எதிர்ப் புரட்சிகர வளர்ச்சி அடைந்துள்ள சிங்கள பௌத்த இனவாதமும் அதன் சேவகர்களும்.
மு . திருநாவுக்கரசு.
13 /12/2019.
புரட்சி எதிர்ப்புரட்சிகர வளர்ச்சியடைவதும் எதிர்ப்புரட்சி புரட்சிகர வளர்ச்சி அடைவதும் வரலாற்றில் அவ்வப்போது நிகழ்ந்து வருவதுண்டு என்று அரசியல் வரலாற்று கோட்பாட்டாளர்கள் கூறுவர்.
எதிர்ப்புரட்சி என்பது வரலாற்றை பின்னோக்கி இழுத்துச் செல்வதும், மனித குல வளர்ச்சிக்கு எதிரானதும் , மனித சமூகத்திற்கு தீங்கானதும் , ஜனநாயக விரோதமானதும் என்று அதற்கு வரைவிலக்கணம் கூறுவர்.
உதாரணமாக பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தையாக தோன்றிய நெப்போலியன் பின்பு எதிர்ப்பு புரட்சியின் தந்தையாக மாறினான் என்ற கசப்பான வரலாற்றுப் படிப்பினையை பல வரலாற்று ஆசிரியர்களும் தலைவர்களும் நினைவு கூறத் தவறவில்லை.
உலகளாவிய அளவில் யுத்த தளபதிகளின் வரலாற்றில் விரல்விட்டு எண்ணத்தக்க தலையாய தளபதிகளில் நெப்போலியனும் ஒருவர் என்பதை வரலாற்றாசிரியர்கள் சரிவர பதிவு செய்துள்ளனர். ஆனால் அதேபோல அவன் ஓர் எதிர்ப்புரட்சியாளனாக மாறித் தனது சொந்த நாடான பிரெஞ்சு தேசத்திற்கும், கூடவே மனித குலத்திற்கும் தீங்கையும் சேதத்தையும் விளைவித்தவன் என்கின்ற உண்மையையும் வரலாற்றாளர்கள் பதியத் தவறவில்லை.
இலங்கையில் சிங்கள பௌத்த அரசியல் சிந்தனையானது உள்ளடக்கத்தில் எதிர்ப் புரட்சிகரமானது. அது பல்லினச் சமூகத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது. அத்தகைய எதிர்ப்புரட்சிகர அரசியல் சிந்தனையானது தனக்கான தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கின்படி மேற்சென்று புரட்சிகர வளர்ச்சி அடைந்து இன்று இனவாதத்தின் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த வகையில் பௌத்த சிங்கள பேரினவாத எதிர்ப்புரட்சியானது புரட்சிகர வளர்ச்சி அடைந்திருக்கும் அதேவேளையில், தமிழ் தரப்பில் புரட்சியானது எதிர் புரட்சிகர வளர்ச்சியடைந்து தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாதையில் முன்னேறிச் செல்கிறது.
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமானது புரட்சிகர வளர்ச்சி அடைவதற்கான பாதையை தனக்கேற்ற வரலாற்றியல் ( Historiography) சிந்தனையின் மூலம் வடிவமைத்துள்ளது. இது பெரிதும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த புனைகதை கொண்ட வரலாற்று ஏடான மகாவம்சம் கூறும் தவறான வரலாற்றியல் கருத்தின் அடிப்படையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் மக்கள் வாழவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் முன்வைக்கும் மன்னர்களினதும் மகா சங்கத்தினரதும் வரலாற்றைப் பின்னி செல்வதன் வாயிலாக கட்டியெழுப்பப்படும் சிங்கள பௌத்த பேரினவாத , தமிழின எதிர்ப்புவாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நவீன வரலாற்றையும் அணுகும் ஒரு துயரகரமான வரலாற்றியல் வளர்ச்சியடைந்திருக்கிறது.
சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றையும் அடிப்படையாக கொண்டுதான் வரலாற்றியல் எழுதப்பட வேண்டுமே தவிர மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டல்ல . அதேபோல சமூக வரலாற்றிலும் பண்பாட்டு வரலாற்றிலும் மன்னர்கள் இடம் பெறுவதுண்டு. அதற்காக மன்னர்களின் வரலாறு மக்களின் வரலாறு ஆகாது. அதன் அடிப்படையில் வரலாற்றை ஒருபோதும் எழுதவும் கூடாது.
இத்தகைய பிள்ளையான வரலாற்றியல் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து சமூகங்களையும் சார்ந்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் உண்டு. ஆனால் வசதிவாய்ப்புக்களைக் கருதி சிங்கள பௌத்த பேரினவாதத் தோடு ஒத்துப்போகும், மௌனம் சாதிக்கும் அறிவியலாளர்களே பெரும்பாலானவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய பிழையான சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் இலங்கையில் இன ஐக்கியம் ,ஜனநாயகம் என்பதை பற்றி ஒருபோதும் கற்பனை செய்யவோ கனவு காணவோ முடியாது.
இரணைமடு , மன்னார் ஆகிய இரு பகுதிகளிலும் இற்றைக்கு 1, 25 ,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் “”பலாங்கொடை மனிதன் “” என்று சொல்லப்படுகின்ற பலாங்கொடை மனித கலாச்சாரம் தொடர்பான மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இன்றைக்கு 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டு மனிதன் வாழ்ந்தான் என்ற உண்மை சிங்கள இனத்தவரான சிரான் தெரணியாகல போன்ற தொல்லியல் நிபுணர்களால் கூறப்பட்டுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் ரஞ்சன்மடம (Ranchanmadama) என்ற கிராமத்தில் கி-மு 1350 ஆம் ஆண்டை சேர்ந்த சுட்ட களிமண்ணாலான ஈமத்தாழிகள் 2007ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அதாவது இற்றைக்கு 3350 ஆண்டுகளுக்கு மேல் முற்ப்பட்டது.
இலங்கைத்தீவில் மனிதகுல வரலாறு இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் அதேவேளை சுட்ட களிமண் தாழிகளில் சவ அடக்கம் செய்யும் பண்பாட்டைக் கொண்ட மனித வாழ்வு மேற்படி 3350 ஆண்டுகளுக்கும் மேற்செல்லும் நிலையில் மகாவம்சம் இலங்கையின் மனிதகுல வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டு கால வரலாற்றுடன் சுருக்கி சிங்கள பௌத்த மதத்திற்கு பொருத்தமான வரலாற்றியலோடு இணைத்து வடிவமைத்திருக்கிறது .
புவிச்சரிதவியலின்படி இலங்கை இந்தியாவின் தொடர் நிலப்பகுதியாக இருந்த காலத்திலிருந்து இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். இன்றைக்கு சுமாராக 7000 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் 100 லிருந்து 120 மீட்டர் வரை உயர்ந்த போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் புகுந்தன் வாயிலாக இந்தியாவிலிருந்து இலங்கை பிரிந்து ஒரு தீவானது.
அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட பின்பும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மனிதத் தொடர்புகள் தொடர்ந்து நீடித்து வந்தன. இதில் மன்னர்களுக்கு இடையான போரும் ஒரு பகுதி.
இந்தியாவிலிருந்து வந்த மன்னர்களும் இலங்கையில் இருந்த மன்னர்களோடு போர் புரிந்தார்கள். இலங்கையில் இருந்த மன்னர்களும் தங்களுக்கிடையே போர் புரிந்தார்கள். இலங்கையில் ஆட்சிபுரிந்தவந்த சொந்த சகோதர மன்னர்கள்கூட தங்களுக்கிடையே போர் புரிந்தார்கள். இந்தியாவில் ஒரே இனமான தமிழர்களிடையே வாழ்ந்த சேர, சோழ ,பாண்டியர்கள் தங்களுக்கிடையே போர் புரிந்தார்கள். இது மன்னர்குல வரலாற்றில் ஓர் இயல்பான வரலாற்றுப் போக்கு.
இந்த வகையில் கிறிஸ்துவுக்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த தமிழினத்தின் மூதாதையர்களை கொண்ட வரலாற்றுப் போக்கை மாற்றி தமிழ் மக்களின் வரலாற்றை புறக்கணித்து வெறும் மன்னர் சண்டை வரலாற்றுக் கூடாக தமிழர்களை இலங்கையின் அந்நியர்களாகவும் படையெடுப்பாளர்களாகவும் ஒருபுறம் சித்தரித்து மறுபுறம் சிங்கள பௌத்தர்களை மண்ணின் மைந்தர்களாகவும் சித்தரித்து இன மோதல்களுக்கும் அமையின்மைக்கும் வழிவகுக்கும் ஒரு வரலாற்றியல் இன்று உச்சக்கட்ட வளச்சி அடைந்துள்ளதன் வெளிப்பாடாக ராஜபக்சக்கள் தமது ஆட்சியை அனுராதபுரத்தில் பிரகடனப்படுத்தி உள்ளமையானது பறைசாற்றுகின்றது.
இந்தவகையில் இத்தகைய பிழையான வரலாற்றியலின் அடிப்படையிலான அறிவியலைப் பற்றியும் , அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றியும் மற்றும் பொருளாதாரம் , திட்டமிடல், நிர்வாகம், ஏனைய நடப்புகள் என்பன பற்றியும் பேசாமல் ஜனநாயகம் ,, இனஐக்கியம் என்பனவற்றைப் பற்றிப் பேசமுடியாது.
மொத்தத்தில் இன்று அனைத்து அம்சங்களிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர்ப்புரட்சியின் உச்சதை எட்டியுள்ளது. இது ஊடகங்கள், நிறுவனங்கள் , நிர்வாக கட்டமைப்புக்களென அனைத்திலும் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது.
சிங்களக் கட்சிகள் அனைத்திலும் இந்த உச்சக்கட்ட எதிர்ப்புரட்சிகர பௌத்த மேலாதிக்க இனவாதம் நிலையெடுத்துள்ளது.
குறிப்பாக இடதுசாரி கட்சிகளின் வரலாற்றை நோக்கினால் இதனை தெளிவாக காணலாம். இலங்கையில் இடதுசாரி தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பிலிப் குணவர்த்தன 1956-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றியல் சிந்தனைக்கு ஆட்பட்டவராய் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகவுடன் இணைந்து சிங்கள-பௌத்த வாதியாக எதிர்ப்புரட்சிகரப் பாதைக்குச் சென்றார்.
பின்னாளில் இந்தப் பாதையில் டாக்டர். என் எம் பெரேரா, டாக்டர். கொல்வின் ஆர். டி. சில்வா, டாக்டர் .விக்கிரமசிங்க , பீட்டர் கெனமன் போன்றோரும் சென்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடன் 1970ஆம் ஆண்டு பௌத்த சிங்கள பேரினவாத ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தார்கள். இன்று “”தோழர்”” வாசுதேவ நாணயக்காரவை இத்தகைய எதிர்ப்புரட்சிகர வளர்சியின் உச்சக்கட்ட உதரணமாகக் காட்டலாம்.
சிங்கள இடதுசாரிகளுடனும் சிங்கள முற்போக்காளர்களுடனும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கூறப்படும் கருத்து எப்போதும் சம்பிரதாயபூர்வமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. சிங்கள மக்கள் மத்தியில் சரியான பலம்வாய்ந்த இடதுசாரிகளின் அணிகளோ முற்போக்காளரின் அணிகளோ இல்லாதபோது தமிழ் தரப்பு அங்கு சிங்கள தரப்பில் யாருடன் கை கோர்க்க முடியும்?
ஈழத் தமிளரின் உரிமைப் போராட்டம் முற்றிலும் ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டது. அதுவே முழு இலங்கைக்குமான, ஜனநாயகத்திற்குமான ஈட்டி முனையுமாகும். இந்தவகையில் அறிவியலை முன்னெடுக்கத் தவறும் எந்தொரு அறிவியலாளனும் சிங்கள பௌத்த இனவாதத்தின் சேவகனும் ஜனநாயக விரோதியுமாவான் . அவ்வாறே ஜனநாயக உள்ளடக்த்தைக் கொண்ட தமிழ் மக்களது போராட்டத்தை ஆதரித்து முன்னெடுக்கத் தவறும் எந்தொரு அரசியல்வாதியும் ஜனநாயக விரோதியும் சிங்கள பௌத்த இனவாதத்தின் சேவகனுமே ஆவான்.