ஏ.ஆர்.ரஹ்மான் இன்று(ஜனவரி 6) தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவித்துள்ளார்.
கற்றார் என்பது மெட்டாவெர்ஸ் எனப்படும் புதியவகை இணைய தளமாகும். இந்த இணையதளங்கள் விர்ட்யுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் உண்மைத் தளத்தை கொண்டிருக்கும். இதனுள்ளே நாம் நிஜமாய் நடப்பது போன்றே செல்ல முடியும், பாடல்கள் கேட்கலாம், பயணிக்கலாம், இசைக்கலாம்.. இப்படி பலதரப்பட்ட மெய் நிகர் உண்மைகளை உண்மையான அனுபவமாகக் காட்டுவதே மெட்டாவெர்ஸ் ஆகும்.
இதில் ஏற்கனவே கமல்ஹாசன் தனது மெய்நிகர் பாத்திரத்தை படைத்து உலவவிட்டுள்ளார். அது போல ஏ.ஆர்.ரஹ்மானின் கற்றல் தளத்தில் பல்வேறு இசை ஆர்வலர்களும் பங்குபெறலாம். தங்கள் படைப்புகளைப் பகிரலாம். அவற்றை உலகறியச் செய்யலாம். அவற்றை பிறருக்கு விற்கலாம். கூட்டு முயற்சிகள் செய்யலாம். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.
முன்மாதிரியாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வெளிவரும்.
HBAR என்னும் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.
இதையெல்லாம் விடுங்கள். துக்கடா தமிழ் சினிமா டைரக்டர்கள் கூட ஆங்கிலத்தில் தங்களது சினிமாக்களுக்கு ஸ்டைலாக பெயர் வைத்துக் கொண்டு வெளிவிடும் இந்த காலத்திலும் தாய்மொழி தமிழை பெருமைப் படுத்த கற்றார் என்கிற தூய தமிழ்ச் சொல்லை இத்தளத்திற்கு பெயராக வைத்திருக்கும் ரஹ்மான் நிச்சயம் நம் அன்பிற்கு உரியவர்.
ஆஸ்கார் விழாவில் உச்சரிக்கப்பட்ட ஒரே தமிழ் வாக்கியமாக இன்று வரை “எல்லாப் புகழும் இறைவனுக்கே” இருக்கிறது.
ஹலோ தமிழ் சினிமாவின் சார்பாக தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.