இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் தனியாக படம் இயக்க களம் இறங்கி நீண்ட நாட்களாகிறதே என்பவர்களின் ஆதங்கத்தை தீர்த்துவைப்பதற்காகவே இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அவரது சகலை பாலாஜி.
இதுவரை வெறுமனே தயாரிப்பு நிர்வாக வேலைகள் மட்டுமே பார்த்துவந்திருந்தாலும், என்றாவது ஒரு நாள் இயக்குனராக களம் இறங்கினால்,… பத்து ஷங்கர், இருபது மணிரத்னம் என்று சுற்றியுள்ளவர்களால் சூளுரைக்கப்பட்ட பாலாஜி, தங்கர்பச்சானிடமிருந்து தப்பிப்பிழைத்து வந்த இனியா மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்ட் செந்தில் ஜோடியை வைத்து ‘கண்பேசும் வார்த்தைகள்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
ஷங்கரின் எஸ். பிக்ஷர்ஸ் தயாரித்த பல படங்களுக்கு நிர்வாகத்தயாரிப்பாளராக இருந்து, விநியோகஸ்தர்களை டீல் பண்ணி வந்த பாலாஜி, ஷங்கரே வியக்கும் அளவுக்கு பலே மூளைக்காரராம்.
எப்போதுமே தனது படத்தின் ஒன் லைன் முடிவானவுடன் தனது சகலை பாலாஜியிடம் சொல்லி அவர் கிரீன் சிக்னல் காட்டினால் மட்டுமே தொடர்ந்து அந்தக் கதையில் டிராவல் செய்வாராம் ஷங்கர். பாலாஜிக்கு பிடிக்காவிட்டால் அந்த ஒன்லைன் தஞ்சமடையும் இடம் ஷங்கர் வீட்டு குப்பைத்தொட்டி.
ஷங்கரின் ‘காதல்’ ,23-ம் புலிகேசி, ஈரம்’ போன்ற படங்களை தனி ஒரு மனிதராக நிர்வகித்து ஷங்கரை திகைப்பில் ஆழ்த்தி வந்த பாலாஜிக்கு சுமார் பத்து வருடங்களாகவே இயக்குனராகும் ஆசை. அந்த ஆசையில் அவரைப் பிரிந்து வந்து ‘உயிர்’ என்ற ஒரே ஒரு விவகாரமான படத்தை தயாரித்து, அடுத்து உடனே இயக்கும் முடிவிலிருந்த பாலாஜியை மீண்டும் ஷங்கர் வற்புறுத்தி அழைத்துக்கொள்ள, வேறுவழியின்றி அப்போதும் தனது டைரக்ஷன் ஆசையை மூட்டை கட்டிவைத்துவிட்டு சகலைக்கு உறுதுணையாக இருக்க கிளம்பினார் பாலாஜி.
இப்போது தனது உதவி எந்தரூபத்திலும் தேவைப்படாத ஆஸ்கார் ஃபிலிம்ஸில் ஷங்கர் படம் இயக்கப்போய்விட்டதால், ‘’ ஐ ‘கண் பேசும் வார்த்தைகள்’ புரிவதில்லை. பை த பை காத்திருந்தால் படம் இயக்கமுடிவதில்லை’ என்று பாடியபடி ஷங்கரிடமிருந்து எஸ்கேப் ஆகி இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார் பாலாஜி.