சென்னை -28 ல் அறிமுகமாகி ‘தோழா’ நாடோடிகள்’ என்று சுமாராக தனது கலைப்பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த வசந்த் டி.வி.யாரின் வாரிசு விஜய் வசந்த் முதன்முதலாக, சோலோ ஹீரோவாக, அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக அடியெடுத்து வைத்திருக்கும் படம் ‘மதில் மேல் பூனை’.
இன்றுமாலை, பிரசாத்லேப்பில் நடந்த, இதன் ஆடியோ வெளியீட்டுவிழா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய வசந்த், ‘’ படத்தோட டைரக்டர் பரணி ஜெயபால், ஒரு ஆக்ஷன் கதை இருக்கு. ஹீரோவா பண்றீங்களான்னு கேட்டப்ப, நான் கதை கேக்கக்கூட விரும்பாம ஓட்டம் புடிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர் என்னை விடாம வெரட்டி கன்வின்ஸ் பண்ணினார். இதுல சோலோ ஹீரோவா நடிச்சிட்டேன்ங்கிறதுனால, இனிமே அப்பிடித்தான்னு முடிவு பண்ணிராதீங்க. ஆனாலும் இந்தப்படம் நல்லா ஓடும்னு நம்பிக்கை இருக்கு’ என்று படத்தின் தலைப்பு மாதிரியே மதில் மேல் அமர்ந்த ஃபீலிங்கிலேயே பேசினார்.
அடுத்து பேசிய நாயகி ‘நான்’ விபா, [ அரவிந்தசாமியோட கொழுந்தியாளாமே?] படத்தின் தயாரிப்பாளர்கள் துவங்கி, உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், காஸ்ட்யூமர்கள்,மேக்கப்மேன்கள் வழியாகப்போய், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆணிபுடுங்கியவர்கள் வரை நன்றி தெரிவித்தார். அத்தோடு நிற்காமல் ஹீரோ விஜயின் வசந்த் அண்ட் கோ -வில் டி.வி ஃப்ரிட்ஜ் எதுவும் இன்ஸ்டால்மெண்டில் எடுக்கவேண்டியோ என்னவோ, ‘எங்க பட ஹீரோ விஜய் இந்தப்படத்துல ஆக்ஷன்ல தூள் கிளப்பீட்டாரு. அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்’’ என்றார்.
இதைக்கேட்டதும் வெலவெலத்துப்போன விஜய், ‘’அந்தப்பொண்ணுக்கு என்மேல என்ன கோபமுன்னு தெரியலை.இப்பிடி ஒரு குண்டைத்தூக்கி என்மேல போடுறா. எனக்கு என்னைக்குமே சூப்பர்ஸ்டார் ஆகனும்ங்கிற ஆசையெல்லாம் கிடையாது.வெறுமனே அவரோட ரசிகரா இருந்தா போதும்.’ என்று உடனே மைக்கை வாங்கி சாஸ்டாங்கமாக மறுப்புத்தெரிவித்தார்.
டைரக்டர் கிட்ட ஒரு கேள்வி. நம்ம கிட்ட எவ்வளவோ மிருகங்கள் இருக்கப்ப, ரொம்பக்காலமா மதிலு மேல பூனையை மட்டுமே உட்கார வைக்கிறீங்களே? அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு வேற எதாவது ஒண்ணை உட்கார வைக்கக் கூடாதா?