முதல் பாகத்தில் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து செம்மரக் கடத்தல் கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பார் புஷ்பா.இரண்டாம் பாகத்தில்,அவருடைய் தலைமைப் பொறுப்பைப் பறிக்க எதிரிகள் திட்டமிட அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதைச் சொன்னதோடு நில்லாமல் ஓர் அற்பக் காரணத்துக்காக அரசியலில் தலையீடு,அடையாளப் பெயருக்காக குடும்பத்தினரோடு உணர்ச்சிப் போராட்டம் ஆகியனவற்றைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
ஒற்றைக்காலில் கயிறு கட்டி தலைகீழாகத் தொங்கும் நிலையில் அறிமுகமாகிறார் அல்லுஅர்ஜுன்.அதிலிருந்து அவருடைய ராஜாங்கம்தான்.பெண் வேடமிட்டு நடனம் மற்றும் சண்டை இரண்டு கைகளையும் கால்களையும் கட்டிப் போட்ட பின்பும் பறந்து பறந்து வாயாலேயே எதிரிகளின் குரல்வளையைக் கடித்துத் துப்பும் சண்டை ஆகியன மட்டுமின்றி மாநில முதலமைச்சரை மாற்றுவது மாலத்தீவில் வியாபாரம் பேசுவது இலங்கைக் கடற்கரையில் கட்டை இறக்குவது ஜப்பான் துறைமுகத்தில் சண்டை செய்வது என ஏகப்பட்ட மிகுதிப்பாடுகள்.
எல்லா இடங்களிலும் பொருத்தமாக நடித்து கைதட்டல் பெறுகிறார் அல்லுஅர்ஜுன்.மனைவியிடம் மடங்கும் காட்சிகள் அழகு. பகத்பாசிலிடம் போட்டி போட்டு நடித்திருப்பது அருமை.
நாயகி ராஷ்மிகா,அழகுப்பதுமையாக வந்து பாடல்களில் கவர்ச்சி காட்டுவதோடு நில்லாமல் கணவனுக்காக அவர் குடும்பத்தாரிடம் வெடிக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் எனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று காட்டியிருக்கிறார்.
வரிசையாகத் தோல்விகளையே சந்திக்கும் கதாபாத்திரம் என்றாலும் தன் நடிப்பால் எல்லா இடங்களிலும் வரவேற்பைப் பெறுகிறார் பகதபாசில்.அதுவும் புஷ்பாவை பிரதிபலிக்கும் காட்சிகள் சிறப்பு.
முதலமைச்சராக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன்,அடுத்த முதலமைச்சராகும் ராவ் ரமேஷ், செம்மரக்கடத்தல் கூட்டத்தின் முன்னாள் தலைவர் சுனில் அவர் மனைவி அனுஷ்யா,ஒன்றிய அமைச்சராக வரும் ஜெகபதிபாபு ஆகியோர் அவரவர் வேடத்துக்குத் தக்க நடித்திருக்கிறார்கள்.
ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஸ்ரீலீலா.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.சாம்,சி.எஸ் பின்னணிஇசையில் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக் உழைப்பில் எல்லாக் காட்சிகளுமே சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இயக்குநர் சுகுமார்,முதல்பாகத்தின் பெரு வெற்றி காரணமாக எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.பலவீனமான அடிப்படை மிகையான காட்சிகள் ஆகியனவற்றால் போய்க்கொண்டே இருக்கும் படம் அயற்சியை ஏற்படுத்துகிறது.
– அன்பன்