சென்ற மாதம் புஷ்பா 1, நேற்று கே.ஜி.எப் 1 திரைப்படங்களைப் பார்த்தேன். வசூலில் சாதனை அப்படி இப்படி என்று பேசப்பட்டதால், இரண்டையும் ஓ.டி.டி யில் பார்த்தேன். அவை ‘ஹீரோ’ படங்கள் என்றார்கள். உண்மை அல்ல. அவை சூப்பர் ஹீரோ படங்கள்.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ என்று காண்பிப்பதற்கு முதுகில் ஒரு போர்வையை அணிவிப்பார்கள். முகத்தில் கவசம் இருக்கும். கையில் ஏதேனும் யாரும் வெல்லமுடியாத ஆயுதம் இருக்கும். இங்கே இப்படங்களின் நாயகர்களுக்கு அதெல்லாம் தேவைப்படவில்லை. சாதாரண, நாம் உடுத்தும் துணிகள் தான்.
கேஜிஎப், புஷ்பா இரண்டிலும் ஒரே கதைதான். இங்குத் தங்கம் அங்குச் செம்மரம். இரண்டிலும் சிறுவயதில் வறுமையில் வாடும் ஹீரோக்கள். ஆனால் அவர்கள் எப்படி சூப்பர் ஹீரோ ஆகிறார்கள் என்பது இயக்குனருக்குத்தான் வெளிச்சம்.
‘தீ’ படத்தில் ரஜினியாக நடிக்கும் சிறுவன் வீசி எறியப்பட்ட காசை வாங்காமல், ‘ஒழுங்கா கையில குடுங்க’ என்று உரிமையுடன் கேட்கும் பொழுது நமக்குச் சிலிர்த்தது.
இங்குச் சிறுவன் வீரவசனம் பேசிக்கொண்டு திமிரும் பொழுது சிரிப்புதான் வருகிறது.
சண்டை என்றால் எம்ஜிஆர் முதலில் இரண்டு அடிகளாவது வாங்குவார். உதட்டோரத்தில் ரத்தம் வந்தவுடன் அவர் கை ஓங்கும்.
இந்த நாயகர்கள் கர்ணன் வழி வந்தவர்கள். வாங்கிப் பழக்கமில்லை. கொடுத்துதான் பழக்கம். ஸ்டாலோன், ப்ரூஸ் லீ போன்றவர்களை இந்த ஹீரோக்களோடு ஒப்பிட்டால் அவர்கள் ஜுஜுபி.
ஒன்றிரண்டு ஆட்களோடு மோதுவது இப்படக் கதாநாயகர்களுக்கு இழுக்கு. ஒரு சமயத்தில் குறைந்தது 20 நபர்கள் இருந்தால் தான் சண்டை போடுவார்கள். அந்த நபர்களிடம் எல்லாவித ஆயுதங்களும் கண்டிப்பாக இருக்கும்.
நம் ஹீரோக்களிடம் இருப்பதெல்லாம் கடவுள் கொடுத்த இரண்டு கைகள் மட்டும் தான்.
சொல்லி வைத்தாற்போல் ஒருவர் பின் ஒருவராக அடியாட்கள் வந்து ஸ்லோமோஷனில் அடி வாங்குவார்கள். பறந்து, கவிழ்ந்து சுழற்பந்து போல விழுவார்கள். சில இடங்களில் ஐந்தாறு பேர் ஒரே நேரத்தில் கிளம்பினாலும் எல்லோரும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற்றவர்கள் இல்லையே! ஆக எப்படியும் ஒரு அடியாள் தான் முன்னாடி வருவார். அவர் அடி வாங்கி விழும்வரை, அந்தச் சில வினாடிகள் அடுத்த அடியாள் காத்திருப்பார். பின்னாலிருந்தோ அல்லது முன்னாலிருந்தோ எதிரிகள் ‘டுப்’ என்று சுட்டு வீழ்த்தமாட்டார்கள். அப்படியே அவர்கள் சுட்டாலும் இவர்கள் ஈசியாக உடம்பை அசைத்துத் தப்பிவிடுவார்கள். பின்னர் இவர்கள் சுடும்போது ஒரே குண்டில் நான்கு எதிரிகள் சாவார்கள்.
நாயகன் சண்டையிட்டுக் களைத்து விட்டான் என்பதன் ஒரே அறிகுறி, நிமிர்ந்து விறைப்பாக நடந்தவர்கள், சற்றே வளைந்து நடப்பார்கள். அவ்வளவுதான். சிலநேரம் சற்றே வியர்த்திருக்கும். இவர்கள் மோதி ஜெயிக்காத ஒரே ஆள் கடவுள் தான். ஆனால் அந்தப் பகுதிகளை இயக்குனர்கள் சாதுரியமாக நீக்கிவிட்டார்கள்.
நண்பன் ஒருவன் சொன்னான், படத்தில் லாஜிக் இல்லாமல் பல காட்சிகள் உள்ளன என்று. நான் ஏற்றுக்கொள்வதாக இல்லை. படத்தில் ஒரு சில காட்சிகள் தான் லாஜிக்குடன் காண்பிக்கிறார்கள். உதாரணம் ஹீரோக்கள் நடந்தால் கால்களைத் தரையில் படும். குனிந்தால் தலை முடி புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப கீழ்நோக்கித் தொங்கும்.
இதில் நடிக்க ஆஜானுபாகுவான உடல் ஒன்றே தேவை. வேறு எதுவும் தேவையில்லை. முழுப் படத்திலும் முகத்தில் இரண்டே இரண்டு முகபாவனைகள் போதும். புருவங்களைச் சுருக்கி மேல் பார்வையுடன் கோபம் கொப்பளிக்கும் முகம். 99% இது போதுமானது. சிறுவயது நினைவுகளைக் கிளறுவதாகச் சில காட்சிகள் வரும். அப்பொழுதும் கூட அதே முகம் தான். என்ன, கண்களில் கொஞ்சம் நீர் இருக்கும். காதலியுடன் இருக்கும் பொழுது கொஞ்சம் அசடு வழிய வேண்டும். அவ்வளவுதான்.
காளிக்கு பலி கொடுப்பது, ஊரிலுள்ள ஜமீன்தார் எல்லாப் பெண்களையும் தான் அனுபவித்த பின் தான் கல்யாணம் முடிக்க அனுப்புவது என்பதெல்லாம் தமிழ் படங்களில் 80 களோடு முடிந்துவிட்டது. அதெல்லாம் இப்பொழுதும் கன்னடப் படங்களில் நடைமுறையில் இருக்கிறது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
எதிரியின் கும்பலில் ஒரு அழகான பெண் இருப்பாள். ‘என்னைப் பற்றி உனக்குத் தெரியாது, என்னிடம் விளையாடாதே’ என்று ஹீரோவிடம் வசனம் பேசுவாள். (இந்த வசனத்திற்கு யாரேனும் காப்புரிமை வாங்கி வைத்திருந்தால், அவர்களுக்கு உலகம் உள்ள வரை பணம் வந்துகொண்டே இருந்திருக்கும். சே.. தவற விட்டுவிட்டார்களே!). அவளின் திமிரை அடக்கி தன் ஆண்மையை நிலைநாட்டுவான் நாயகன் என்ற அரதப் பழசான விதி இங்கும் தவறாமல் பின்பற்றப்பட்டுள்ளது.
அது சரி, இவைகள் எப்படி வெற்றிப் படங்கள் ஆயின?
மக்களுக்கு நிஜ வாழ்வில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை. நம்மால் ஹீரோக்கள் மாதிரி வாழ முடியவில்லையே என்ற ஏக்கம். மனோரீதியாக அவர்கள் மனதை வருடுகிறார்கள் இந்தக் கதாநாயகர்கள். யதார்த்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
பப்ஜி போன்ற ஆன்லைன் துப்பாக்கியுடன் விளையாடும் விளையாட்டுகளில் இஷ்டம் போல் கொன்று தீர்க்கலாம். எப்படிச் சிறுவர்கள் அந்த விளையாட்டிற்கு அடிமை ஆகிறார்களோ அதேபோன்ற ஒரு நிலைதான் இங்கு. பல வருடங்கள் கழித்து இந்த ஃபார்முலாவில் வந்த படங்கள் என்பதால் வெற்றி பெற்றன. இதே அடிப்படையில் இனி அடுத்தடுத்துப் படங்கள் வருமானால் தோல்வி நிச்சயம்.
அதே நண்பனிடம் இந்தப் படத்தின் வெற்றியை பப்ஜி விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினேன். அவன் சொன்னான், “அங்காவது நாம் தப்புச் செய்தோமானால் உயிர் போய்விடும். அதனால் மூன்று லைஃப் கொடுத்திருப்பார்கள். மூன்றையும் தொலைத்தால் ஆட்டம் ஓவர். ஆனால் இங்கோ கதாநாயகனுக்குச் சிராய்ப்பு ஏற்படுவதே அபூர்வம். உயிர் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆக, பப்ஜி விட இது தரும் போதை மிக அதிகம்.
அட ஆமால்ல……
😀😄😂🤣