அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட அவருக்கு ‘தொடர்புடைய’ 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வேலுமணி, வீரமணி உட்பட பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பல கோடி மணிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் என்றால் லஞ்சம் வாங்கத்தான் செய்வார்கள். அவர்கள் வீடுகளில் வெறுமனே சோதனை மட்டும் நடத்திவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படக்கூடாது என்ற அரசியல் தர்மத்தை திமுகவும் கடைப்பிடித்து வருவது மிகவும் மெச்சத்தகுந்தது.