தங்கலான் கோலார் தங்க வயலை பற்றியதி என்ற உடனேயே பலரும் கே.ஜி.எஃப் அளவிற்கு பிரமாண்டமாக சினிமாட்டிக்காக எதிர்பார்த்து போய் ஏமாற்றமடைகின்றனர். தங்கலான் இன்னும் நூறு வருடங்கள் முந்தையது. கொஞ்சம் சிக்கலான கதையமைப்பு இருப்பதால் படத்தின் கதைக்களம், சூழல், தொழில்நுட்பம் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொண்டு தியேட்டருக்குச் செல்வது நல்லது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் விருப்ப படமாக அமையுமா என்ற கேள்விகளும் விவாதங்களும் இணையத்தை ஆட்கொண்டு வருகின்றது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கம் போல் பா.ரஞ்சித் படங்களுக்கே உரித்தான தீவிர அரசியல் உரையாடல் தங்கலான் படத்தை பற்றியும் சோஷியல் மீடியாவை ஆட்கொண்டு விட்டது. படத்திற்கு நிறைய பாசிட்டிவ் ஆன கருத்துக்கள் வந்த போதும், நிறைய எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. கிட்டதட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நடந்தது போல, தங்கலான் படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் வைப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கவே செய்கின்றன. அதனால், கீழ் கண்ட சில விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு சென்றால் நிச்சயம் தங்கலான் உங்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.

1. ஆற்காடு பாஷை‌ :-
தங்கலான் படத்தின் கதைக்களம் வட ஆற்காடு மாவட்டத்தில் நடப்பது போல் இருக்கிறது. ஆற்காடு, வேலூர், வாலாஜா, ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம், குடியாத்தம், அரக்கோணம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகள் தான் வட ஆற்காட்டில் இருக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தொடங்கி வேலூர் வரை ஏன் தருமபுரி மாவட்டம் வரையுள்ள ஆற்காடு பகுதிகளில் ஒரு வித சிலாங் பேசப்படும். எப்படி மதுரை வட்டார வழக்கு, நெல்லை வட்டார வழக்கு, கொங்கு வட்டார வழக்கு என்று உள்ளதோ அதேபோல் தான் இதுவும். இங்கு என்ன சிக்கல் என்றால் மதுரை வட்டார வழக்கையொட்டி எண்ணற்ற படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஏன் கடந்த சில 10 வருடங்களாக தமிழ் சினிமாவை மதுரை வட்டார வழக்கு ஆண்டது என்றே சொல்லலாம். இப்படி கொங்கு, நெல்லை வட்டார வழக்குகள் எல்லாம் தமிழ் சினிமாவில் அதிகம் பரிச்சயம். ஏன் அசுரனில் கூட கோவில்பட்டி வட்டார வழக்கை பயன்படுத்தி இருப்பார்கள். இந்த வரிசையில் வட சென்னையின் வட்டார வழக்கு கூட அதிகம் பழக்கமாகி விட்டது. ஆனால், வட மாவட்டங்களின் வட்டார வழக்கு இன்னும் சினிமாவில் அதிகம் பரிட்சயம் ஆகவில்லை என்றே சொல்லலாம். அதுவும், 150 வருடங்களுக்கு முன்பு என்றால் சொல்லவா வேண்டும். அதனால், ஆற்காடு பகுதிகளின் வட்டார வழக்கை மனதில் வைத்துக் கொள்ளவும்.

2. லைஃப் சவுண்ட் :-
தங்கலான் படத்தின் மிகப்பெரிய சிக்கலாக சொல்லப்படுவது, பேசுவது சரியாக கேட்கவில்லை என்பது. புரியவில்லை என்பது மொழி சார்ந்த பிரச்னை. கேட்கவில்லை என்பது ரெக்கார்டிங் பிரச்னை. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லைவ் சவுண்டில் படமாக்கப்பட்டுள்ளன. அதாவது, டப்பிங் இல்லாமல் நேரடியாக படப்பிடிப்பு தளத்தில் வைத்து வசனங்கள் பேசி எடுக்கப்பட்டவை. அதனால் அதன் தன்மையில் தான் படம் இருக்கும். உதாரணத்திற்கு கூழாங்கல் படத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால், டிராமட்டிக் தன்மை குறைவாகவே இருக்கும். சோர்வு தட்டுவது போல் இருக்கும். உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இது பழக்கப்படாத ஒன்று. அதனால், இதனையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய நேரங்களில் அதிக சத்தமாகவும் இருக்கிறது..

3. மேஜிக்கல் ரியலிசம் :-
படத்தில் சில இடங்களில் என்ன நடக்கிறது என்பதே புரியாதது போல் இருக்கும். அது நிஜமா இல்லை கனவா? என்பது போல் இருக்கும். ஒரே நேரத்தில் இருப்பது போல் இருக்கும் ஆனால் இல்லாதது போல் இருக்கும். அதற்கு காரணம் இந்தப் படத்தை மேஜிக்கல் ரியலிசம் பாணியில் எடுத்துள்ளார் இயக்குநர். படத்தில் தொடக்கத்தில் இருந்தே மிக எதார்த்தமாக காட்சிகளுக்கு இடையிடையே மேஜிக்கல் பாணியில் மிரட்டி இருப்பார்கள். அவையெல்லாம் ஒருவகையில் மனதின் நீட்சி. உள்ளுணர்வு என்று வைத்துக் கொள்ளலாம்.. க்ளைமேக்ஸில் உச்சபட்சமாக இருக்கும். அதனால், நின்று நிதானமாக பார்த்தால் புது அனுபவமாக இருக்கும்.

4. கே.ஜி.எஃப் முன் கதை :-
படத்தின் மிகப்பெரிய சிக்கலே ஏற்கனவே நாம் கேஜிஎஃப் என்ற பிரமாண்ட படத்தை பார்த்து இருக்கிறோம் என்பதுதான். தங்கலான் கோலார் தங்க வயலை பற்றி என்றது உடனே கே.ஜி.எஃப் அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால், நாம் பார்த்த பிரஷாந்த் நீலின் கே.ஜி.எஃப் என்பது 1960-80 களில் நடக்கும் கதை. ஆனால், தங்கலான் படத்தின் கதை 19 ஆம் நூற்றாண்டில் நடக்கிறது. கே.ஜி.எஃப்-க்கு அதற்கு முன்பே நீண்ட வரலாறு இருந்தாலும் பிரிட்டீஷ் காலத்தில் தான் மிகப்பெரிய முயற்சி நடத்தப்பட்டது. பல பிரிட்டீஷ்க்காரர்கள் பேராசையில் ஏராளமான பணத்தைக் கூட இழந்து இருக்கிறார்கள். கிட்டதட்ட புதிய இந்தியாவின் தொடக்க காலத்தில் நடந்தது இது.

கே.ஜி.எஃப் படத்தில் நாம் பார்த்தது மிகப்பெரிய தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் தங்கம் எடுப்பது. ஆனால், தங்கலான் படத்தின் கதை என்பது வெறும் கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகளுடன் மனிதர்களின் உழைப்பை மட்டுமே கொண்டு நடத்தப்பட்ட முயற்சிகளின் காலம் அது. அதனால், தங்கத்தை கண்டுபிடிப்பதற்கான பயணமே முதன்மையானது. பரதேசி படம் போல, மக்கள் எப்படி சமவெளி நிலத்தில் இருந்து மலைப்பிரதேசங்களுக்கு தேயிலை எடுக்கப்போகிறார்களோ அதேபோல் தான் இதில் தங்கம் தேடப்போகிறார்கள்.

5. நிலம், வர்ணம் போன்ற பல தத்துவார்த்த உரையாடல் இருக்கும்..
படத்தில் நாகர்கள் வரலாறு, வர்ணம், சாதி பற்றிய விவாதம், சிறுதெய்வ வழிபாடு, புத்தர் அடையாள அழிப்பு, ராமானுஜர் சமத்துவம் என பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். மூன்று விதமாக கால கட்டத்தில் நடைபெறும். அதனால், பின்னணி புரிந்தவர்களுக்கு நன்றாக கனெக்ட் ஆகும். அதேபோல், பின்னர் புரிந்து கொள்ள முயன்றால் நல்ல கருத்துரையாடல்களுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக தமிழ் சூழலில் நல்ல தத்துவ உரையாடல்களுக்கு வித்திடும்.

சார்பாட்டா பரம்பரை படத்தைப் போன்று எளிதில் ரீச் ஆகும் ஆனால் டெத்ப் ஆன கண்டெண்ட் அல்ல தங்கலான் திரைப்படம். இது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். நிச்சயம் விஷ்வல்லின் கொஞ்சம் சொதப்பல் இருக்கிறது. கிட்டதட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் போன்றதே. அதனால், சில விஷயங்களை பொறுத்துக் கொண்டால் நிச்சயம் தங்கலான் உங்களை மகிழ்விக்கும்.

நன்றி:- புதிய தலைமுறை

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.