அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’.
1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை.
1900 ஆம் ஆண்டு ஓர் உருவான ஓர் அதிசய விளக்கை, மக்கள் நலன் பொருட்டு மன்னரிடமிருந்து பறிக்கிறார் டொவினோ தாமஸ். அதனால் அவருக்குத் திருடன் என்கிற பட்டம்.அதன் பாதிப்பு அவர் மகன், பேரன் ஆகியோர் வரை தொடருகிறது.
பேரன் காலத்தில் அந்த விளக்கைத் திருட நினைப்பவர் அந்தப் பேரனை வைத்தே செயல்படுத்த முனைகிறார்.
அந்த எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்ன நடந்தது? என்பதையெல்லாம் விவரிப்பதுதான் படம்.
அப்பா, மகன், பேரன் ஆகிய மூன்று வேடங்களையும் ஏற்றிருக்கிறார் டொவினோ தாமஸ். புதிதாகப் பார்ப்போருக்கு மூன்றும் ஒருவரே என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு தோற்றங்களில் வேறுபாடு.நடிப்பிலும் சிறப்பு.ஒட்டு மொத்தப் படத்தையும் தன் நடிப்பினால் இலகுவாக்கியிருக்கிறார்.
கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி என மூன்று கதாநாயகிகள். டொவினோ தாமஸ் ஒருவரே மூன்று வேடங்களில் நடிக்கலாம்.அம்மூன்று வேடங்களுக்கும் வெவ்வேறு நாயகிகள் இருப்பதுதானே அவருக்குப் பெருமை. படத்துக்கு ந்ல்லது. அந்த நாயகிகளும் குறைவின்றி நடித்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
பசில் ஜோசப், ரோகினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ் உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள்.வில்லத்தனத்தால் கூடுதல் கவனம் பெறுகிறார் ஹரிஷ் உத்தமன்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பூவே பூவே உள்ளிட்ட பாடல்கள் சுகம்.பின்னணி இசையும் காலகட்டங்களை வேறுபடுத்திக்காட்ட துணை நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான்,சிறந்த காட்சியனுபவம் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார்.அது பலனளித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சமீர் முகமத், கொஞ்சம் சறுக்கினாலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்ஙகூடிய திரைக்கதையை அழகாகத் தொகுத்து வலிமை சேர்த்திருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோர் உழைப்பு டொவினோ தாமஸுக்கு பெரும்பலம்.
ரமேஷ், அகரன் மற்றும் கைலாஷ் ஆகியோரது வசனங்கள் நன்று.வெகுமக்கள் மனநிலையை பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியிருக்கிறார்.பாட்டியை கதை சொல்ல வைத்து படத்தைத் தொடங்குவது நல்ல உத்தி.எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற சுதந்திரம் இருந்தும் வெகுமக்கள் பார்வையில் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
காலங்கள் நவீனமாகலாம் கருத்துகள் நவீனமாகவில்லை என்பதை அனைவரும் உணரும்படி சொல்லியிருப்பது அவருடைய நேர்ததியான திரைமொழிக்குச் சான்று.
ஏ ஆர் எம் மக்கள் மனங்களைத் திருடி விட்டான்.
– இளவழகன்