தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ.
சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும் சூர்யாவுக்கு சிரிப்பே வராது என்கிற கதாபாத்திரம்.அதிலும் சிறப்பு.திருமண வைபவத்தில் உற்சாகமாக நடனமாடும் நேரத்திலும் அவர் முகத்தில் சிரிப்பில்லையே என்றெழுந்த கேள்விகளுக்கு விடை படத்தில் இருக்கிறது.
சிரிக்கமட்டும்தான் மாட்டார்.ஆனால் துள்ளல் உற்சாகம் அதிரடிச் சண்டைகள் என அமர்க்களப்படுத்தியிருக்கிறார் சூர்யா.சிரிப்பதற்காகப் பாடுபடும் காட்சியில் நன்றாக நடித்து கலங்க வைக்கிறார்.நாயகி பூஜா ஹெக்டேவுடனான காட்சிகளில் வேறொரு சூர்யாவைக்காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகி பூஜாஹெக்டே பளபளப்பு இல்லாத எளிய அழகு.வழக்கமான இளம்பெண்களைப் போலில்லாமல் ஆழமான அழுத்தமான கொள்கை கொண்டவர் ஆனால் அதை மிக இலகுவாக கனம் குறையாமல் வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.சவாலான இந்தப் பாத்திரத்தில் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சூர்யாவின் வளர்ப்பு அப்பாவாக வரும் ஜோஜுஜார்ஜ் படம் முழுக்க பட்டாசாய் வெடித்திருக்கிறார்.அந்தமான் தீவுகளில் ஒன்றின் அரசராய் நடித்திருக்கும் நாசர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொடூர வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.நாசர் மகனாக நடித்திருக்கும் விது சிறப்பாக நடித்து நம்மைக் கோபப்பட வைக்கிறார்.சிரிப்பு மருத்துவராக வரும் ஜெயராம் சோதிக்கிறார்.
வடக்கத்தி வில்லனாக பிரகாஷ்ராஜ் வருகிறார். அந்தமான் தீவில் வசிக்கும் தமிழ்,கார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.
சந்தோஷ்நாராயணின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.அவரும் திரையில் வந்து ஆடியிருக்கிறார்.பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை உயர்த்திக் காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ்கிருஷ்ணாவுக்குக் கூடுதல் உழைப்பு தேவைப்படும் கதைக்களம்.அதைச் சிரமேற்கொண்டு செய்து காட்சிகளை அழகாக்கியிருக்கிறார்.
ஒன்றுக்கு நான்கு கதைகளை வைத்துக் கொண்டு அவற்றை ஒரு புள்ளியில் இணைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.அதனால் மையக்கதைக்குக் கிடைக்க வேண்டிய காட்சிகளும் முக்கியத்துவமும் குறைந்துவிடுகிறது.
படத்தின் தொடக்கத்தில் சொல்லப்படும் கோல்டுஃபிஷ் அதாவது தங்கமீன் பற்றிய கேள்வியை படம் நெடுக வைத்து அதற்குப் பதிலில்லாமலே படத்தை முடித்துவிட்டார்களோ என நினைக்கும்போது அதுபற்றி வசனங்களில் சொல்லியிருப்பது அவருடைய புத்திசாலித்தனம்.
– கதிரெழிலன்