நாளை வெளியாகவேண்டிய இயக்குநர் லிங்குசாமியின் ‘வாரியர்’பட பஞ்சாயத்து 12 மணி நேரங்களைக் கடந்தும் முடிவுக்கு வராத நிலையில் அப்படம் ரிலீஸாகும் வாய்ப்பு மங்கியிருப்பதாக விநியோகஸ்தர் தரப்பு பரபரப்பு கிளப்பியுள்ளது.

இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். இப்படி வலுவான கூட்டணி இருந்தும் படத்துக்கு ஏகப்பட்ட சிக்கல்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி அதாவது நாளை திரைக்கு வரவுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிமிடம் வரை அந்தப்பட வெளியீட்டுக்கான வேலைகள் சூடுபிடிக்கவில்லை.

அதற்குக் காரணம், ’உத்தம வில்லன்’ லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் முந்தைய சிக்கல்கள்தாம் என்று சொல்லப்படுகிறது. அந்த சிக்கல்கள் ஒன்றா இரண்டா? பல படங்களில் அகலக்கால் வைத்த லிங்கு அண்ட் பிரதர்ஸ் ஃப்ஃஇன்ஃஃன்சியர்களுக்கு சுமார் எண்பதுகோடி வரை கடன்கொடுக்க வேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவர்கள் நிறுவனத்தில் படம் வெளியாகும் நேரங்களில் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க வேண்டும் என்று ஏற்கென்வே திரையுலகக் கூட்டமைப்பினர் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில் இந்த ‘வாரியர்’ படத்தை இயக்கியதோடல்லாமல் இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையையும் லிங்குசாமி நிறுவனம் பெற்றதால் சிக்கல் உண்டானதாம்.

சிக்கல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இப்பட வெளியீட்டுக்கு முன் ஆறுகோடி ரூபாய் கட்டவேண்டும் என்று சொல்லப்பட்டதாம். அவ்வளவு முடியாது நான்கு கோடி கட்டுகிறோம் என்று லிங்குசாமி தரப்பு சொல்ல அதையும் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டனராம். இதனால் அந்த நான்கு கோடியை இன்றைக்குள் கட்டினால்தான் படம் நாளை வெளியாகும் என்று சொல்கிறார்கள். அதேசமயம், கூட்டமைப்பைத் தாண்டி வெளியிலும் சில கடன்கள் இருப்பதாகவும் அவர்களும் பணம் கேட்டு நெருக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டுக்குப் பிறகு, கதை அரதப்பழசு என்று செய்தி பரவியதால் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை விற்பனையும் மந்தமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சேலம், திருச்சி ஆகிய விநியோகப்பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன்காரணமாக அந்தப்பகுதிகளில் படத்தை வெளியிட்டுக் கொடுக்குமாறு ரெட்ஜெய்ண்ட் நிறுவனத்திடம் கேட்டார்களாம். அதைக்கேட்ட ரெட் ஜெயண்ட் அதிபர் செண்பகமூர்த்தி பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுத்துவிட்டாராம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds