மரியான் மீண்டும் ஒரு ஏமாற்றமாக முடிந்து போனது துரதிர்ஷ்டவசமானதுதான். கடல் புரத்து வாழ்வியல் படத்தில் எங்கும் ஆழமாக வெளிப்படவில்லை. குறிப்பாக உடை ஒப்பனைகளில்தமிழ் சினிமாவின் வழக்கமான சிரத்தையின்மை வெளிப்படையாகத் தெரிகிறது. மரியான் –பார்வதி காதலில், ஏன் பார்வதி விழுந்து விழுந்து காதலிக்கிறார்? அப்படி ஒரு அழகியின் காதலை மரியான் ஏன் தூக்கியெறிகிறார்? பின் ஏன் அவளுக்காகத் தூரதேசம் போகத் துணிகிறார்?
கடந்த பத்தாண்டுகளில் கிடைத்த அபூர்வமான நடிகை பார்வதி. பூ படத்தில் அற்புதமான நடிப்பைத் தர முடிந்த இவரால் மரியானில் அப்படிச் சோபிக்க முடியவில்லை. காரணம் காதல் – காதல் – காத்திருத்தல், அதைத்தவிர வேறொன்றும் இல்லாத வெற்றுக் களத்தை வைத்துக்கொண்டு அவர் என்னதான் செய்துவிட முடியும். பூ படத்தில் வரும் தர்க்க ரீதியான காட்சித் தேவைகளை மிக தேர்ந்த பாவங்களோடு கையாண்டிருப்பார். அதோடு கோயில்பட்டி சுற்றுவட்டார கிராமத்துப் பெண்ணாகவே உடை ஒப்பனை பேச்சு உடல்மொழி என மாறியிருப்பார். (பல்வேறு வகைகளிலும் மிகச்சிறந்தபடமான ‘பூ‘ பரவலான கவனிப்பைப் பெறாமல் போனது.) மரியானில் எல்லா அம்சங்களிலும் காணலாகும் செயற்கைத் தனத்திற்குக் காரணம் இயக்குநரின் பிண்ணனியாகத்தான் இருக்கவேண்டும். கடல்புறத்துப் பண்பாட்டை உள்வாங்க இயலாமையால் அதை அமரகாதலாக மாற்றித் தப்பித்துக் கொள்ள முனைகிறார்.ஒரு வேளை பின்பகுதியில் சூடான் பகுதியை சரியாகக் கையாண்டிருந்தால் பட்த்தின் முற்பகுதி பலவீன்ங்கள் தெரியாமல் போயிருக்கும்.
பொதுவாகவே பிரபலமான நாயகர்களை வைத்து இம்மாதிரி கதைகளைப் பண்ணுவது சிரமம். எதிர்பாராத சூழலில் நாயகன் என்ன ஆவார்? என்ற தவிப்புதான் படத்தை நடத்திக் கொண்டு செல்வது. ஆனால் முற்பகுதியில் நாயகன் ‘தனுஷாக’ இருப்பதால் அங்கே பணமும் செல்வாக்கும் மிகுந்த வில்லனை அவரால் அடித்துத் துவைக்கமுடிகிறது. ஏனென்றால் அவர் வில்லனாகவும் இவர் நாயகனாகவுமே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். முற்பகுதியில் நாயக அரிதாரங்கள் எதுவும் இல்லாத சாமான்ய மீனவனாக தனுஷை உருவாக்கியிருந்தால் பிற்பகுதியில் பார்வையாளர்களுக்குப் பதட்டம் கூடியிருக்கும்.
எப்படியிருந்தாலும் இருவரும் உருகி உருகிக் காதலிக்கிற இடங்களும் அவர்களின் முகபாவங்களும் அருமை. ஆனால் கடன் கொடுத்துவிட்டு புல்லட்டில் மகளைப் பெண்கேட்கிற வில்லன்களெல்லாம் பஸ் ஏறி வெளியூர் போய்விட்டார்கள் என்று தமிழ் ரசிகர்கள் ஆசுவாசம் கொண்டிருந்த நேரத்தில்… பரத்பாலா நீங்களுமா? தமிழ்சினிமா சூடான் போனாலும் சுருட்டைமுடி வில்லன்களிடமிருந்து விமோசனம் கிடையாதா?
எப்படியிருந்தாலும் முதல்பாதியில் தனுஷ் – பார்வதி நடிப்பும், ஒளிப்பதிவும் இசையும் பார்வையாளனை கட்டி வைத்திருந்த வேளையில் பின்பாதியின் அமெச்சூர்த்தனம் அறுந்த வலையாக திரைக்கதையைத் தொங்க விட்டுவிட்டது. லோ பட்ஜட் படங்களில் கல்யாணக் காட்சிகளில்கூட லாங்ஷாட் போகாத கேமராபோல் சூடான் காட்சிகள் அபத்தமாக அமைந்து படகை குப்புறக் கவிழ்த்திவிட்டது.
ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ‘நெஞ்சே எழு’கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் ரகம். ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வை. இந்த இசைத் தொகுப்பின் நான்கு பாடல்களின் மிக எளிமையான வரிகளும் இசைக்கோர்ப்பும் தனியாக நிற்பவை. தமிழ் ரசிகர்கள் இம்மாதிரி பாடல்களை விரும்புவார்கள் என்று சொல்வதற்கில்லை. ‘இன்னுங்கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன’ விஜய்பிரகாஷின் லயிப்பான பாடும் முறையில் அமைந்த அருமையான பாடல். கபிலனின் வரிகள் எளிமையும் அழகும் இணைந்தவை. ‘நேற்று அவள் இருந்தாள்’ ஹரிசரன் குரலில் ஒரு அற்புதமான ஸ்லோ மெலடி. ஹரிசரண் மிகச்சிறந்த பாடகராக உருமாறி வருகிறார். உணர்ச்சி கொப்பளிக்கும் குரல். ஒற்றை கிதாருடன் சக்திஶ்ரீகோபாலனின் ‘எங்க போற ராசா’ இதமான வருடல். இப்பாடல் உருவாக்கம் பார்க்கக் கிடைக்கிறது காணொளியாக. (http://www.youtube.com/watch?v=-pdbsaIilTI) ஆனால் ‘கடல் ராசா நான்’ என்று ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜாவைப் பாடவைத்து படக்குழுவினர் ஒரு விளம்பர ஸ்டன்ட் அடித்திருப்பது அபத்தம். பாடலின் மெட்டும் இசைக்கோர்வையுமே மிகச் சராசரி. அதில் இசையமைப்பாளர்களிலேயே மிக சுமாரான பாடகரான யுவனைப் பாடவைத்ததன் நோக்கம் யூகிக்கக்கூடியதுதான்.
– இரா.பிரபாகர்.(http://prabahar1964.blogspot.in)