சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நிகழ் புதினம் – மதுரை நம்பி.

ஒரு சிறை கைதியின் எழுத்தல்ல இது. ஒரு சிறை காவலரின் 40 ஆண்டு கால பணியின் அனுபவம். 31 தலைப்புகளில் 312 பக்கங்களில் இந்த புத்தகத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

நிகழ்வுகளைப் பதியக்கூடிய பதிவாளனை கடந்து, காரண காரியங்களுடன் விளக்கும் வரலாற்றாலனைக் கடந்து, நிகழ்வுகளின் மாந்தர்களை உணர்வுப்பூர்வமாகப் பேச வைத்து ஒரு கலைஞனாக வெளிப்படுகிறார் மதுரை நம்பி.

இது சிறுகதையா, வரலாற்று நாவலா, புலனாய்வு புதினமா, சுயசரிதையா, என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு படைப்புகள் காத்திரமாக உள்ளது.

சிறைகளைப் பற்றி ஜூலியஸ் பூசிக், ஜார்ஜ் டிமிட்ரோ, காஸ்ட்ரோ, பகத்சிங், சிவவர்மா, ஏ. கே.கோபாலன். வி.பி. சிந்தன், தியாகு போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள் படித்திருந்தாலும் இது மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. சிறையிலிருந்து சமூகத்தை காட்சிப்படுத்தியுள்ளார்.

புத்தகத்தை எடுத்தவுடன் இடைவிடாமல் நான் படித்து முடித்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு இந்த புத்தகமும் ஒரே நாளில் படித்து முடித்த புத்தகமாக மாறிவிட்டது. காரணம் புத்தகத்தின் உள்ளடக்கமும் எழுத்து நடையுமாகும்.

கொடூரமான முறையில் கொலை செய்தவர்கள், உறவினர்களை கொலை செய்தவர்கள் , பிரபலமான ரவுடிகள், ஆட்டோ சங்கர் முதல் மணல்மேடு சங்கர் வரை, சீவலப்பேரி பாண்டி பற்றியும், சீவலப்பேரி பாண்டிய வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய சௌபாவின் சிறை வாழ்க்கை பற்றியும், அரசியல் கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சிவராசனின் கூட்டாளிகள் , இஸ்லாமிய சிறைவாசிகள், திருநங்கைகள், ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டங்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்தில் கைதான ஆயிரக்கணக்கான சிறைவாசிகள், திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என 31 தலைப்புகளில் பல வகைப்பட்ட சிறை கைதிகளையும் பேச வைத்துள்ளார்.

சிறைகளின் அவலங்கள், கைதிகள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள், சிறைச்சாலையின் வாழத் தகுதியற்ற சிறைக்கூடங்கள், சிறைச்சாலையின் சட்ட திட்டங்கள், கைதிகளை பராமரிக்கும் முறைகள், சிறை காவலர்களின் அத்துமீறர்களும், அவர்களின் அவல நிலைமைகளும், செல்வாக்கு படைத்த கைதிகளால் சிறை காவலர்கள் சந்தித்த அவமானங்களையும், என பல்வேறு கோணங்களையும், சொல்ல வந்த விஷயங்களிலிருந்து வழித்தடம் மாறாமல், மையக் கருப்பொருளை ஒட்டியே இலக்கிய ஆற்றலுடன் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.

சிறையில் கம்யூனிஸ்டுகளின் வருகையும், இருப்பும், அவர்களின் சித்தாந்த பயிற்சியும், இதர கைதிகளின் உரிமைக்காக அவர்கள் குரல் எழுப்புவதும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், புத்தகத்தின் ஊடாக வலுவான முறையில் பதிவு செய்திருக்கிறார்.

சிறையிலிருந்த அரசியல் தலைவர் சிறைத்துறை மந்திரியாக மாறி சிறைக்கு வந்ததும், சிறைச்சாலையின் நிலைமைகளை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர் அதே சிறைச்சாலைக்கு அடுத்த சில மாதங்களில் கைதியாக வந்த விஷயங்களும் சுவைபட பதியப்பட்டுள்ளது.

விடுதலையானவர்களுக்கு அடுத்து என்ன நடந்தது? என்கவுண்டர் கொலை செய்யப்பட்டது நியாயமா? தூக்கு மேடைக்கு சென்றவர்கள் பற்றிய சரியா தவறா?

கொலை செய்தவர்கள் குற்றத்தை உணர்ந்து கண்ணீர் விடும் காட்சிகள் போன்ற மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? என எண்ணற்ற கேள்விகளை வாசகன் மனதிலே இறக்கி வைத்து செல்கிறது புத்தகம்.

ஆட்டோ சங்கரின் கடைசி அத்தியாயம் இரக்கம் ஏற்படுவது போன்ற ஒரு மன உணர்வை வாசகன் மத்தியில் ஏற்படுத்தினாலும் ஆசிரியர் தனது கருத்தை வலிந்து திணிக்காமல் அப்படியே முடித்திருப்பது படைப்பின் தர்மத்தை வெளிப்படுத்துகிறது.

மணல்மேடு சங்கரிடம், சீனிவாச ராவ் புத்தகத்தையும் பி எஸ் தனுஷ்கோடி புத்தகத்தையும் சேகுவாரா புத்தகத்தையும் கொடுத்து படிக்க வைத்து என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன்னால் இந்த புத்தகத்தை எல்லாம் நான் முன்பே படுத்திருந்தாள் இப்படி ஆயிருக்க மாட்டேன் என்று அவன் தெரிவித்து இருப்பதை பதிவு செய்தது மட்டுமல்ல, ஒரு சிறை காவலர் சிறை கைதிகளை பாதுகாப்பது மட்டுமல்ல அது ஒரு சீர்திருத்தம் செய்யக்கூடிய இடமாகவும் மாற்றப்பட வேண்டும் என்பதற்கு மதுரை நம்பி உதாரணமாக இருக்கிறார்.

பெரியாரிய கடவுள் மறுப்பாளர்களுடன் நாத்திகவாதிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும், அதாவது இயக்கவியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை மிக எளிய முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைத்திருப்பது அரைத்த மாவையே அரைக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும்.

சிறுபான்மை மதப் பிரிவை சேர்ந்த கைதிகள் சிறையில் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற கைதிகளை எப்படி அவர்களுக்கு எதிராக திருப்புகிறது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி சிறுபான்மை பிரிவை சேர்ந்த நீங்கள் எப்படி மதசார்பற்ற ஜனநாயக சக்தியுடன் இணைந்து நிற்க வேண்டும், உங்களுடைய எதிரி யார் என்பதை அடையாளப்படுத்தி அவர்களை சிந்திக்க வைத்த நிகழ்வுகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னால் சிறைச்சாலைகளின் வேலை பறிபோகும் அபாயம், இடம் மாற்றம், இன்னும் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் செய்து முடித்துள்ளார். அல்ல அரசியல் சித்தாந்தத்தில் தெளிவும் பிடிக்கும் இல்லாமல் இந்த பணிகளை செய்ய முடியாது. உரை நிகழ்த்துவது தான் ஒரே வழி என்பதை கடந்து கேள்வி பதிலாக கலந்துரையாடல் மூலமாக இந்த புத்தகத்தின் ஆசிரியர் நடத்திய விவாதங்கள் பலனை அளித்துள்ளது என்பதற்கு இந்த புத்தகத்தில் நிறைய சாட்சிகள் இருக்கிறது.

மதுரை நம்பி இந்தப் பணிகளால் இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் அடுத்த அடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு இதனை செய்து முடித்துள்ளார்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தில் சிறை நிரம்பி வழிந்ததையும், அதனால் சிறைக்குள் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் இந்த போராட்டங்களுக்கு பின்னால் கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள் என்பதையும், தெளிவுபட பதிவு செய்துள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்களில் 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் முக்கியமானது. தமிழகம் முழுவதும் சிறையில் இருந்தவர்களை பற்றி நான் எழுதிய ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தில் மதுரை சிறை பற்றியும் எழுதி இருந்தேன். தமிழக முழுவதும் இருக்கக்கூடிய சிறைகளைப் பற்றி நான் எழுதியதில், நான் மதுரையைப் பற்றி சுருக்கமாக தான் எழுதியிருப்பேன். ஆனால் மதுரை நம்பி இந்த புத்தகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்கள் மதுரை சிறைச்சாலைக்குள் வந்து நடந்து கொண்ட முறைகளும், அநியாயம் கண்டு சிறைக்குள்ளேயே கொதித்து எழுந்த நிகழ்வுகளையும், விரிவாகவே பதிவு செய்திருப்பது புத்தகத்திற்கும் எனக்குமான தொடர்பை அதிகப்படுத்தியது.

ஒரு புத்தகம் வாசகனின் சிந்தனையை, உளக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதை பொருத்த தான் அந்த புத்தகத்தின் வெற்றி உள்ளது. எத்தனை பேர் வாசித்தார்கள் என்பது அடுத்த விஷயம்.

பொதுவாக நான் படிக்கின்ற புத்தகத்தின் ஆசிரியர்களிடம் பேசும் வழக்கம் எனக்கு இல்லை. இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் தருவாயில் இந்த ஆசிரியரிடம் பேச வேண்டும் என்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தியதனால் அலைபேசி கண்டுபிடித்து அவருடன் எனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டேன்.

நான் பெயரை சொன்னவுடன் அவர் என்னை தெரியுமென்றும், மதுரையில் 95 ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவமனை போராட்டத்தில் உங்களை சந்தித்திருக்கிறேன் என்று சொன்ன பொழுது மகிழ்வாக இருந்தது.

அகத்தியலிங்கம் இந்த புத்தகத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு மதிப்புரை எழுதி இருக்கிறார் என்பதையும் கனகராஜ் அவர்களும் நீங்களும் என்னிடம் பேசி இருக்கிறீர்கள் என்பதை மன நிறைவாக குறிப்பிட்டார்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. பத்திரிக்கையாளர் பெருமாள் அவர்கள் என்னிடம் இந்த புத்தகத்தை கொடுத்து கண்டிப்பாக இதை நீங்கள் படிக்க வேண்டும். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் படித்துவிட்டு கொடுங்கள் என்று கொடுத்துச் சென்றார் நான் படிக்க ஆரம்பித்தவுடன் முடித்துவிட்டு தான் கீழே வைத்தேன்.

நான் பெற்ற இன்பத்தை, அனுபவத்தை நீங்களும் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– அ.பாக்கியம்

நூல் : சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்.
ஆசிரியர் : மதுரை நம்பி
விலை : ரூ.₹ 330/-
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விற்பனை : 24332924
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

bharathiputhakalayam@gmail.com

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds