எண்பதுகளில் இளையராஜாவின் பிரமாதமான இசையில் பாடல்கள் சும்மா நச்சுன்னு இருக்க, மைக் மோகன் என்றே அடைமொழி வரும் அளவுக்கு நடிகர் மோகனை பாடகராகவே கொண்ட சில்வர் ஜூப்ளி படங்களான உதய கீதம், நான் பாடும் பாடல், இதயக் கோயில்
போன்றவற்றைக் கொடுத்த கோவைத் தம்பி தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும், வேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்கும், புதிய படம் விஜய மனோஜ்குமார் இயக்கும் உயிருக்கு உயிராக!
இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் விஜய மனோஜ்குமார் வேறு யாருமல்ல… மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கியுள்ள 25லும் பெரும்பாலானவை சுமாரான ரகத்தைச் சேர்ந்த படங்களே.
உயிருக்கு உயிராக குறித்து இயக்குநர் கூறுகையில், “பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை,” என்றார். கதையோட ஒன்லைன் கேட்க சுவராசியம் கம்மியா இருக்குதே மனோஜ் சார்.
இந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு A. ஜான்.
கோவைத்தம்பியின் அந்நாளைய சில்வர் ஜூப்ளி படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. இப்போது களமிறங்கியிருக்கும் அவருக்கு சாந்தகுமார் அது போன்ற ஒரு உயிரோட்டமான இசையைக் கொடுப்பாரா? பாட்டுக்கள் வெளிவந்தால் தெரியும்.