குறிப்பு: இக்கட்டுரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் 18.11.06 திகதி பதிப்பில் முதலில் வெளிவந்திருந்தது. இக்கட்டுரையை பின்னர் “” புதினம் “” இணையத்தளமும் மறுபிரசுரம் செய்திருந்தது. காலத்தின் தேவையை உணர்ந்து இக்கட்டுரையை நன்றியுடன்(சிறு குறிப்புகள் இணைத்து) இங்கே மறு பிரசுரம் செய்கின்றோம். இக்கட்டுரையின் ஆசிரியர் மு.திருநாவுக்கரசு அவர்கள், வன்னியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆவார்.
———

“சாமானியர்களின் சகாப்தம்” என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம்தான் தமிழீழ மக்களின் பலமுங்கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்துவிட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இதுதான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் “சாமானியர்களின் தசாப்தம்” என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் “திராவிட இயக்கம்” என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கைத்தீவின் அரசியலிலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது, தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது,
சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது,
ஜனநாயகத்தின் தேவையாய், தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டமை தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

சிங்கள அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போதும், உலகிலுள்ள அரசுகள், அரசு(state) என்ற ரீதியில் சிங்கள இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து, இலங்கை அரசுடனும் சமரசப் போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.

இந்த அடிப்படையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் (அமெரிக்கா முதல் வல்லரசுகள் பலவும்) ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் “அரசு”(state), “அரசாங்கம்”(government) என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடைபோட வேண்டும்.

அதாவது உலகில் உள்ள ஆதிக்க-மனோபாவ அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள்(அசௌகரியங்கள்) சில உலகளாவிய முதலாளித்துவ ஏகபோக அரசுகளுக்கு இருந்தாலும், (பூலோக இருப்பிட அரசியல் நோக்கில்) இலங்கை அரசு தங்களுக்கு அவசியம் என்றதன் அடிப்படையிற்தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.(உலக வங்கி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்ததை இங்கே நினைவு கூருங்கள்)

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பதற்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும்தான். முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.(முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிறுத்தக் கோரி முத்துக்குமார் முதல் நான்கு பேர் தீக்குளித்தே இறந்த வரலாறும் இருக்கிறது௰

சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் இன்றும் தமிழ்நாட்டு மக்களே உள்ளனர். அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.
புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாய்க்கும்.
இது தான் எளிமையான சூத்திரம்..

முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக சிறிது விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு பிரிக்கப்படாத “” ஓர் அரசாக “”(a state) இருப்பது இந்தியாவுக்கு இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.

அது ஒரு புறமாக இருக்கட்டும்.

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்துகொண்டு இலங்கையின் “ஒருமைப்பாட்டை” ஆதரித்து சிங்கள இனவாதத்திற்கு(இப்போதுவரை) உதவுகின்ற போதிலும், புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாடு கிளர்ந்து எழும் போது, அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதல் அம்சம், ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு எழுச்சி பெறும் போது, அதுவும் வெகுமக்கள் திரண்டெழுந்து போராடும் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது, புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது. (பஞ்சாப் விவசாயிகளின் வெகுஜனப் போராட்டம் சமீபத்திய ஒரு உதாரணம்.)

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம், மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே(கூட்டாட்சி) இனிமேல் பதவிக்கு வரலாம். இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.(பாஜக 2024ல், தமிழக அரசியலில், பெரும்பான்மை பலத்துடன் வேறு எந்தக் கட்சியும் வரமுடியாமல் செய்ய செய்யும் முயற்சிகளை கவனியுங்கள்.)

ஆதலால் தமிழக மக்கள்தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஏனெனில், வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன்(சீனா..) சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.

தற்போது, இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு, கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசங்கள் தமிழ் மக்களின் கையில் இல்லை என்பதால் சிங்கள உயர்குழாம் இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.

இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு முதலில் ஆபத்து உருவாவதுடன், அதன் வழியே முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால் தமிழீழ மக்கள் நலனும், தமிழீழப் பகுதியும்,  இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திரம் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத்தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.

தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவாக இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழகத்தின் ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசும் தமிழீழத்தை நோக்கி தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம். ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் தமிழ்நாட்டில், சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே, உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலுங்கூட. தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும். சிங்கள உயர்குழாத்தின் (பௌத்தவாத ராஜபக்சேக்கள் கும்பலின்) இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் கூட இனவாதத்திலிருந்து விடுபட்டு, புது வடிவாய் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும், அவற்றின் கட்சி அரசியலுக்குள்ளும் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை. தமிழ் மக்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டுவர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. ஈழத் தமிழரின் வழிமுறையெல்லாம், பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் அனுகி , ஈழ ஆதரவு கோரி நிற்பதுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

ஒரு நாள், மாபெரும் மக்கள் அலை ஈழத்தை நோக்கி எழும் போது, கட்சிகளும் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும். ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்குள் அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத் தொடங்கியுள்ளது. அதனை தமிழீழ மக்கள் பற்றிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதனைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியலில் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப் பொருளாதார ஒழுங்குதான். உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே, உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல, தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே, உலகம் நாடுகளாக அன்றி, சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது. ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தையை மையப்படுத்திய கூட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன், ஒரு அரசென்ற(state) வகையில் சமரசமான ஒரு கூட்டை மேற்கொண்டுள்ளன. இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.

நாடுகளின் கொடிகளின் நிறம்தான் வேறு. கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை ஈழத் தமிழருக்கு அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகளாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே, தமிழ்நாட்டு மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம்தான், அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும். தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை – புதுடில்லி – உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது. அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும், மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது. இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமாணத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை தமிழ்நாட்டில் ஆரம்பித்து, சென்னை – புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும். அதற்கான ஆரம்பத்தை தமிழ்நாட்டில் உருவாக்குவதே ஈழத் தமிழரின் செயல்பாடாக இருக்க வேண்டும்.

— மு.திருநாவுக்கரசு. 18.11.06

(ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு எங்கள் நன்றிகள்)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds