1966ல் ஹாலிவுட்டில் இதே பெயரில் ஒரு ஆக்சன் திரைப்படம் வந்திருக்கிறது. க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்த அந்தப் படத்தை 1995ல் தொழில்நுட்பம் மூலம் மெருகேற்றி தெளிவான பிரிண்ட்டில் வெளியிட்டார்கள். தமிழ்நாட்டிலேயே பல தியேட்டர்களில் அந்தப் படம் நூறு நாட்கள் ஓடியது. அந்தப் படத்திற்கும் அஜீத்தின் இந்த குட் பேட் அக்லி படத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமேயில்லை.
மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் அஜீத், திருமணமாகி குழந்தை பிறந்ததும் ரவுடித் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவெடுத்து சிறைக்குப் போகிறார்.அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார்.ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார்.
அவர் சிறைப்படக் காரணம் என்ன? அதன்பின் நடந்தவை என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் குட்பேட்அக்லி.
கண்களில் குளிர்கண்ணாடி, கோட் சூட் முதல் பூப்போட்ட சட்டைவரை விதவிதமான உடைகள்,கை நிறைய துப்பாக்கிகள்,வாய் நிறைய வசனங்கள் என தன்னுடைய இரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அஜீத்.வில்லன்களிடம் வீராப்பு காட்டுவதும் மனைவியிடம் பம்முவதும் மனைவி முன்னே இன்னொரு பெண் கொஞ்சிப்பேசும்போது நெளிவதும் என நடிப்பிலும் குறை வைக்கவில்லை.
த்ரிஷாவுக்கு பொறுப்பான தாய் மற்றும் ஊரையே மிரட்டும் கணவனை தான் மிரட்டும் வேடம்.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். இதிலென்ன பன்மை? இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.அவரை அறிமுகம் செய்வதே அட்டகாசம்.ஒத்த ரூபா தாரேன் பாடலுக்கு இளம்பெண்களுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்.அதன்பின் தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா பாடலில் பிரியாவாரியருடன் நடனமாடி வரவேற்புப் பெறுகிறார்.படத்தில் எல்லோரும் அஜீத்தைப் புகழ்ந்து பேசிக்கொண்டேயிருக்க இவர் மட்டும் அவன் இவன் என்று பேசுகிறார்.
பிரபு,பிரசன்னா,யோகிபாபு,ரெடின்கிங்ஸ்லி,சுனில்,டினு ஆனந்த்,ராகுல்தேவ்,ஜாக்கி ஷ்ராப்,டாம் ஷைன் சாக்கோ என படத்தில் நிறைய நடிகர்கள்.எல்லோருக்கும் அஜீத்தைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதுதான் வேலையே.அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் வருகிறார்.அவர் வரும் காட்சிகளும் வசனங்களும் இரசனை.
அபிநந்தன் ஒளிப்பதிவில்,காட்சிகளைக் காட்டிலும் அஜீத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் உருவான பாடல்களைக் காட்டிலும் படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பழைய பாடல்களுக்கு அதிக வரவேற்பு.
படத்தைத் தொகுத்திருக்கும் விஜய் வேலுக்குட்டி இன்னும் கொஞ்சம் கூடுதல் கத்தரி போட்டிருக்க வேண்டும். சண்டைப் பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் தன் பணியை இன்னும் குறைவாகச் செய்திருக்க வேண்டும்.
அஜீத் இரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் இயங்கியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன்.கமல் பட பாட்டு, விஜய் பட வசனம், கேஜிஎஃப் பட வசனம் மற்றும் அஜீத்தின் முந்தைய பட பாடல் மற்றும் காட்சிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
– கதிரோன்