சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் இளைஞ, இளைஞிகளின் கூட்டம் இன்னும் கட்டுக்கடங்காமல் தான் உள்ளது. இது போதாதென்று நமீதா முதல் ஷாருக்கான் வரை ட்விட்டர், பேஸ்புக் என்று புழங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி சிலர் நடிக, நடிகைகளின், தயாரிப்பாளர்களின்
பெயர்களில் போலி இணைய கணக்குகளை ஆரம்பித்து சினிமாவுக்கு ஆள் எடுப்பதாக நம்பகமாப் பேசி பணம் கறந்து விடுகிறார்கள். இதில் ஏமாந்து உடலையும் இழந்த பெண்கள் உண்டு.
சுப்ரமணியபுரம் சசிகுமார் அவ்வளவாக இணைய வட்டாரத்தில் புழங்காதவர். இது தெரிந்து இவரது பெயரை இணையத்தில் உபயோகப்படுத்தி யாரோ சினிமாவுக்கு புதுமுகம் தேடும் பாவனையில் விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். இதையறிந்ததும் சசிகுமார் போலீஸில் புகார் செய்தார்.
இது சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சசிகுமார் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்..
“சினிமா என்கின்ற பிரமாண்ட உலகை நோக்கி ஆர்வத்தோடு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது வரவேற்கத்தக்கது தான். ஆனாலும் எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆவலில் தவறான ஆட்களை நம்பி சிலர் ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.
“சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர், சினிமா வாயப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவது தான் வழக்கம். போனிலோ, இமெயில் மூலமாகவோ, தொடர்பு கொள்ளும் வழக்கம் எனக்குக் கிடையாது. என் பெயரில் போலி ஈமெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாள் வரை சமூக வலைத்தளங்கள் எதிலுமே நான் இல்லை. அதனால், வலைத்தளத் தகவல்களையோ, ஈமெயில்களை வைத்தோ என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக, சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்தளவுக்கு அழகானதோ.. அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட !”
இப்படி்க்கு
– சசிகுமார். 29/52, இரண்டாம் தெரு, வேலாயுதம் காலனி, சாலிகிராமம். சென்னை – 600093. போன் – 044 23764002.
சசிகுமார் தான் சொல்லிட்டாரே. பின்ன என்ன கேர்ள்ஸ். இனிமே வேலாயுதம் காலனிக்கே போய் நேரா அட்டாக் செய்யுங்க.