பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் படித்து பயிற்சி பெறுகிறார்கள். அந்தப் பட்டறையில் பாலுமகேந்திரா வகுப்பெடுப்பார். அந்த வகுப்பில் நடந்ததாக அவர் குறிப்பிட்டது இது.
“ஒரு நாள் மாணவன் ஒருவன் வகுப்பில் எழுந்து நல்ல படம்னா என்ன சார் என்று கேட்டான். உதாரணமாக ஏதாவது படத்தைச் சொல்லுங்கள் என்றான். இந்தக் கேள்விக்கு உடனடியாக கூற என்னிடம் பதில் இல்லை. எனவே நாளைக்குச் சொல்கிறேன் என்றுவிட்டேன்.
அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. அந்தக் கேள்விக்கான விடையை மாணவர்களுக்கு எப்படி சரியாக உணர்த்துவது என்று தேடிக்கொண்டேயிருந்தேன். அடுத்த நாளும் அந்தப் பையன் கேள்விக்குப் பதில் தேடி ஆர்வத்தோடு வந்துவிட்டான்.
அப்போது நான் சொன்னேன். ‘நல்ல சினிமா என்பது அம்மா சமைக்கும் சாப்பாடு போல் இருக்கவேண்டும்’ என்று. எத்தனையோ வகையான, ருசியான, தினுசான உணவுகள் இருக்கும்போதும் நமக்கு வயிற்றுக்கு நல்லது செய்யும் அம்மாவின் சாப்பாடுதானே நமக்குப் பிடித்தமானது. இல்லையா?
எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது. அந்த மிருகத்தை சினிமா சாந்தப்படுத்தவேண்டும். பதிலுக்கு அந்த மிருகத்தை சினிமா உசுப்பிவிடக் கூடாது. சாந்தப்படுத்தும் சினிமாதான் நல்ல சினிமா என்றேன்.”
உங்களின் மூன்றாம் பிறை முதற்கொண்டு எத்தனையோ அழியாத கோலங்கள் நல்ல சினிமாவுக்கு எடுத்துக்காட்டுக்கள் தானே பாலுசார்.