thirumanam-ennum-nikkah-songs-review

நம்பிக்கையூட்டும் வரவாக ‘வாகை சூட வாவில்’ அறிமுகமான இசையமைப்பாளர் ஜிப்ரான் மீண்டும் ‘திருமணம் எனும் நிக்கா’ எனும் திரைப்படத்தின் மூலம் நம்பிக்கையூட்டும் பாடல்களுடன் களமிறங்கியுள்ளார். தமிழில் உலவிக் கொண்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களில் ஒரு கை விரல்களுக்குள் அடங்குபவர்களே இசை என்பதற்கான நியாயத்தைப் புரிந்து இயங்குபவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஜிப்ரானுக்கு மெட்டும்

இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் அரேஞ்மன்ட்டிலும் இருந்த முதிர்ச்சி முதல் படத்திலேயே வெளிப்பட்டது. ஆனால் முதல்படத்திற்குப் பின் அவருக்கு அமைந்த படங்களாலோ என்னவோ அவரின் வீச்சு எதிர்பார்த்தவிதத்தில் அமையவில்லை. ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடல்களைத் தந்துள்ளார்.

‘சில்லென்ற சில்லென்ற காற்றிலே…’ இந்த ஆண்டின் சிறந்த மெலடிகளில் ஒன்றாகக் கருதத்தக்கது. அருமையான கோரஸில் ஆரம்பிக்கும்போதே ஆன்மாவைத் தொடுகின்ற மெலடியாக உருப்பெரும் அழகு தெரியத் தொடங்குகிறது. இசைக்கருவிகளின் துல்லியமும் இடையிசையும் மிக நேர்த்தியாக பாடலோடு இணைந்து கொள்கின்றன. சுந்தர்ராவ் மற்றும் கவுசிக் சக்ரவர்த்தி மற்றும் முன்னா சவுக்கத் அலியோடு ஜிப்ரானும் பாடியிருக்கிறார். ஆண்குரல் அபாயகரமான உச்ச ஸ்தாயிக்குச் சென்று மீள்வது அருமையான இடமாக இருந்தாலும் பாடகர் சற்று அசௌகரியமாவது தெரியவே செய்கிறது. காதல் மதியும் சவுக்கத் அலியும் தமிழிலும் உருதுவிலும்? எழுதியிருக்கிறார்கள். ஒரு முறை கேட்டவுடன் ஒட்டிக்கொள்கிற மெட்டு. அதுதான் ஒரு பாடலின் முதல் தகுதி.

‘கண்ணுக்குள் பொத்திவைத்த செல்லக் கண்ணனே வா’ ஒரு செமி கிளாசிக்கல் ரகம். சில ராகங்கள் ஊடாடுகிற பாடல். சாருலதாமணி, சாதனா சர்கம் விஜய் பிரகாஷும் பாடியிருக்கிறார்கள். இந்த ஆல்பத்தில் குரல்கள் மிகக் கச்சிதமாய் பொருந்தியிருக்கிற பாடல் இதுதான். சாருலதாவின் அடக்கமான கமகங்களும் சாதனா சர்கத்தின் இனிமை சொட்டும் குரலும் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் விஜய்பிரகாஷின் உணர்ச்சித்தும்பும் அநாயசமாக பாடும் முறையும் கணேசின் ஜதிகளும் அற்புதமாக ஒன்றிணைந்த பாடல். இப்பாடலில் முன் இசையாகவும் இடையே வரும் ஜலதரங்கம் ஒரு புதிய உணர்வைத் தருகிறது. Sampling செய்த ஜலதரங்கமாக இல்லாமல் இரண்டு ஜலதரங்க கலைஞர்களை live ஆக இசைக்கச் செய்திருப்பது பாராட்டுக்குறியது.

‘யாரோ இவள்.. யாரோ இவள்..’ ஆண்குரலில் வரும் ஒரு சரணத்தோடு முடியும் பாடல். யாசின் நிஜார் எனும் பாடகர் புது வரவாக இருக்கக் கூடும். உச்ச ஸ்தாயிப் பாடல்.. நன்றாகவே பாடியிருக்கிறார். எழுதியவரும் ஒரு புது கவிஞரான பார்வதி. இந்தப்பாடலின் வயலின் இசைக் கோர்வைகள் மிக நேர்த்தியாகவும் சுகமாகவும் அமைந்திருக்கின்றன. இசையமைப்பாளரின் கற்பனைக்கும் திறமைக்கும் இது சான்று. ஜிப்ரானின் ட்ரேட் மார்க்காக இருக்கும் எளிமையான அழகான தாளக் கருவிகள் பாடலை தனியாக நிறுத்துகின்றன.

‘ஹாஜா ஜீ’ எனும் சிறிய பாடல் சுஃபி சாயல் உள்ள அழகான பாடல். அரிஃபுல்லா ஷா காலிப் மற்றும் ரிஃபாயி குழுவினர் பாடியது. இந்தப் படத்தின் பாடல்களில் இஸ்லாமிய பண்பாட்டின் இசைக்கூறான சுஃபி இசையின் சாயல் அவ்வப்போது தலைகாட்டுவது பாடல்களுக்கு புதிய மெருகை கொடுப்பதாகவே இருக்கிறது.

‘என் தாரா .. என் தாரா… நீயே என் தாரா..’ ஒரு சுமாரான மெலடியாக இருந்தாலும் பாடல்வரிகள் மெட்டின் காலைப் பிடித்து இழுப்பதுபோல் தோன்றுகிறது. தாரா… பூரா.. நேரா … எனும் வார்த்தைகள் கேட்பதற்கு சுகமாக இல்லை. தமிழில் மெல்லோசை, வல்லோசை என்று உண்டு. ‘ட’, ‘ர’ போன்ற எழுத்துக்களில் சொற்கள் முடியும்போது அவ்வளவு இணக்கமாக இருப்பதில்லை. ‘ஆசை, ஓசை’ என்று முடிவதில் உள்ள சுகம் தாரா.. பூராவில் இருப்பதில்லை. சதாப் ஃபர்டி எனும் பாடகரும் சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சதாபுக்கு உதித்நாராயணன் போல் குரல். பாடுவதும் ஏறத்தாழ அப்படியே. மொழி புரியாமல் பாடுவது குரலில் வெளிப்படையாகவே தெரிவது ஒரு பெரும் குறைதான்.

‘ரயிலே ரா…’ ஒரு கூடுதல் மசாலா சேர்க்கும் முயற்சி. குழந்தைகளும் இணைந்து பாடியிருக்கும் இப்பாடல் படத்தின் காட்சிச் சூழலோடு ஒரு வேளை சிறப்பாக இருக்கக் கூடும். குழந்தைகள் விரும்பும் ஹிட் பாடலாக அமையக்கூடும். ஆனால் ஜிப்ரான் பெருமைப் படத்தக்க ஒரு பாடல் அல்ல என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மொத்ததில் இந்த ஆண்டு நீண்டநாட்கள் ரசிகர்கள் விரும்பி கேட்கத்தக்க தரமான பாடல்களுடன் வந்திருக்கும் இசைத் தொகுப்பு ‘திருமணம் எனும் நிக்கா’ என்பது என் கணிப்பு.

–இரா. பிராபாகர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.