இந்திய இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜா என்றொரு இசை மேதையை கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு ராபர்ட் சின்னதுரை அவர்களின் கட்டுரையை படித்தால் புரியும்.
மேற்கத்திய இசையில் நல்ல தேர்ச்சி பெற்ற எனக்கு ஒரு இசையமைப்பாளராவதுதான் லட்சியமாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது.
அப்பா ஒரு தீவிரமான நாத்திகர். அம்மா ஒரு தீவிரமான கத்தோலிகர். அதனால் எனக்கு எப்போதும் சர்ச் சார்ந்த இசை அறிமுகமே இருந்தது.
ஒருநாள் என் நண்பன் ஒருவன் வற்புறுத்தி கல்கத்தா வந்திருந்த உஸ்தாத் பிஸ்மில்லா கானின் கச்சேரிக்கு அழைத்துச் சென்றான். அதுவரை மேற்கத்திய இசையை மட்டுமே பெரிதாக நினைத்த என் மனத்தின் அகங்காரம் முற்றாகக் கழன்று விழுந்தது.
ஏதோ ஒரு அழகை, என்னவோ என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. அந்த நாளை இன்னும் கூட என்னால் தெளிவாக எழுத்தில் வடிக்க முடியவில்லை.
அப்போது என் தந்தைக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றலானது. புனேயின் கலாசாரச்சூழல் பிடிக்காமல் என் அப்பா, எங்கள் குடும்பத்தை கோலாப்பூரில் குடியமர்த்தினார்.
உஸ்தாத் பிஸ்மில்லா கான்
வார இறுதிகளில் வந்துவிடுவார். உள்ளுக்குள் ஹிந்துஸ்தானி நெருப்பு எனக்குத் தீராமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
என் பக்கத்துவீட்டுக்காரர்களின் பரிந்துரையின் பேரில் என் குருவை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியவர்கள் என்னை எச்சரித்தே அனுப்பியிருந்தார்கள்.
அவர் சரியான முசுடு. யாரையும் மதிக்க மாட்டார் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அவருக்குள் மூச்சுக்காற்று போல இசை ஓடிக்கொண்டேயிருந்தது. கூடவே ராமஜபமும்.
என்னை ஏற இறங்கப்பார்த்த அவர், எதற்காக நான் இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்று கேட்டார். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இசை என்னை உலுக்கி அழவைத்தது.
அந்த மனநெகிழ்வு எப்போதும் என்னுடனே இருக்கவேண்டும் என்பதற்காக இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்றேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் உடனே கலங்கி எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்ணீர் வரத்தொடங்கியது.
‘எப்பேர்ப்பட்ட கலைஞர் இல்லையா? அவர் பெயரைச் சொன்னதற்காகவே உனக்கு சங்கீதம் கற்றுத்தர முடிவு செய்துவிட்டேன். தினம் ஒரு ரூபாய் காணிக்கை அந்த உண்டியலில் போட்டுவிடு. அது என் ராமருக்கு’ என்று என் சிட்சை தொடங்கியது.
ஊரெல்லாம் முசுடு என்று ஒதுங்கிப்போகும் அவர், உள்ளுக்குள் ஒரு குழந்தை என சில நாட்களிலேயே தெரிந்தது.
எந்நேரமும் நாத லயிப்புதான் அவருக்கு. மோகமுள்ளில் பாபுவின் குரு ரங்கண்ணாவைப் போல. இந்தியாவின் கிட்டத்தட்ட அத்தனை இசைமேதைகளையும் கேட்டுவிட்ட என்னால் அவர் ஒரு மாமாபெரும் இசைமேதை என நிச்சயம் சொல்ல முடியும்.
திடீர் திடீரென்று மனம் நெகிழ்ந்து ஏதாவது இசைமேதையைப் பற்றிப் பேசத்தொடங்கிவிடுவார். ரோஷன் இசையமைத்த ‘ஏ இஷ்க்கு இஷ்க்கு ஹைன் இஷ்க்கு இஷ்க்கு’ கவ்வாலியைக் குறித்து அவரால் கண்ணீர் சிந்தாமல் பேசவே முடியாது. எல்லா இடத்திலும் அவருக்கு ஏதோ இசை கேட்டுவிடும்.
ஒருநாள் மிகவும் நெகிழ்ந்த மனநிலையிலிருந்த அவர், என்னைப் பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். ‘எப்பேர்ப்பட்ட கலைஞன்! நீயும் தமிழந்தானே… நீதான் எத்தனை கொடுத்துவைத்தவன்!’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார்.
அவர் பல கர்நாடக இசைமேதைகளை – ஜி.என்.பி, ராம்நாட் க்ருஷ்ணன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களைக் கொண்டாடுபவர் எனத் தெரியும்.
அதுபோக அந்தக்கால தியாராஜ பாகவதர், சின்னப்பா தொடங்கி கே.வி.மகாதேவன், சி.ராமச்சந்திரா, சுப்பாராவ், ஜி.ராமநாதன் என அத்தனை பேரின் முக்கியமான படைப்புகளையும் கேட்டவர்.
வருடத்தின் பாதியை அவர் பயணத்தில், கோயில்களை தரிசிப்பதில் செலவழிப்பவர். இந்தியாவின் அத்தனை பகுதிகளையும் அவர் நடந்தே சுற்றியிருக்கிறார். ஒவ்வொரு பகுதியின் முக்கியமான பல இசைக்கலைஞர்களையும் அதனால் அவர் தெரிந்து வைத்திருந்தார்.
அப்படித்தான் தமிழக இசைமேதைகளும் அவருக்கு அறிமுகம். அதனால் அன்றைய உருப்படி யாராயிருக்கும் என்று எனக்குள் குழப்பம்.
‘என்ன கலைஞனடா இவன்! இவனுடைய பிற பாடல்கள் கிடைக்குமா? உனக்கு நிச்சயம் தெரிந்திருக்குமே?’ என்றார் எனது குரு. அவர் அப்படி உருகிக்கேட்ட இசைக் கலைஞனின் பெயர் ‘இளையராஜா’.
எனக்குத் தீயை மித்தது போலிருந்தது. நான் சினிமாக்காரர்களையே ஒத்துக்கொள்கிறவன் இல்லை.
பீதொவன், மொட்ஸார்ட், பாஹ், உஸ்தாத் பிஸ்மில்லாகான், உஸ்.ஆமிர்கான், உஸ்.அல்லாடியாகான், கொஞ்ச கொஞ்சம் கர்நாடக சங்கீத மேதைகள் போன்றோரின் இசையைக் கேட்டுவளர்ந்தவன் நான்.
அதனாலேயே கொஞ்சம் திமிரோடு இருப்பவன். ஆனால் என் குரு சொல்லும் திரையிசைக்கலைஞர்களான எஸ்.டி.பர்மன், நெளஷாத், பழைய இசைமேதைகளை ஒத்துக்கொள்பவன்.
அவர் எனக்குப் போட்டுக்காட்டிய பாட்டு – ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற ‘நாயகன்’ திரைப்படப்பாடல். அதை முதல்முறை கேட்டவுடனேயே நான் அது ஒரு இசைச்சாதனை எனக் கண்டுகொண்டேன். அப்பாடல் இன்றும் பெரும்பாலானோரால் தேஷ் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அது ஷ்யாம்-கல்யாண் என்ற அரிதான ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடல். என் குரு மீண்டும் மீண்டும் சொன்னார்: “வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” என்ற இடம் முடியும் இடத்திலிருக்கும் ஷ்யாம்-கல்யாணின் பிடியைக் குறித்து அவர் அப்படி சிலாகித்தார்.
போலவே “இசைமழை எங்கும் பொழிகிறது” என்ற வரி. “என்ன ஒரு ராகம். அதற்கு இவன் தீட்டியிருக்கும் வர்ணம்தான் என்ன!” என்றொரு அங்கலாய்ப்பு அவருக்குள். எனக்கும்தான்.
நான் ஷ்யாம்-கல்யாண் தவிர இன்னொன்றையும் கண்டுகொண்டேன். எனக்குள் இருந்த மேற்கத்திய இசைக்கலைஞன் விழித்துக்கொண்டான். அப்பாடலில் அவர் அமைத்திருந்த ஹார்மொனி.
முக்கியமாக இடையிசைகளில். அப்படியொரு ஹார்மொனியை இந்தியத் திரையிசையில் அதற்கு முன் கேட்டதில்லை. அதை ஃப்யூஷன் என்று சொல்வது அப்பாடலில் வெளிப்பட்டிருந்த மேதைமைக்கு நான் செய்யும் துரோகம்.
உங்களுக்கே தெரியும் மேற்கத்திய இசையின் சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரம் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் மேற்கத்திய இசையில் அந்த கான்செப்ட் உண்டு.
இப்போது அந்த தத்துவத்தை இந்திய இசையில் பொருத்தும்போது, இந்திய மரபிசையின் ராகத்தில் அதில் ஒலிக்கும் ஸ்வரங்களுக்கு ஹார்மொனியான (அதோடு சேர்ந்து கேட்டால் அபஸ்வரமாக ஒல்லிக்காமல், ஒத்திசைவாக இருக்கும் ஸ்வரம்) ஸ்வரத்தை – அதன் கார்ட் வடிவத்தோடு சேர்ந்து இசைத்தால் ஒரு பிரமாதமான இசையனுபவம் கிடைக்கும்.
இதையே நான் இளையராஜாவின் இசையிலிருந்துதான் புரிந்துகொண்டேன். அப்படி ஹார்மோனியாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்றால் – இந்திய மரபிசை, மேற்கத்திய இசை இரண்டிலும் பிரமாதமான நிபுணத்துவம் இருக்கவேண்டும். அந்த நிபுணத்துவம் வெளியே துருத்திக்கொண்டு தெரியாத அளவுக்கு அழகியல் ரசனை இருக்கவேண்டும்.
இதே ஹார்மொனி கான்செப்ட்டின் இன்னும் கடினமான வடிவமான கெளண்ட்டர் பாய்ண்ட் [Counter Point] இன்னும் இந்திய இசையில் இளையராஜாவைத்தவிர வேறு யாராலும் சிறப்பாக வெளிக்கொணரவே முடியவில்லை.
என் கண்மணி உன் காதலி, கண்மணி அன்போடு காதலன், பருவமே புதிய பாடல் பாடு, சிட்டுக்குருவி முத்தம் தருது – ஒன்றா இரண்டா. உங்களுக்குத் தெரிந்தே இருக்கும் – கெளண்ட்டர் பாய்ண்ட் என்பது ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்யூன்களை வாசிப்பது. யோசித்துப் பாருங்கள்.
கேட்பதற்கு ஒரே இரைச்சலாக cacaphony-ஆக இருக்காது? ஆனால் சமகாலத்தில் வாசிக்கப்படும் ஸ்வரங்கள் (வெவ்வெறு ட்யூன்களில் இருப்பவை), ஹார்மொனியாக இருக்கும்போது கிடைக்கும் அனுபவம் out of the world என்று பழங்காடியாகத்தான் சொல்லமுடியும்.
இளையராஜா இந்த கெளண்ட்டர் பாய்ண்ட் விஷயத்தை மிக மிக சர்வசாதாரணமாகச் செய்கிறார். பல பாடல்களில் நாம் கேட்கும் ஒரு விநாடியில் பின்னணியில் நான்கு வெவ்வேறு ட்யூன்கள் – கிடார், ப்யானோ, வயலின், குரல் – என வந்துபோகும். அக்னி நட்சத்திரத்தின் பாடல்களில் அவற்றைக் கேட்கலாம்.
ஹரிபிரஸாத் சவ்ராஸ்யா
கிட்டத்தட்ட எல்லா பாடல்களிலும் அது உண்டு என்றாலும், அக்னிநட்சத்திரம் பிரபலமான ஒன்று என்பதால் அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
இந்த ஹார்மொனி, கெளண்ட்டர்பாயிண்ட் போன்ற விஷயங்களெல்லாம் தெரியாத பலரும், இதிலென்ன புதுமை – இதைத்தான் எம்.பி.ஸ்ரீனிவாசன் செய்துவிட்டாரே, இதைத்தான் எல்.சுப்பிரமணியம் செய்துவிட்டாரே என்று கேட்கிறார்கள்.
என் குரு இளையராஜாவின் இசையை அறிமுகப்படுத்தியபின் நான் அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு, என் குருவுக்கும் அவ்வப்போது போட்டுக்காண்பிப்பேன்.
ஒரு கட்டத்துக்கு மேல் என் குரு இளையராஜாவைப்பற்றி எதுவுமே சொல்லுவதில்லை. ஒரு வித ஆயாசம் கூட அவருக்கு வந்துவிட்டது.
இந்த மனுஷனைப் பற்றி என்ன சொல்வது என்றுதான். என் குரு கொண்டாடும் பிருந்தாவன ஸாரங்கா, பூர்ய தனஸ்ரீ, கலாவதி –இளையராஜாவுடையது.
என் குருவைப் பார்க்க ஹரிபிரஸாத் செளராஸ்யா அடிக்கடி வருவார். என் குருவைப் பற்றி பொதுஜனங்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஹிந்துஸ்தானி ஜாம்பவான்களுக்குத் தெரியும்.
என் குருவின் ஒரு சிறு அங்கீகரிப்பான தலையசைப்புக்காக ஏங்கும் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். செளராஸ்யாஅப்படி அடிக்கடி வந்து அவரிடம் ஆசி வாங்கிச் செல்வார்.
ஒருமுறை அப்படி அவர் வந்திருந்தபோது பேச்சு இளையராஜாவைப் பற்றி வந்தது. ஹரிபிரஸாத் செளராஸ்யா இளையராஜாவைப் பற்றிச் சொன்னவற்றை யாரும் நம்பமாட்டார்கள்.
செளராஸ்யா ‘Nothing But Wind’ என்ற இளையராஜாவின் இசைத்தொகுப்பில் வாசித்திருக்கிறார். தனித்தனி நோட்ஸ்களைப் பார்த்த அவர் அவ்வளவு impress ஆகவில்லை. ஆனால் வாசிக்க வாசிக்க அவர் அதில் பொதிந்திருந்த மேதைமையைக் கண்டுகொண்டாராம்.
அதன்பின்பு அடுத்தடுத்த நாட்களுக்கு வீட்டில் ப்ராக்டிஸ் செய்துகொண்டுதான் போனேன் என்றார் அவர்.
ஹரிபிரஸாத் இப்படியெல்லாம் ப்ராக்டிஸ் செய்துதான் ஒருவிஷயத்தைக் கொண்டுவரவேண்டும் என்றிருக்கக் கூடிய ஆள் இல்லை.
அவர் உட்கார்ந்த இடத்தில் இசை பொங்கிப் பிரவாகமாக வரும். அவர் என் குருவுக்காக வாசித்த ஹிந்தோளத்தை மூன்று மணி நேரம் கேட்டவன் நான்.
அப்படியொருவர் சாதகம் செய்துவிட்டு வாசிக்கப்போகிறார் என்றால்? அந்த இசைத்தொகுப்பு வெளியானதும் கேட்டுவிட்டு, தானே கிளம்பி நேரடியாக இளையராஜாவைசந்தித்துப் பாராட்டிவிட்டு வந்தேன் என்றார் அவர்.
பண்டிட் ரவிஷங்கர், பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி இவர்களும் இளையராஜாமீது மிகமிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள்.
நமஸ்காரங்களுடன்…….. ராபர்ட் சின்னதுரை