மர்மமான முறையில் நடக்கும் தற்கொலைகள் குறித்து காவல்துறை விசாரணை நடக்கிறது? அதில் வெளிப்பட்ட உண்மை என்ன? என்பதை திகிலுடனும் விறுவிறுப்புடனும் சொல்ல முயன்றிருக்கும் படம் அஸ்திரம்.
காவல்துறை அதிகாரியான நாயகன் ஷாம்,காவல்துறையில் இருந்து கொண்டே விசாரித்தால் அது சாதாரணமாகிப் போய்விடும் என்பதால் அவரைக் கட்டாயமாக விடுமுறையில் அனுப்பிவிடுகிறார்கள்.அதன்பின்னும் அடங்காமல் அவர் விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதை.
காவலதிகாரிக்குரிய அத்தனை மிடுக்குடனும் இருக்கிறார் ஷாம்.சாந்தமான கண்வனாகவும் இருக்கிறார். நல்ல கணவனுக்குரிய அம்சங்கள் கொண்ட ஆணாகவும் படைப்பட்டிருக்கும் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து பாராட்டு பெறுகிறார்.
நிரா என்பவர் நாயகியாக நடித்திருக்கிறார்.இந்தக் கதையில் அவருடைய பங்கு குறைவு என்றாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.
நாயகன் ஷாம் உடன் வரும் காவலராக நடித்திருக்கும் புதுமுகம் சுமந்த் கவனம் ஈர்க்கிறார்.
நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர்,ஜீவா ரவி,ஜே.ஆர்.மார்ட்டின் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுக்கும் ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பதட்டம் காட்சிகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் பிசகினாலும் சலிப்பூட்டிவிடக் கூடிய ஆபத்தைத் தவிர்த்து படம் இயல்பாகப் பயணிக்க உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பூபதி.
எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ராஜகோபால்.தெரிந்த கதைதானே? இப்படித்தானே நடக்கப் போகிறது? என்று அலட்சியமாகப் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறார்.அதேபோல் இதுபோன்ற கதைகளில் இரகசியம் அவிழும்போது சாதாரணமாகிவிடும் அவ்விடத்திலும் ஒரு ஜப்பான் மன்னரின் கதையைச் சொல்லி வேறுபட்டிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைத்திருப்பது பலம்.
– இளையவன்