2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.குறிப்பிட்ட வயது கடந்து கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் சிறு திருத்தங்களுடனான தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’.

தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண வயதில் ஒரு மகனும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் சத்யராஜின் அம்மா கேபிஏசி லலிதாவும் வாழ்கிறார். இந்நிலையில், திடீரென ஒருநாள் ஊர்வசி கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரியவர, தம்பதியினர் அதிர்ச்சியடைகின்றனர். இந்தச் செய்தியை தன் மகன்களிடமும், தன் அம்மாவிடமும் சத்யராஜ் எப்படி கொண்டு போய்ச் சேர்க்கிறார், அதற்கு அவர்கள் எதிர்வினைகள் என்ன? இதைப் பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது ‘வீட்ல விசேஷம்’.

பக்கத்து வீட்டுப் பையன் போல் தோற்றம் தரும் ஆர்.ஜே.பாலாஜி படம் ஆரம்பத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஓடும் வரை நான்ஸ்டாப்பாக சிரிக்க வைக்கிறார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜிக்கும் பணக்கார வீட்டுப் பெண் அபர்ணா பாலமுரளிக்கும் காதல் மலர்கிறது. காதல்ஜோடி கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கும்போது ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவான ஊர்வசி தாய்மை அடைகிறார். அந்த நிகழ்வினால் ஆர்.ஜே.பாலாஜியின் காதல் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் சில தடைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் கடந்து மீண்டும் ஆர்.ஜே.பாலாஜியின் வாழ்க்கையில் புன்னகை மலர் எப்படி மலர்கிறது என்பதை காட்சிக்குக் காட்சி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் தோற்றத்துக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசுகிறார். வசனங்கள் பேச முடியாத இடத்தில் பாடி லாங்வேஜிலும் வசனங்கள் பேச வேண்டிய இடத்தில் முகபாவத்தாலும் பேசி ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார்.

தம்பியும் அண்ணனும் மனம் விட்டு பேசும் அந்த குட்டிச் சுவர் காட்சி, திரையரங்கில் நாயகியுடன் தாய்மையைக் குறித்து விவாதிக்கும் காட்சி என படம் முழுவதும் சிரிப்புத் தோரணங்கள். ஆர்.ஜே.பாலாஜிக்கும், மற்றவர்களுக்கும் திரையில் விட்டுக்கொடுத்து இயல்பாக ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற வகையில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரின் பங்கு சிறப்பாக இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜியின் பங்களிப்பை விவரித்துவிட்டு, அபர்ணா பாலமுரளியின் அழகையும், நடிப்பையும் சொல்லாமல் விட்டால் எப்படி? அபர்ணாவின் அழகு நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும். ஓரிரு காட்சிகளை தவிர்த்து, படம் முழுக்க மெல்லிய புன்னகையுடன் வலம் வருகிறார் அபர்ணா.

படத்தின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் இருக்கிறது. பாட்டியாக வரும் லலிதா, தன் மருமகள் ஊர்வசியைப் பாராட்டும்போது, ‘மாமியாராக அவளை நான் ஒருபோதும் பெருமையாகப் பேசியதில்லை. ஆனால் அவளோ எதிர்வினை ஆற்றாமல் என்னைக் கனிவாகக் கவனித்துக்கொண்டாள்’ என்று பேசும் அந்தக் காட்சி இன்றைய மாமியார்-மருமகள் மறக்கக்கூடாத காட்சி.

கிரிஷ் கோபால கிருஷ்ணன் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. ‘சாரே சாரே… சாம்பாரே…’ பாடல் துள்ளல் ரகம்.

கார்த்திக் முத்துகுமாரின் கேமரா வீட்ல இருக்கிற எல்லோரையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. படம் முழுவதும் ஒளி வெள்ளம், டைட் பிரேம் என்று காட்டியிருப்பது தனிச் சிறப்பு.

அடிதடி இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள், அவமானம் வரும். ஆனால், அவை எல்லாம் நாளடைவில் சரியாகி, வாழ்க்கை விசேசமாகிவிடும் என்று சொல்கிறது ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேசம்’.தியேட்டர்ல விஷேசம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds