அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி.
படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர் தற்கொலை செய்துகொள்கிறார்.இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு சடலத்தைத் தூக்க முடியாத அளவு கனம்.பலமுறை முயன்றும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தச் சடலம் எழுந்து உட்காருகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக் கொண்டதற்கே நாயகி ரூபா கொடுவாயுரை பாராட்டலாம்.எளிய கிராமத்துப் பெண் தோற்றத்தில் இருந்தாலும் எல்லோரையும் ஈர்க்கிறார்.பெரும்பகுதி சடலமாக நடிக்கும் வேடத்தில் சரியாகப் பொருந்தி வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத் நன்றாக இருக்கிறார்,கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அப்பாவாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா உள்ளிட்டோர் அசலான கிராமத்து மனிதர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.அது படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.
ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் இனிமை.பின்னணி இசை திரைக்கதைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.
சுஜித்சாரங்கின் ஒளிப்பதிவுக்கான களம் குறைவு என்றாலும் காட்சிகளில் நிறைவு.தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பில் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் ஓடுகிறது.
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எழுதி இயக்கியிருக்கிறார்.நாயகன் நாயகிக்கான காதல் காட்சிகளில் இனிமை சேர்த்திருக்கிறார்.மையக்கதையில் இருக்கும் அழுத்தத்தை அலுப்பின்றி உணரும் வகையில் காட்சிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்.நாட்டில் நிலவும் முக்கியமான மோசமான விசயங்களை வசனங்களில் மட்டுமின்றி கண்டுணரும்படியும் அமைத்திருப்பது அவருடைய பலம் எனலாம்.
யாரும் எதிர்பாராததை இறுதியில் வைத்திருப்பது சிறப்பு.
– இளையவன்