தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.
கேட்பவர்களை சுண்டி இழுக்கும் அற்புதமான தமிழ்ப்பேச்சால் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தனது சொந்தங்களாகக் கொண்டிருந்த அவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர், பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் கணீர் குரல் ஒலித்து வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்ததால் , அவரை பலர் தமிழ்க்கடல் என்று அழைத்து வந்தனர்.
அவரது திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை கண்ணனின் முதல் மகன் ’சுகா’ என்கிற சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாகவும் உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். நெல்லை கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.
தனது தந்தை மறைவை முகநூலில் பகிர்ந்துள்ள சுகா,...’உயிரையும், உடலையும், தமிழையும், தன்மானத்தையும் எனக்களித்த என் தகப்பனார் நெல்லை கண்ணன் அவர்கள் சற்றுமுன் நெல்லையில் எங்கள் இல்லத்தில் காலமானார்கள்…என்று பதிவிட்டுள்ளார்.