மனிதர்களின் அடிப்படைத் தேவையான குடிநீரையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலநிலையில் வாழ்கிறோம்.
குடிநீர் மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்திப் பேச வந்திருக்கும் படம் வருணன்.
வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தில், ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேரிடமும் பணியாற்றுபவர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் திரைக்கதை.
கதையின் நாயகனாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ்.காதல் காட்சிகள் மற்றும் மோதல் காட்சிகளில் அதற்குத் தக்க நடித்திருக்கிறார்.வெற்றிகரமான நாயகனாக வலம்வரும் வாய்ப்பு நன்கு தெரிகிறது.
நாயகி கேப்ரில்லா எளிய அழகு.புன்னகையால் ஈர்க்கும் அவர் நடிப்பிலும் குறைவைக்கவில்லை.
இன்னொரு இணையராக நடித்திருக்கும் பிரியதர்சன் – ஹரிப்பிரியா ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ராதாரவி, சரண்ராஜ் ஆகியோரின் அனுபவ நடிப்பு கதைக்களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி ஆகிய அனைவரும் நன்று.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், வடசென்னையைக் கண்முன் காட்டியிருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் குறிப்பாக இறுதிச் சண்டைக் காட்சியில் அவருடைய உழைப்பு சிறப்பு.
போபோ சசியின் இசையில் பாடல்கள் இரசிக்கும் இரகம்.பின்னணி இசை கொஞ்சம் தூக்கல்.
ரமணா கோபிநாத்தின் வசனங்கள் நெருப்பு.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல் முருகன்.குடிநீர் ஒரு தொழிலாக மாறிப்போன அவலத்தைச் சுட்டும் வகையில் அதையே பின்புலமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்.அதை திரைமொழியில் கொடுப்பதில் சில குறைகள் இருப்பது பலவீனம்.
இயக்குநரின் நல்ல சிந்தனைக்கு வளரும் நாயகர்களும் அனுபவ நடிகர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.
– இளையவன்