கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றை விட பயங்கர ஆபத்தானவை என்ற பட்டியலில், வெளிநாட்டு டி.வி.டிகளைக் கொண்டுவந்து, அவைகளைத் தடை செய்தால்தான் நம்ம தமிழ்சினிமாவைக் காப்பாற்றமுடியுமோ என்ற எண்ணத்தை சமீபத்திய சில படங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.
விஷாலின் ‘சமர்’ அப்படி ஒரு டி.வி.டி.யில் சுடப்பட்ட ஒரு
உல்டாக்கதைதான் என்பதை அவரது தலையிலேயே அடித்து தைரியமாக சத்தியம் செய்யலாம்.
ஊட்டியில் தன்னைக்கைவிட்டுவிட்டுப்போன காதலி சுனைனாவின் அழைப்பின் பேரில் பாங்காக் போகிறார் விஷால். போகும் வழியில் அவருக்கு ஏர்போர்ட்டில் ‘பிக்-அப் ஆகிறார் த்ரிஷா. வரச்சொன்ன இடத்துக்கு சுனைனா வரவில்லை. அவருக்குப் பதிலாக பல பிரச்சினைகள் அவரை நோக்கி விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. ’பாங்காக்கிலேயே இன்னொரு மல்டி மில்லியனர் விஷால் இருக்கிறார், அது நீங்கதான் என்று அவரைக் குழப்புகிறார்கள். அந்த இன்னொரு விஷாலின், பெயரில் துவங்கி, அவரது கையெழுத்து வரை ஒத்துப்போகிறது.
இப்படி ஒரு சுமாரசியமான முதல் பாதி முடிந்து இரண்டாவது பாதியில் அமர்ந்தால், ‘கேணப்பயலுக ஊரில் கிறுக்குப்பயலுக நாட்டாமை மாதிரி,ஜே.டி.சக்ரவர்த்தி,மனோஜ் பாஜ்பாய் ஆகிய ரெண்டு நட்டு கழண்ட வில்லன்களைக் காட்டுகிறார்கள். ஜட்டி போட்ட காலத்திலிருந்தே பெட்டு கட்டி விளையாடுவது அவர்களது பொழுதுபோக்காம். அதனால் கதையில் வருகிற விஷால், த்ரிஷா உட்பட அனைவருமே அவர்களது ‘பெட்டுக்குள்’ அடங்கிய பிட்டுக்கள்தானாம். சம்பந்தப்பட்ட கேரக்டர்களின் டாய்லெட் உட்பட அனைத்து இடங்களிலும் கேமராவைப் பொருத்தி, இருவரும் பெட் கட்டி விளையாடுகிறார்களாம். [இவ்வளவு இடங்கள்ல கேமரா பொருத்துனீங்கன்னா ஆனந்த் சினி சர்வீஸ்காரங்க உங்க மேல கேஸ் போடாம என்ன செய்வாங்க தயாரிப்பாளர் சார்?]
அவங்க கதை, அவங்க டைரக்டர், அவங்க த்ரிஷா, அவங்க சுனைனா, அதனால் க்ளைமேக்சை ஒட்டி ‘வில்லன்களோட எல்லா டிராமாவும் எனக்குத்தெரியும். அதனால அவிங்களுக்குத் தெரியாம, அவிங்களையே நான் பல இடங்கள்ல கேமராவைப்பொருத்தி பைத்தியம் புடிச்ச மாதிரி நடிச்சேன்’ என்று கூலாக சொல்லிவிடுகிறார் விஷால். ஆனால் ரசிகர்களாகிய நம்மால் அது முடியுமா? கதையின் ஒரு கட்டத்தில் நமக்கு மரை கழண்டு போக ஆரம்பித்து, அது திரையை விட்டு வெளியேறி பல மணி நேரங்களுக்கு நீடித்தது என்பதே நிதர்சனமான உண்மை.
இப்படி ஒரு கதையை எங்கிருந்து, யாருக்காக, எதற்காக, என்னத்துக்காக, எப்படித்தான்,எடுத்தார்களோ என்று கேள்விகள் கியூகட்டி நிற்கின்றன.
படத்தின் கியூட்டான ஒரே விஷயம், ’நாதன் என் ஜீவனே’ என்று முனுமுனுக்க வைக்கும், ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு. பாங்காக்கை, த்ரிஷாவை அவ்வளவு ஏன் சுனைனாவைக் கூட ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்.[ஆனா உமா பத்மநாபன் கிட்ட உங்க பப்பு வேகலையே பாஸ்?]
யுவன் ஷங்கர் ராஜாவும், நா. முத்துக்குமாரும் செம ஓ.பி. அடித்திருக்கிறார்கள். வில்லன்கள் கிட்ட சொல்லி, அடுத்து உங்க ஏரியா முழுக்கதான் கேமரா பொருத்தச்சொல்லனும் பாஸ்.
மேலும் மேலும் விஷாலமாகிக்கொண்டிருக்கும் திணவெடுத்த புஜங்களையும், அந்த கிழிந்த பனியன்களையும் மட்டும் போட்டுக்கொண்டு, இனியும் ரொம்ப நாளைக்கு வண்டி ஓட்டமுடியாது என்று விஷால், இந்நேரம் புரிந்துகொண்டிருப்பார். த்ரிஷா சரக்கு, சுனைனா ஊறுகாய்.
ஜே.டி.சக்ரவர்த்தி,மனோஜ் பாஜ்பாயில் துவங்கி ஜான் விஜய் வரை அனைத்து வில்லன்கள் செய்யும் காரியங்களே செம காமெடியாக இருப்பதால் படத்துக்கு தனியாக காமெடியன்கள் என்று யாரையும் போடவில்லை இயக்குனர் திரு. கதைக்கான டி.வி.டி.யை இவருக்கு ’சமர்’ப்பணம் செய்த ’இலக்கிய எத்தர்’ எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். ஏன்தானோ என்று கேட்கவைக்கும் ஏனோதானோ வசனங்கள்.
சமீபத்தில் நடந்த ‘சமர்’ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற தோல்விப்படம் கொடுத்த அதே இயக்குனர் திருவுக்கு மீண்டும் படம் கொடுத்திருக்கிறீர்களே?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘நான் பழைய தோல்விகளைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.வரப்போகும் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டே அவரை இயக்குனராக்கியிருக்கிறேன்’ என்று சொன்னார்.
அந்த ‘வரப்போகும் வெற்றி’ங்கிற வார்த்தைகளை மட்டும் ஸ்ட்ராங்கா புடிச்சிக்கங்க பாஸ். இப்படிப்பட்ட கதைகளையும், டைரக்டர்களையும் கண்டினியூ பண்ணுனீங்கன்னா, அதையே நீங்க, ஒன்ஸ் அகெயின், மறுபடியும், திரும்பத்திரும்ப ரிபீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம்.