நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகும், முறையான தீர்ப்பு நகல்கள் கைக்கு வந்து சேராத நிலையில், இன்று நண்பகல் 12 மணி அளவில் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.
உணர்ச்சிப் பிழம்பாகக் காணப்பட்டார் என்று சொல்வது மிகச்சாதாரண சொற்பிரயோகம். நொறுங்கிச்சிதறிக் காட்சியளித்த கமல், அவ்வப்போது வெளியூர்த்திரையிடல்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டு அதிர்ந்தபடியே, விட்டு விட்டுப் பேசலானார்.
‘ விஸ்வரூபம்’ படத்துக்கு தொடர்ந்து வரும் இடையூறுகள் எதனால் என்பதே விளங்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் சதியாகவே உணர்கிறேன். இதனால் ஏற்படும் நஷ்டத்தால் நான் நடுத்தெருவுக்கு வந்து விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது எனினும்,வெறும் மனிதனாக வீதியில் நின்று போராடி மீண்டும் ஜெயித்துவிட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்போது நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வீடுகூட,’விஸ்வரூபம்’ படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அடமானத்தில் இருக்கிறது. நாளையே இந்த வீடுகூட எனக்கு இல்லாமல் போய்விடலாம்’ என்று தானும் உருகி, பத்திரிகையாளர்களையும் உருகவைத்த கமல், ‘ தற்போது நடக்கும் பிரச்சினைகளை வைத்துப் பார்க்கும்போது,நான் தமிழ்நாட்டில் வாழ லாயக்கற்றவனோ என்று தோன்றுகிறது’ என்றபோது அவரது குரல் கரகரத்தது.
இதற்கிடையில், ‘விஸ்வரூபம்’ படத்தைத் திரையிடத்தயாராக இருந்த, சென்னை உட்பட தமிழகம் முழுக்க பல தியேட்டர்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு போஸ்டர்களும் பேனர்களும் கிழிக்கப்பட்டன.