உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண் மனீஷா,  கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார். பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்பெண்ணை சுமார் 7 பேர் கொண்ட, தாக்கூர் இனத்தைச் சேர்ந்த, உயர்ந்த சாதிக் கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது. அப்பெண் தப்பித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக அவளுடைய காலை உடைத்துள்ளனர். மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து நாக்கை அறுத்து விட்டனர். பலர் சேர்ந்து கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததில் அந்தப் பெண்ணின் முதுகெலும்பும் ஒடிந்து போனது. 

கவலைக் கிடமான நிலையில் மனீஷா அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 29ம் தேதி காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்து விட்டன. கைகள் பாதியளவு முடங்கி விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. அவரை காப்பாற்ற முடியவில்லை,’ என்றனர். இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இதுவரை ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் என்கிற 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 
 
இந்நிலையில் உயர் சாதி குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் துறை குற்றத் தடயங்களை மறைக்க உடந்தையாக செயல்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரபிரதேச போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினர் யாருக்கும் சொல்லாமல் அதிகாலை 2.30 மணிக்கு அவரது உடலை எரித்து உள்ளனர். இளம் பெண்ணின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் வெளியே வரவிடாமல் வீடுகளில் பூட்டி வைத்து உள்ளனர். 
சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்ததும், இந்த பாலியல் வழக்கு தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.  
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.
ஆனால்,  ஹத்ராஸ் பெண் மனீஷா பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என கூறி உள்ளார்.
 
“செப்டம்பர் 22 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் மேலும் மூன்று நபர்கள் பெயரை கூறினார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லை. பரிசோதனை மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று மோர்டியா கூறி உள்ளார்.
 

ஒட்டுமொத்த தேசத்தின் ஆன்மாவௌஉலுக்கிய இந்த கொடூர சம்பவம், 2012ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்ததை போன்றது. டெல்லி மாணவி நிரபயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதே போன்று ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கின் குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என்பதை ஒட்டுமொத்த தேச மக்களின் கோரிக்கையாக எழுந்து உள்ளது.

இன்று இக்கொடூரச் செயலுக்கு அரசின் காவல்துறை துணை போவதைக் கண்டித்து ஹத்ராஸூக்கு ஊர்வலமாகச் சென்ற ராகுல்காந்தியும், ப்ரியங்கா காந்தியும் டெல்லியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேல் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 
தமிழகத்தில் ஸ்டாலின், சீமான் உட்பட பல கட்சித் தலைவர்களும் இக்கொடூரச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.