பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று மதியம் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயற்சித்ததால் இசையுலகம் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் மூழ்கியுள்ளது.
மார்கழி மாதத்தில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி களைகட்டிக்கொண்டிருக்கும் வேளையில்
நடந்துள்ள இச்சம்பவம் கர்நாடக இசையுலகினரை பெரும் கவலைக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நித்யஸ்ரீ மகாதேவன், பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி. கர்நாடக இசைப் பாடகியான இவர் ஏ.ஆர்.ரஹ்மானால் 1990-ல் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டார். பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல் மூலம் திரை இசை உலகில் காலடி எடுத்து வைத்த நித்யஸ்ரீ அடுத்து ‘சங்கமம்’ படத்தில் ‘சவுக்கியமா கண்ணே சவுக்கியமா?” ‘படையப்பா’ படத்தில் ‘மின்சாரக்கண்ணா’ ‘பார்த்தாலே பரவசம் படத்தில் ‘மனமத மாசம்’ உட்பட 50க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பிரபலம் அடைந்தவர். சினிமாவில் பாடினாலும் தனது கர்நாடக சங்கீத ஆர்வத்தை சற்றும் விட்டுவிடாமல் தொடர்ந்து கச்சேரிகள் செய்துவந்தார் நித்யஸ்ரீ.
இதுவரை இவரது கணவருக்க்கும் இவருக்குமிடையிலான பிரச்சினைகள் குறித்து செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், காரணம் எதையும் கண்டறியமுடியாமல் இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று நண்பகல், சொகுசுக் கார் ஒன்றில் மகாதேவன் கோட்டூர்புரம் வந்ததாகவும், அங்கு பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பாலத்தை கடந்துகொண்டிருந்த பொதுமக்கள் தங்கள் கண்ணெதிரே ஒருவர் ஆற்றில் குதிப்பதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இதனிடயே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதை தெரிந்துகொண்ட அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினை எதுவாயிருந்தாலும் நித்யஸ்ரீ நலம் பெற்று வந்து மீண்டும் சவுக்கியமா கண்ணே சவுக்கியமா?’ என்று பாடவேண்டுமென்பதே சங்கீத கலா ரசிகர்களின் விருப்பம்.