அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் அறிமுக நாயகன் திரவ் கதாநாயகனாகவும் இஸ்மத்பானு கதாநாயகியாக நடித்திருக்கும் படம் வெப்பம் குளிர் மழை.இப்படத்தில், இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
’குற்றம் கடிதல்’ படத்திற்கு இசையமைத்த சங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.இப்படத்தை ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருப்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரவ்.
இந்நிலையில் இப்படம் குறித்து படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான திரவ் கூறியதாவது….
இந்தக்கதை என்னிடம் வந்தபோது கதை பிடித்து தயாரிக்க முடிவு செய்தேன்.இந்தப்படத்தில் நடிக்க இரண்டு கதாநாயகர்களை நான் பரிந்துரை செய்தேன்.அவர்களிடம் இயக்குநர் கதை சொன்னார்.அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், அவர்களுடைய தேதி சரியாக அமையாததால் அவர்களால் நடிக்க முடியவில்லை.அப்போது தான் இயக்குநரிடம் நான் நடிக்கட்டுமா? என்று கேட்டேன். ஆனால், அவர் தயங்கினார். உடனே படம் தொடர்பான இரண்டு காட்சிகளை நடித்து குறும்படமாக எடுத்து அவருக்கு அனுப்பினேன். அதைப் பார்த்து தான் அவர் சம்மதம் தெரிவித்தார்.
நான் கிஷோர் சாரை வைத்து ‘மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறேன்.அந்தப் படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், இந்தக் கதை என்னிடம் வந்தது. கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. குறிப்பாக என் உறவினர்களில் சிலர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்.மற்றபடி நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரிக்கவில்லை,
படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று.குழந்தையின்மை என்பது தனிமனிதச் சிக்கல் அல்ல.சமூகம் சார்ந்த சிக்கல்.அதில் சம்பந்தப்பட்டவர்களைவிட சுற்றியிருப்பவர்கள் அதைப்பற்றி பேசிப் பேசியே அதைப் பெரிய சிக்கலாக உருமாற்றி, சம்மந்தப்பட்டவர்களை மனதளவில் உடைந்துபோகச் செய்துவிடுகிறார்கள்.அப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும் நாயகன், நாயகி வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு படத்தை எடுத்திருக்கிறோம்.நிச்சயம் இந்தப் படம் மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்தும் என்றார்.
நாயகி இஸ்மத் பானு படம் பற்றிக் கூறியதாவது….
நான் மீடியாவில் தான் பணிபுரிந்தேன். பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினேன். இந்தப் படத்தில் நாயகி என்று சொல்வதைவிட பாண்டி என்ற கதாபாத்திரமாகத் தான் நடித்திருக்கிறேன். என்னை ஒப்பந்தம் செய்யும் போதே, கணவன் – மனைவியாக நடிக்கும்போது நெருக்கமான காட்சிகள் இருக்கும் சம்மதமா? என்று கேட்டார்கள். நெருக்கம் என்றதும் வேறு விதமாக நினைக்க வேண்டாம், தம்பதிக்குள் இருக்கும் அந்நியோன்யம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் முதலிலேயே அதைச் சொல்லிவிட்டார்கள். அதன்படி, நானும் நடித்திருக்கிறேன்.உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து படம் குறித்துக் கூறியதாவது…..
நம் சமுதாயத்தில் ஒரு தம்பதியினருக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் அது பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தை பிறப்பு நம் கையில் இல்லை என்றாலும் அதைப் பெரிய சிக்கலாக சமுதாயம் பார்க்கிறது.அது ஏன்? என்ற கேள்வி தான் இந்தப் படத்தின் கதை.இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.அதேபோல் படமும் எல்லாத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மாற்றமில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படம் மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.