
ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகி விட்டது. ஊரே அடங்க ஆரம்பித்துவிட்டது.
எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் நெடுநேரமாக ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான். நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். “கோயம்பேடு போக வேண்டும்”, ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு “200 ரூபாய் குடுங்க சார்” என்றார். சாதாரண நாட்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நியாயமானது மட்டுமில்லை, அதையும் தாண்டி….
எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டேன், எனக்கு முன்னாலிருந்த மனிதன் இப்போது ஆட்டோ பக்கத்தில் வந்து சேத்பேட்டில் இறங்கிக் கொள்கிறேன் என்றான். ஆட்டோக்காரர் திரும்பி என்னைப் பார்த்தார், நான் தலையை ஆட்டினேன்.
60 ரூபாய் குடுங்க என்று அந்த மனிதரையும் ஏற்றிக் கொண்டார். பயணத்தில் பக்கத்தில் இருந்தவர் பிரசங்கம் பலமாக இருந்தது, “நான் இதுவரை எவருடைய பணத்துக்கும் ஆசைப்பட்டதில்லை, என் பணத்தை வேண்டுமானால் பிறரிடம் கொடுத்திருக்கிறேனே தவிர பிறர் பணத்தை பறித்ததில்லை.” குடியின் வாசம் தெறிக்கப் பேசிக்கொண்டே வந்தார்.
நாங்கள் இருவரும் அதிகமாகப் பேசவில்லை, ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்ன அந்த ஆள், இறங்கியதும் பேசும் தொனியை மாற்றினான். “நான் ஏண்டா உனக்குப் பணம் குடுக்கனும், நான் யார் தெரியுமா?, அதான் அவர்கிட்ட வாங்குறல்ல, ஒரே ஆட்டோவுல ரெண்டு சவாரி போவியா?” அவன் குரல் உயர்ந்தபடியே இருந்தது.
அவனிடம் சண்டையிடாமல் ஆட்டோவை நகர்த்தியவர், எதுவும் பேசவில்லை, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆட்டோவுக்குள் இருந்தவரை நீதி உபதேசங்கள் செய்தபடி வந்தவன், கண நேரத்தில் ஒரு பச்சோந்தியைப் போல நிறம் மாறினான்.
பணமே கொடுக்காமல் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அதற்கொரு நியாயம் பேசியபடி அவனால் வாழ்க்கையைக் கடக்க முடிகிறது. ஆபத்தானவன், பணத்துக்காக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் கயவன் என்று நினைத்தபடி ஆட்டோக்காரரிடம் “அவனிடம் பணத்தை வாங்கி இருக்க வேண்டும்” என்றேன்.
“சார், எனக்கு வீடு அரும்பாக்கம், நான் சவாரி எல்லாம் முடித்து விட்டு வீடு திரும்புகிறேன், உங்களைக் கோயம்பேட்டில் இறக்கி விடுவது போகிற வழியில் எனக்குக் கிடைக்கிற கூடுதல் வருமானம் தான், அவனிடம் பணம் இல்லை, இருந்தால் கொடுத்திருப்பான், அவனை ஏற்றும் போதே அவனிடம் இருந்து பணம் வராது என்று எனக்குத் தெரியும், 40 வருஷமா ஆட்டோ ஓட்டுறேன் சார்”.
“எனக்கு 2 பெண் குழந்தைக்கு சார், நல்லாப் படிச்சு வேல செய்றாங்க, அந்தப் பய பொங்கலும் அதுவுமா வீடு போய் சேரட்டும்னு தான் ஏத்திக்கிட்டேன், அப்பனக் காணோமேன்னு புள்ளைங்க தேடுமே சார், என் பொம்பளப் புள்ள மாதிரி ஒன்னு கட்டினவனக் காணோமேன்னு வீட்ல தூங்காமக் கிடக்குமில்ல”
படபடப்பான குளிர் கவிந்த அந்த இரவில் உடலும், மனமும் பெருத்த சமநிலை கண்டிருந்தது, கண நேரத்தில் ஒரு பயணம் இரண்டு வெவ்வேறான மனிதர்களை சுமந்தபடி நிகழ்கிறது, ஒருவன் நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்கிறான், தனது சொற்களைக் கூடக் காக்க முடியாதவனாக நடந்து போகிறான், இன்னொருவர் இந்த உலகம் பாதுகாப்பானது, கயவர்களின் பயணங்களையும் ஆசிர்வதிக்கும் அளவுக்கு அழகானது என்று உணர்த்துகிறவர். அது குறித்த எந்தப் பிரசங்கமும் செய்ய விரும்பாதவர்.
இறங்கும் போது 200 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய்த் தாளொன்றை சேர்த்துக் கொடுத்தேன். சிரித்தபடி அந்த ஊதா நிறத் தாளை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். “நன்றிண்ணே”. விடை பெற்ற ஆட்டோவை நின்று வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
உலகம் இயங்குவதற்கென்று ஒரு அச்சு இருக்கிறது, மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து கண்டடைந்த அச்சு அது, சக உயிர்களிடத்தில் நீதியோடு நடந்து கொள்வதற்கான நாகரீகத்தின் அச்சு.
சில நேரங்களில் அது ஆட்டோக்காரர் வேடமணிந்து வரும் போல…
தமிழ் பரணி
–வாட்ஸப் பதிவு.