மலையாள சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகை KPAC லலிதா என்ற மகேஸ்வரி அம்மா (73)நேற்று 22 பிப்ரவரி 2022 காலமானார், இவர் ஏற்று நடித்த அம்மா, அக்கா ,மனைவி கதாபாத்திரங்களில் அத்தனை நம்பகத்தன்மை கொண்டுவருவார், பார்வையாளர்களை திரைப்படத்தில் கண்டுண்டு போக வைக்கும் நடிகை இவர்.
 
மகேஸ்வரி அம்மா 25 பிப்ரவரி 1948 ஆம் ஆண்டு பிறந்தார், அவரது மேடைப் பெயரான K. P. A. C. லலிதா என்ற பெயராலே நன்கு அறியப்பட்டார்.
அவர் முதன்மையாக மலையாள சினிமா மற்றும் நாடகங்களில் பணியாற்றினார்.
கேரளாவின் காயங்குளத்தில் உள்ள நாடகக் குழுவான கே.பி.ஏ.சி.யுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
 
ஐந்து தசாப்தங்கள் நீடித்த திரை வாழ்க்கையில், அவர் 550 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
 
இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய கூட்டுக்குடும்பம் அவரது முதல் திரைப்படம். 1978 ஆண்டு அவர் திரைப்பட இயக்குனர் பரதனை மணந்தார்.
அவரது சினிமா வாழ்க்கையின் இரண்டாவது சுற்று இயக்குனர் பரதனின் காற்றத்தே கிளிக்கூடு படத்துடன் (1983) தொடங்கியது.
 
நகைச்சுவை குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் (நடிகர்) உடனான அவரது சேர்ச்சை அத்தனை பாந்தமானது, வெற்றி கண்ட கூட்டு , 1986 முதல் 2006 ஆம் ஆண்டுக்குள் கஜகேசரியோகம், அபூர்வம் சிலர், மக்கள் மகாத்மியம், சுப யாத்ரா, மை டியர் மூத்தச்சன், கண்ணனும் போலிசும், அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும், இஞ்சான்கட், போன்ற வெற்றிப் படங்களின் மூலம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
பாவம் ராஜகுமாரன், சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் (1986), பொன் முட்டையிடும் தாராவு (1988), முகுந்தெட்டா சுமித்ரா விளிக்கின்னு (1988), வடக்கு நோக்கிய யந்திரம் (1989), தசரதம் (1989), வெங்கலம் (19819),உள்ளிட்ட விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல கதாபாத்திரங்களை அனாசயமாக செய்தார் KPAC லலிதா அவர்கள்.
 
காட்பாதர் (1991), அமரம் (1991), வியட்நாம் காலனி (1993), பவித்திரம் (1993), மணிச்சித்திரத்தாழ் (1994), ஸ்படிகம் (1995), மற்றும் அன்னியேத்திப் பிறாவு (1997) போன்ற திரைப்படங்களில் அத்தனை மனதில் நீங்காத கதாபாத்திரங்கள் செய்தார் .
 
இயக்குனர் பரதன் இயக்கிய அமரம் (1991) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார் KPAC லலிதா அவர்கள்.
1998 இல், அவரது கணவர் பரதன் இறந்தபோது, ​​அவர் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார், சத்யன் அந்திக்காடு இயக்கிய வேண்டும் சில வீட்டுக்கார்யங்கள் (1999) திரைப்படத்தின் மூலம் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார்.
 
KPAC லலிதாவுக்கு அதன் பின் சாந்தம் (2000), லைஃப் இஸ் பியூட்டிபுல் (2000) மற்றும் வால்கண்ணாடி (2002) ஆகிய படங்களில் அவருக்கு குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் அமைந்தன.
இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய சாந்தம் (2000) படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான இரண்டாவது தேசிய திரைப்பட விருதை வென்றார் KPAC லலிதா அவர்கள்.
KPAC லலிதா அவர்கள்.
 
மலையாள சினிமாவில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் . மலையாளம் தவிர, தமிழில் காதலுக்கு மரியாதை (1997), மணிரத்னத்தின் அலைபாயுதே (2000) மற்றும் காற்று வெளியிடை (2017) உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்தார்.
காதலுக்கு மரியாதையில் ஷாலினியின் அம்மாவாக அவரது நடிப்பு விமர்சகர்களின் வெகுவான பாராட்டைப் பெற்றது.
 
இயக்குனர் பரதனின் வெங்கலம் திரைப்படத்தில் முரளி மற்றும் மனோஜின் தள்ளை (தாய் ) கேபிஏஸி லலிதா, மூத்தஷ்ஷி (பாட்டி ) பிலோமினாவின் பாத்திரங்கள் அபாரமானவை, கூடவே முரளியின் தாய் மாமன்கள் குதிரவட்டம் பப்பு மற்றும் மாலா அரவிந்தன் பாத்திரங்கள் கத்தி மேல் நடப்பவை, அனாசயமாக அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்.
கேபிஏஸி லலிதாவின் இரு கணவர்களான இன்னசன்ட் மற்றும் நெடுமுடி வேணு போட்டோவில் மட்டுமே இருப்பர்,
 
கேபிஏஸி லலிதா தன் மருமகள் ஊர்வசியிடம் வீட்டு புழக்கடையில் வைத்து மருமகளை இளைய மகனுக்கு தரகு செய்யும் காட்சி உண்டு,இவர் அண்ணன் நெடுமுடி வேணுவுக்கு வாழ்க்கைப்பட்ட சிறிது காலத்தில் மைத்துனர் இன்னசன்ட் (நெடுமுடி வேணுவின் தம்பி ) இவரது மாமியார் பிலோமினாவின் துணையுடன் எப்படித் தன்னை வீழ்த்தி பெண்டாண்டார்? என தலை வாரி பின்னிக் கொண்டே சாதாரணமாகச் சொல்வார் ,
 
இது நம் குடும்பங்களில் தவறேயில்லை என நியாயம் கற்பித்து இளைய மகன் உன்னி கிருஷ்ணனையும் கணவனாக ஏற்கும் படிச் சொல்வார் ,எந்த நடிகையும் செய்யத் தயங்கும் தத்ரூபமாக செய்ய இயலாத கதாபாத்திரம் அது,
 
பவித்ரம் திரைப்படத்தில் உன்னிகிருஷ்ணன் (மோகன்லால்) தன் தாய் ஸ்ரீவித்யா வயதான காலத்தில் பெண் குழந்தையை பெற்றுவிட்டு இறந்திருப்பார், சிசுவின் அழுகையை நிறுத்தப் போராடுவார் உன்னிகிருஷ்ணன், அவர் அழும் குழந்தையை சகோதரி புஞ்சிரியிடம் (கேபிஏசி லலிதா) கொண்டு கொடுப்பார், திடீரென குழந்தை அழுகை நின்று விடும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புஞ்சிரியை நாம் பார்ப்போம். புஞ்சிரி அவனிடம் திரும்பி ஏதோ சமாதானம் சொல்ல முயற்சித்து. வார்த்தைகள் கிடைக்காமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாக அழுவார், மனதில் நீங்காத காட்சி அது.இது போல பல படங்களை குறிப்பிடலாம்.
 
காட்சிகளை அழகாக்கி நெகிழ வைக்கும் நடிகை, ஒரு வசனம் கூட இல்லாமல் உங்களை நெகிழ வைப்பார் அவர். தன் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட
KPAC லலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
முகநூலில்…

Geethappriyan Karthikeyan Vasudevan

 
 
 
 
 
 
 
 
 
 
 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.