‘விஸ்வரூபம்’ பட ட்ரெயிலரைப் பார்க்க நேர்ந்தவர்கள் இரண்டு வசனங்களை கவனித்தால் கமலின் தீர்க்கதரிசனத்தை வியக்காமல் இருக்க முடியாது .
ஒன்று கமல் பேசும் வசனம் ‘ஹீரோ, வில்லன் ரெண்டுமே நான் தான்’
இரண்டாவது வசனம் ஆண்ட்ரியா
பேசுவது, ‘ஆமா இந்தக் கதையில எல்லாருக்குமே டபுள் ஆக்ட்’.
கமலும், தியேட்டர் உரிமையாளர்களும் ‘டபுள் ஆக்ட்’ ஆடி முடித்திருக்கும் நிலையில், தற்போது சூடான இரண்டாவது ஆக்ட்டுக்குள் இறங்கியிருப்பவர்கள் டி.டி.ஹெச் கார்ப்பரேட்காரர்கள்.
இவர்களின் இரண்டாவது ஆட்டத்தைப் பார்ப்பதற்கு முன் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
தியேட்டர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி, டி.டி.ஹெச் திட்டத்திலிருந்து பின் வாங்கிய கமல், இன்று பிற்பகல், சற்றுமுன்னர் மீண்டும்[!] பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
சுமார் அரைமணிநேரம் வரை நடந்த இந்த சந்திப்பில், ‘ யாருக்கும் பயந்து நான் இந்த நொந்த முடிவை எடுக்கவில்லை. படம் 25-ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்’ என்கிற நேற்றைய தகவல்களையே ‘ஆத்தா வைய்யும் சந்தைக்குப் போகனும் காசு குடு’ சப்பாணி மாதிரியே திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப சொன்னார்.
‘டி.டி.ஹெச் எப்போது என்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்ப முற்பட்டபோது, சமீப சில தினங்களா சரியா தூங்கலை. கொஞ்சம் தூங்கி எழுந்திரிச்சி, அப்புறமா அவங்க கிட்ட பேசிட்டு உங்களை மறுபடியும் சந்திக்கிறேனே?’ என்று மூன்று நாட்களாக முட்டுச்சந்தில் வைத்து அடிவாங்கிய வடிவேலு மாதிரியே பேசினார்.
கமலின் பேச்சு முழுக்கவே தமிழ்த்திரைத்துறையினர் யாருமே தனக்குக் கை கொடுக்காத ஆதங்கம் பொங்கி வழிந்தது.
‘ நிர்பந்தங்களால் எடுக்கப்பட்ட, என் முடிவுகளால் ஏமாந்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் என்னை மன்னிப்புக்கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்த, எனக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறந்த சக கலைஞர்களும் மன்னிப்புக்கேட்க வேண்டியவர்களே’ என்று வெளிப்படையான வார்த்தைகளில் தனது வேதனையை வெளிப்படுத்தவும் செய்தார்.
’இந்த 25-ம் தேதி ரிலீஸ் என்பது தமிழுக்கு மட்டும் தான். இந்தியில் இனிமேல் தான் தூங்கி எழுந்து முடித்தபிறகு பேசவேண்டும்’ என்றார் கமல்.
இந்த இந்தி ரிலீஸில் இருக்கும் இடியாப்பச்சிக்கலை கமல் மறைமுகமாக ஒப்புக்கொண்ட்தற்குக் காரணம் டி.டி.ஹெச்.காரர்கள் கமலுக்கு எதிராக தங்களது டபுள் ஆக்ட்டை ஆரம்பித்திருப்பதால்தான்.
தியேட்டர்காரர்களுக்கு பயந்து, தங்களைக் கழுத்தறுத்த கமலுக்கு எதிராக, அனைத்து டி.டி.ஹெச். நிறுவனங்களுமே கோர்ட்டுக்குப் போய் ‘விஸ்வரூபத்துக்கு தடை வாங்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதனால் கமல் விரும்பியபடி வரும் 25 அன்று படம் தமிழில் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. அப்படியே ஒருவேளை தியேட்டர் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக அரசின் உதவியுடன் ‘முன்னப்பின்ன’ தமிழில் கமல் ரூபம் எடுத்தாலும், மேற்படி கார்ப்பரேட்காரர்களைப் பகைத்துக்கொண்டு, கமல் இந்தி மொழியில் கனவு கூட காணமுடியாது. அவர்களை எப்படி சமாளிப்பது என்று விளங்காமல்தான் ‘தூங்கி எழுவதற்கு’ அவகாசம் கேட்கிறார் கமல்.
கொட்டும் மழைநேரம் உப்பு விக்கப்போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப்போனேன். தப்புக்கணக்கைப் போட்டுத்தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே,..