ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

“தி பெட்” படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் வி.விஜயகுமார் பேசும்போது, “இயக்குநர் மணிபாரதி எனது இருபது வருட கால நண்பர்.. பேச்சுவாக்கில் இந்தப்படத்தை ஆரம்பித்து, நல்லபடியாக முடித்துக் கொடுத்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கோத்தகிரி கடுங்குளிரிலும் கூட பத்து நிமிடம் முன்னாடியே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். சிருஷ்டி டாங்கேவும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.. படம் சிறப்பாக வந்துள்ளது” எனக் கூறினார்.

நடிகை தேவிபிரியா பேசும்போது, “இந்த படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.. என்னுடைய கதாபாத்திரம் குறைவான நேரமே வந்தாலும் போலீஸ் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.. அதிலும் ஜான் விஜய் சாருக்கு அசிஸ்ட்டெண்ட் என்றதும் டபுள் ஓகே சொல்லி விட்டேன்” எனக் கூறினார்.

தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன் பேசும்போது, “என்னுடைய மகா படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். 20 வருடத்திற்கு முன்பு ரோஜாக்கூட்டம் படத்தில் எப்படி பார்த்தோமோ அதே போல எப்போதும் மார்க்கண்டேயன் ஆகவே இப்போதும் இருக்கிறார். ”தி பெட் படத்தின் டீசர் சிறப்பாக வந்துள்ளது. படமும் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என வாழ்த்தினார்.

நாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது, “இந்த படத்தில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நடிக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் குளிர் ஜுரம் கூட வந்துவிட்டது.. அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார்.. அதேபோல படப்பிடிப்பில் நடிகர் ஜான் விஜய் எப்போதும் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டு இருப்பார்.. ஆனால் நானும் பதிலுக்கு அவரை திருப்பி ஓட்டுவேன் என்பதால் இந்த பெண்ணிடம் மட்டும் எந்த வம்பு வைத்துக் கொள்ளக்கூடாதுப்பா என்று பயந்துகொண்டு என் பக்கமே வர மாட்டார்” என புதுத் தகவல் ஒன்றைக் கூறினார். .

இயக்குநர் மணிபாரதி பேசும்போது, “படப்பிடிப்புக்கு முதல் நாள் தான் இந்த படத்தின் கதையை முழுவதுமாக ஸ்ரீகாந்திடம் கூறினேன்.. அவருக்கு சிறிது தயக்கம் இருந்தது.. என்னிடம் சில கரெக்சன்களும் ஆலோசனைகளும் கூட சொன்னார்.. ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் பிடிவாதமாக இருந்து அவரை கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்..

ஒரு வசனத்தைக் கூட மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் அவரை நான் நிறையவே டார்ச்சர் செய்து இருக்கிறேன்.. ஆனால் அவையெல்லாம் படத்திற்காக மட்டுமே.. இருந்தாலும் அதற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்..

ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இந்த இரண்டு வருடமாக கோவிட்டால் எல்லாமே மாறிப்போயிருந்தது..

படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டு நடந்தாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.

முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது.. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது.. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்..

எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது.. ஹேட்ஸ் ஆப் சிம்பு.. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார்.. சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்..

படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும்.

எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.. ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும்..?

அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..

என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை.. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது.. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.. ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்..

அதேசமயம் தி பெட் என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்..

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்து விட்டேன்.. அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.. ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன்.. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார் அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக்கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஆனால் இயக்குனரோ ஸ்வெட்டர் குல்லா என குளிருக்கு இதமாக அணிந்துகொண்டு மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன்.” என அருவி போல தன் மனதில் இருந்ததை எல்லாம் மேடையில் கொட்டி தீர்த்தார் ஸ்ரீகாந்த்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.