தாரகை சினிமாஸ் (Tharagai cinimas) தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”.
நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள ஜூன் 26 அன்று நடைபெற்றது
இந்நிகழ்வினில் பயில்வான் ரங்கநாதன்பேசியதாவது….
இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் யூடியூபில் பேசுவது பற்றித் தெரியுமா? எனக்கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார்.மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார், அவர் எழுதின டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார். ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார். இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் இரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை, என் சமீபத்துப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், கள்ளச்சாரயத்தைக் காச்சுவபவனைத் தூக்கில் போட வேண்டும் என்று பேசியுள்ளேன். எல்லா மது ஆலைகளையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் நடத்துகின்றன. அவர்கள் எப்படி கள்ளை கொண்டு வருவார்கள். நான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன். ஆனால் என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாகப் பேசுகிறார்கள். இந்தப்படத்தில் பேசிய தொகையைச் சரியாகத் தந்தார்கள், ஆனால் பாவம் ஜீவாவை ஹிரோ என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஜீவாவை எனக்கு 35 வருடமாகத் தெரியும், நல்ல நடிகர். நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன், இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்றார்.
திருச்சி சாதனா பேசியதாவது…
எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரம்மாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தைத் துணிந்து மிகத் தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் படத்தைப் பற்றி மட்டும் தான் பேச்ச் சொன்னார் ஆனால் மற்ற எல்லாத்தையும் பேசி பிரச்சனையாகிவிடும் போல் தெரிகிறது. இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்குத் தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தப்படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்குத் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். இந்தப்படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்றார்.
நடிகை மேகாலி மீனாட்சி பேசியதாவது…
அறம் செய் திரைப்படம், மிக இனிமையான அனுபவம். இந்தப்படத்தில் மிக நல்லதொரு கேரக்டர் செய்துள்ளேன். பப்ளி கேரக்டர்.என்னை நம்பி இந்த கேரகடர் தந்ததற்கு இயக்குநர் பாலு சாருக்கு நன்றி. இயக்குநர் பாலு சார் மிக எனர்ஜி ஆனவர், செட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். எங்களுக்கு மிக அன்பாக எல்லாம் சொல்லித் தருவார். படத்தை மிகச் சிறப்பாக எடுத்து உள்ளார். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கும் நன்றி எங்களையெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார். ஜீவா நடிக்கும்போது நல்ல ஒத்துழைப்பு தந்தார். படக்குழ்வினர் மிக உறுதுணையாக இருந்தார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
நடிகை அஞ்சனா கீர்த்தி பேசியதாவது…
இந்த விழாவிற்கு வருகை தந்து, எங்களையெல்லாம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு மிக அழுத்தமான கேரக்டர், இரசிகர்களிடம் ஒன்று நிறையப் பாராட்டுக்கள் வாங்குவேன், அல்லது திட்டு வாங்குவேன் என நினைத்தேன். இயக்குநரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன்,இயக்குநர் மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார்.படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் ஜீவா பேசியதாவது…
பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். பரவாயில்லை, மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார். இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் சும்மாவாச்சும் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்லி விடுங்கள் நன்றாக இருக்கும். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது.படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…
அறம் செய் மிக நல்ல கருத்து சொல்லும் படம், இயக்குநர் பாலு மிக நன்றாக இயக்கியுள்ளார். பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது. பாடலாசிரியர் சினேகனுக்குத் தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன். படமும் மிக மிக நல்ல கருத்து சொல்கிறது. எல்லோருமே இங்கு நல்லவர்கள் தான், கெட்டவன் அழிய வேண்டும் நல்லது நிலைக்க நிலைக்க வேண்டும் என எல்லோருமே நினைக்கிறோம். இன்று அமெரிக்காவில் குடும்பம் என்பதே சிதைந்து அழிந்துவிட்டது, எதற்காக வாழ வேண்டும், குடும்பம், பாசம், எதுவும் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. தனித்தனி ரூம், தனித்தனி செல்போன், என வாழ ஆரம்பித்துவிட்டோம். எப்படி சாராயம் மிகப்பெரிய கொடுமையோ, அது போல் செல்போன் மிகப்பெரிய கொடுமை, அதை தவிர்க்க வேண்டும். பணம் எல்லாத்தையும் மாற்றி விடாது, எதையும் தந்து விடாது, ஒழுக்கமாக நல்லவனாக இருந்தால் தான் நமக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். இரண்டு ஹீரோயினுக்கும் நன்றாகத் தமிழ் தெரியும், ஆனால் ஏனோ தமிழில் பேசவில்லை, தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள். இந்தப்படம் நன்றாக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் நடிகர் பாலு எஸ் வைத்தியநாதன் பேசியதாவது…
இது அரசியல் படம் தான். ஆனால் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஏனென்றால் இந்தப்படத்தில் நடித்த எல்லோருக்கும் அடுத்த வாழ்க்கை இருக்கிறது. ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள், இந்த படம் அரசியல் படம் தான். ஆனால் நாங்கள் பேசவில்லை, அடுத்த படத்தில் நாங்கள் வேறு கதை சொல்வோம்.நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கிப் பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம். 74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.