இலங்கையில் உருவாகிய பொருளாதார நெருக்கடியினால் மிகவும் துன்பப்பட்டு வரும் சசிகுமார் தன் குடும்பத்துடன் ராமேஸ்வரம் வழியாக படகில் தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றார்.
ஆரம்பத்திலேயே அவர்களைப் பிடித்து விடும் ஒரு போலீஸ் அதிகாரி அவர்களது நிலையைப் பார்த்து அவர்களை தப்பித்துப் போக விடுகிறார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சகஜமான வாழ்க்கையை வாழலாம் என முயற்சி செய்கிறார்கள். ஆதார், வாக்காளர் அட்டை எல்லாம் ரெடி செய்து தமிழ்நாட்டு அடையாளங்களை உருவாக்கி வாழ நினைக்கிறார்கள். நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வர அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
அயோத்தி படத்துக்குப் பிறகு மீண்டும் மனிதத் தன்மையை பேசும் படத்தில் நடித்திருக்கிறா் சசிகுமார். நீண்ட நாட்களுக்குப் பின் சிம்ரனுக்கு மிக வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வசந்தியாகவே தன்னை உணர்ந்து நடித்து அசத்தியிருக்கிறார். மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் என இருவரது நடிப்பும் நகைச்சுவைக்கு அஸ்திவாரம் போடுகிறது. அதிலும், என் பேர் ஜோசப் குருவிலா என கமலேஷ் சொல்லும் போது தியேட்டரில் சிரிப்பலைகள்.
மனிதம், ஈழத்தமிழர் வாழ்வு நிலை, ஈழ அரசியல், தமிழகத்தின் பாராநிலை என பல்வேறு விஷயங்களையும் இயக்குநர் அபிஷன் வலுவான திரைக்கதை, கூர்மையான வசனங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. கதையின் போக்கிற்கு வலு சேர்க்கும் இசை. பாடல்கள், பின்னணி இசை என எல்லாமே கச்சிதம். காவல்துறை அதிகாரியாக வரும் ரமேஷ் திலக்கின் நடிப்பு அருமை. அரவிந்த் விஸ்வநாதனின் அழகான ஒளிப்பதிவு மற்றும் பரத் விக்ரமின் எடிட்டிங்கும் கூடுதல் பலம்.
காமெடியாக சொல்ல வேண்டும் என்பதால் சசிகுமார் கதாபாத்திரத்தை மட்டுமே முன்னிறுத்தி கதை நகர்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையை தமிழர்கள் உணர்வு பூர்வமாக அரசியல் பூர்வமாக பார்க்காமல் வெறும் தொப்புள்கொடி உறவு என்கிற இரக்கப் பார்வையோடு, அங்கே நடந்த துயரங்களுக்கு உச்சு கொட்டிவிட்டு, அப்படியே ஜாலியாக மானாட மயிலாட பார்த்ததால் , இக்கதையும் சீரியசாக பேசாமல், காமெடியாகவே சொல்லப்பட்டு அதே நேரம் சிந்தியுங்கள் மக்களே என்றும் வசனங்களில் சொல்லாமல் சொல்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நகைச்சுவைப் படம். அத்தோடு சிந்திக்க மனமுள்ளவர்கள் சிந்திக்கவும் விதைகளை நட்டு வைக்கிறது.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் விகடன் குழுவின் வீடியோ விமர்சனம் கீழே..
https://www.facebook.com/share/v/12JazdFrL9X/