சிறுவன் சாமுவேல் கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த கதையாக உருவாகியிருக்கிறது என்று லேசாக சொல்லி விட முடியாது, இயக்குனர் தங்கர் பச்சான் பாணியில் மண் மற்றும் மனிதம் சார்ந்த கதையாக இதனை உருவாக்கியிருக்கிறார் இயக் குனர் சாது பர்லிங்டென்.
கடல் சார்ந்த பகுதியில் வாழும் சிறுவர்கள் அஜீதன், விஷ்ணு இருவரும் நண்பர்கள். கிரிக்கெட் என்றால் இருவருக்கும் ஆர்வம் அதிகம் குறிப்பாக அஜீதனுக்கு உயிர். பெரிய பையன்கள் கிரிக்கெட் விளையாடும்போது அவர்களுடன் சேர்ந்து அஜீதன், விஷ்ணு விளையாடுகின்றனர். . கிரிக்கெட் பந்து பால் பாத்திரத்தில் விழ சிறுவர்களை துரத்துகின்றனர். அடி வாங்காமலிருக்க ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி தப்பிக்கின்றனர்.
அதில் ஒரு சிறுவன் தனது வீடியோ கேம்ஸ் கருவியை விஷ்ணு திருடி விட்டதாக கூற அவனது தந்தை விஷ்ணுவை அடித்து பள்ளிக் கூடத்துக்கு கூட செல்லக்கூடாது என்று கூறிவிடுகிறார். குழந்தையின் கையிலிருந்த மோதிரத்தையும் திருடியதாகவும் விஷ்ணு மீது பழி விழுகிறது. வீடியோ கேம்மை திருடியது யார் என்று தெரியும்போது அதிர்ச்சி பிறக்கிறது. அது யார், அடுத்து நடந்தது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
குழந்தைகளுக்கான படம் என்பது அரிதாகி விட்டது. அதுவும் மண்சார்ந்த கதைகள் என்பதை. நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை. படம் தொடங்கியதுமே இயக்குனர் நம்மை கன்னியாகுமரி நிலப்பகுதிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் தொடர்ந்து அவ்வூர் மக்கள் பேச்சு வழக்கு ஊரோடு ஒன்றச் செய்து விடுகிறது.
சிறுவன் சாமுவேலாக மாறியிருக்கும் அஜீதன் களத்தூர் கண்ணம்மா கமலை ஞாபகப்படுத்துகிறார்.
கிரிக்கெட் கார்டுகளை பார்த்து வியப்பது, அவற்றை பத்திரமாக எடுத்து வந்து வீட்டில் மறைத்து வைப்பது, கோபத்தில் கிரிக்கெட் கார்டுகளை தந்தை நெருப்பில் எரித்தவுடன் ஏக்கமாக பார்ப்பது என அஜீதன் நடிப்பு பிரகாசம்.
நண்பனாக வரும் மற்றொரு சிறுவன் விஷ்ணு அசல் கிராமத்து பையனாக மாறியிருக்கிறார். பள்ளிக்கூடத்தில் இருந்து தந்தை நிறுத்திவிட பின்னர் தந்தையுடன் வேலைக்கு செல்வதும் ஒரு சமயம் நண்பன் சாமுவேலை பார்த்ததும் அந்த பாலத்தின் மீது எதார்த்தமாக நடந்து வரும்போது மனதிற்குள் சம்மணம்போட்டு உட்கார்ந்துக் கொள்கிறார் விஷ்ணு,.
விஷ்ணு, அஜீதன் இருவரும் காக்கா முட்டை சிறுவர்களை ஞாபகத்துக்கு கொண்டு வருகின்றனர்.
மற்ற பாத்திரங்களில் நடித்திருப் பவர்கள் இதற்கு முன்பு நடித்து பழக்கப்படாத இயல்பான முகங்கள் என்பதால் உண்மையான வெளிப்பாடுகள் நிறைந்திருக்கிறது.
படத்தை கண்ட்ரி சைட் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
எஸ்.சாம் எட்வின் மனோகர், ஜே. ஸ்டான்லி ஜான் இசையில் சினிமாத்தனம் இல்லை.
சிவனாத் காந்தி கேமிரா இயற்கையை அள்ளி இறைக்கிறது.
இயக்குனர் சாது பர்லிங்டென் இப்படி யொரு கதையை யோசித்தது ஆச்சர்யம் தான். பள்ளிகளில் இப்படத்தை மாணவர் களுக்கு திரையிட தகுந்த படம்.
சில வெளிநாட்டு விருதுகளையும் இப்படம் வென்று வந்திருப்பது படத்தின் தரத்துக்கு சாட்சி.
சிறுவன் சாமுவேல் – மனதை விட்டு அகலாது.
நடிப்பு: அஜீதன் தவசி முத்து, கே ஜி.விஷ்ணு, செல்லப்பன், எஸ்.பி . அபர்ணா, எம். ஏ.மெர்சின், ஜே. ஜெனிஷ்
தயாரிப்பு;கண்ட்ரி சைட் பிலிம்ஸ்
இசை:எஸ்.சாம் எட்வின்
மனோகர், ஜே. ஸ்டான்லி ஜான்
ஒளிப்பதிவு: சிவனாத் காந்தி
இயக்கம்: சாது பர்லிங்டென்
பி ஆர் ஓ: ஶ்ரீ வெங்கடேஷ்