நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மே 25 அன்று நடைபெற்றது.
 
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டி.ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.பாலகுரு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.

ஜூனில் வெளியாகும் இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்….

வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களைப் பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தச் சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 
நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம்.தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம்.‌அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையைக் கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம்.எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது. 
ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளைக் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம்.இதனை பெருமிதமாகக் கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனைச் செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.
இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம். 
ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது.இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கச் சமுதாயம். இங்கு பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன். தற்போது ஹெர் ஸ்டோரீஸ் என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது.இந்த பதிப்பகம் நூறு பெண்களின் கதையை சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராக தங்களது கதையைச் சொல்ல வேண்டும்.அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா – இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன் . ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளைச் சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன்/ பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்த காணொலியை பதிவேற்றம் செய்கிறார்கள்.இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது.அந்த வகையில் இந்தச் சமூகத்திற்குச் சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது. 
ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்தக் கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்புபடுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன.அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்தக் கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். 
என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள்.வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு.அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லாப் பெண்களும் அப்படித்தான். எல்லா பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள்.திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.இதை இந்த ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 
இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன் என்றார்.
 
நடிகை அம்பிகா பேசுகையில்….

இந்தப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான்.‌ இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தைப் பார்த்தேன்.பொழுதுபோக்காக இருக்கிறது.இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது.அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிடக் கடினம்.அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிடக் கடினம்.அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்குச் சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்….

இந்த மேடை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.கவர்ச்சிகரமான பெண்களுக்கு மத்தியில் நானும் இருப்பதால் என்னுடைய கவர்ச்சியும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். 
வனிதாவைப் பற்றி இயக்குநர் வசந்தபாலன் அழகாகக் குறிப்பிட்டார். வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையைப் பார்க்கிறேன்.நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன்.அவர்கள் தனக்குப் பிடித்தது போல் வாழ்கிறார்கள்.சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்குப் பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்தத் துணிச்சல் என்னைக் கவர்ந்திருக்கிறது.இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.அதற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
சினிமாவில் அவர் பல தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்திருக்கிறார்.அதை எல்லாம் கடந்து,இன்று வெற்றிகரமான பெண்மணியாக வலம் வருகிறார்.இந்த சினிமாவை நீங்கள் முழுமையாக நம்பினால், சினிமா உங்களுக்கான இடத்தை நிச்சயமாக வழங்கும். 
இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்கியிருக்கிறார்கள்.வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது எளிதானதல்ல.பெரிய பொருட்செலவில் வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.ஸ்ரீனிக் கிரியேஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை நல்லதொரு தேதியில் வெளியிடுங்கள்.இரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் இந்தப் படக்குழு வெற்றி பெற வேண்டும்.இந்தத் திரைப்படம் மத்திம வயதில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படம் நல்ல தேதியில் வெளியானால் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். 
தமிழ் சினிமாவில் 240 படங்கள் வெளியானால் அதில் இரண்டு பேர் மட்டுமே பெண் இயக்குநர்கள்.இந்தத் தருணத்தில் நிறைய பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாகும் போது வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வனதா இயக்கி இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி வெற்றியை அளிக்கும் என நினைக்கிறேன் என்றார்.
 
நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில்…..

நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னைப் பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை தனது இடது கையால் புறம் தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. 
இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன.அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். 
இந்தப் படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா.இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். 
ஷகிலாவை இந்தப் படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவைத் திறமையை வனிதா இப்படத்தில்  வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
 
ஷகீலா பேசுகையில்……

வனிதா நன்றாகப் பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தைத் தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம். 
பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்தப் படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன. 
எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். 
எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா. 
அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து இரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளைக் கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம் என்றார். 

ஜோவிகா விஜயகுமார் பேசுகையில்….,

இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது. 
இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது. 
நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில்…..

தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன்.அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர். இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராக படங்களைத் தான் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது. 
ஜோவிகாவிற்காகத் தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் நன்றாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் சுந்தர் சி படம் போல் காமெடியாக இருக்கும்.
இப்படத்தில் நாயகன் ராபர்ட் மாஸ்டர் தற்போது கோவாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 
இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில்…..

இதுவரை 125 திரைப்படங்களுக்கும் மேலாகப் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்தப்படத்தில் ராபர்ட் , மாஸ்டர் வனிதா விஜயகுமார், ஜோவிகா என மூன்று டான்கள் இருக்கிறார்கள். இதில் ஜோவிகா தேர்வுதான் இறுதியானதாக இருக்கும். இந்த சிறிய வயதில் அவருக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டி தான் காரணம். அவர்களுடைய ஆசி இவருக்கு இருக்கிறது. 
ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் இணைந்த ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சங்கி மங்கி..’ எனும் பாடல் 50 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களும் அதனை கடந்து புதிய சாதனையை படைக்கும். 
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. கிளைமாக்ஸில் சாமி பாட்டு ஒன்றும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் பாடல்களை எழுதியும் இருக்கிறேன். 
இந்தத் திரைப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் – மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.இந்தப் படத்தில் ராபர்ட் மான்ஸ்டர் நடனத்தை விட நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

சதீஷ்-பாலா பேசுகையில்…..

நாங்கள் இரட்டையர்கள் அல்ல, மூவர். மதியழகன் சொல்வதை செய்கிறோம். தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதற்கும் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 
இயக்குநர் வனிதா விஜயகுமார் பேசுகையில்….

இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘பிதா’ படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம். 
அம்மாவிற்குப் பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராகப் பார்க்கிறேன். ஷகிலா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்தப் படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டுத் தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாகச் செயல்படுபவர் அம்பிகா அக்கா தான். 
வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி பணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது. 
வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய இரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய இரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான ‘அநீதி ‘ திரைப்படத்தில் நடித்திருந்தேன்.அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதைப் பெருமிதமாக கருதுகிறேன்.என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. 
நல்ல இயக்குநர் – பெரிய இயக்குநர்-  சிறந்த இயக்குநர் – என யாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன்.அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்துப் பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் பெயருக்கு முன் ‘ரொமான்ஸிக்கல்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.  
இயக்குநர் பி. வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா.அவர்களுக்கும் நன்றி. 
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய விமர்சனங்களைப் படிப்பேன்.ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். 
இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும்’ என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம். 
ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்.தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. 
வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.