கடந்த வாரம் ஹாலிவுட்டே வந்து பாலிவுட்டில் இறங்கியது. வேறு ஒன்றுமில்லை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் தன் மனைவி கேதே கேப்ஷாவுடன் மும்பையில் வந்து இறங்கினார். புகழ்பெற்ற (26/11) தாஜ் ஹோட்டலில் தங்கிய அவர் அவருடைய ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் பாதிப் பங்குகளை வாங்கி பங்குதாரராய் மாறியிருக்கும் அனில் அம்பானியின் அழைப்பினால். அத்தோடு அவர்களின் நிறுவனங்கள் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த ‘ஆப்ரஹாம் லிங்கனி’ன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் வெற்றியையும்
கொண்டாடினார்.
இதற்கு முன்பு சுமார் 30 வருடங்களுக்கு முன் ஸ்பீல்பெர்க் கடந்த 1977ல் க்ளோஸ் என்கௌன்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட் படத்துக்காக இந்தியா வந்தார். பின் 1984ல் இந்தியாவில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தியானா ஜோன்ஸ் அன் தி டெம்ப்பிள் ஆஃப் டூம்ஸ் என்கிற படத்தை எடுத்த போது இந்தியர்களைப் பற்றி தவறான சித்தரிப்பு இருந்ததால் அப்படத்தை எடுக்க இந்தியாவில் அனுமதி வழங்கப்படவில்லை. படமும் கூட இந்தியாவில் வெளியாகவில்லை. அப்படத்தை இலங்கையில் சிங்கள மொழி பேசி எடுத்தார். (இந்தப் படத்தில் இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் மனிதனின் கபாலத்தில் காபி குடிப்பவர்கள் என்கிற ரேஞ்சில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததால் இப்படம் இந்தியாவில் அப்போது வெளியிடப்படவில்லை). அதற்குப் பின் இப்போது தான் இங்கு வருகிறார்.
அவரை வரவேற்று தனது சீ விண்ட் எனப்படும் 14 மாடி பங்களாவில் விருந்துகொடுத்து பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரு சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார் அனில் அம்பானியின் மனைவி டினா முனிம். அமிதாப் முதல் ராம்கோபால் வர்மா வரை பாலிவுட்டின் அனைத்து பிரமுகர்களும் ஆஜர். நம் தமிழ் முகங்கள் கௌதம் மேனன், கமல்ஹாசன், முனிரத்னம் போன்ற பெயர்களை விருந்தினர் பட்டியலில் எதிர்பார்த்தேன். காணவில்லை.
ஸ்பீல்பெர்க்கிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லோரும் ஹாலிவுட் ஜாம்பவானை பகவானை தரிசிக்கும் பவ்யத்தோடே எதிர்கொண்டனர. 66 வயதாகும் ஸ்பீல்பெர்க் வயதாகிவிட்டதே என்று கவலைப்படவில்லை. இனிமேல் ஆக்ஷன் படங்கள் எடுப்பதில்லை என்று அறிவித்த அவர் கதையுள்ள படங்கள் மட்டுமே எடுக்க இருக்கிறாராம்.
அவருடைய சின்ட்லர்ஸ் லிஸ்ட், லா அமிஸ்டாட், போன்ற பல படங்களிலிருந்து இப்போது வந்திருக்கும் லிங்கன் வரை அரசியலை மையப்படுத்தி இருந்தாலும் அரசியல் அவருக்கு விருப்பமான சப்ஜெக்ட் இல்லையென்கிறார்.
அமெரிக்க ஹாலிவுட் திரைப்படத்தை இந்திய திரைக்கதை மற்றும் நடிகர்களைக் கொண்டு முயற்சி செய்து பார்க்க இருப்பதாகக் கூறினார். அதே போல இந்தியா-பாகிஸ்தானை மையமாக வைத்து அழகும் செறிவும் மிகுந்த காஷ்மீரில் ஒரு படம் எடுக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார் அவர். அதற்காக இந்திய திரைக்கதை மற்றும் நடிகர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறினார். இந்திய கம்பெனியான ரிலையன்ஸ் என்டெர்டெய்ன்மண்ட் உடன் கூட்டுச் சேர்ந்து அவர் எடுக்கப் போகும் இந்தப் படம் காஷ்மீர் பிரச்சனையை அப்படியே உள்ளபடி உள்ளதாகக் கூறும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? மணிரத்னத்தின் ரோஜா – பாகம் 2 ஆகத்தானே வரும் ?