தமிழ்த்திரையுலகில் தனது ஒப்பற்ற படைப்புகளால் ஒரு சகாப்தம் படைத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்கிற பாலுமகேந்திரா சென்னையில் வியாழனன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சாலிக்கிராமத்தில் இருக்கும் அவரது திரைப்படக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை போரூர் மின்சார மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற
இருக்கிறது. அவருக்கு இறுதி மரியாதை செய்த இயக்குனர் மகேந்திரன் அவரது சவப்பெட்டியில் தலைவைத்து அழுதார். இயக்குனர் பாலா, பாரதிராஜா போன்ற பல திரையுலகப் பிரமுகர்கள் வாய்விட்டு அழுதது அவர்மேல் அவர்களுக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தியது.பாலசந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்,விஜய் உட்பட திரையுலகமே சோகத்துடன் அவரது வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்தி நிற்கிறது.
எண்பதுகளில் மகேந்திரனின் இயக்கத்தில் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில், இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்கள் பல. மூவரும் நல்ல நண்பர்கள். முள்ளும் மலருமுக்குப் பின் அவருடைய எல்லாப் படங்களிலும் இளையராஜாவின் பிண்ணணி இசை வேண்டும் என்று பாலுமகேந்திரா எப்போதுமே உறுதியாக இருந்தார். இந்த மூவர் கூட்டணியின் உதிரிப்பூக்கள் மற்றும் முள்ளும் மலரும் போன்றவை தமிழின் க்ளாசிக் வகைப் படங்கள். 1939ல் இலங்கையில் மட்டக்கிளப்பில் அமிர்தகழி எனும் கிராமத்தில் பிறந்தவர் பாலுமகேந்திரா. லண்டனில் படிப்புக்காக அனுப்பப்பட்ட அவர் பின் புனேயில் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு பட்டப்படிப்பு படித்தார். அப்போதே அவர் கோல்ட் மெடலிஸ்ட்.
வாழ்நாளில் அவர் இயக்கிய மொத்த படங்கள் 22. ஒளிப்பதிவு செய்த படங்கள் 28. அவருடைய முதல் படம் கோகிலா. கன்னடப்படம். கமல்ஹாசன், நடித்த அந்தப் படம் பெரிய ஹிட். தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்படாமலே ஓடி பெரும் வெற்றிபெற்றது அந்தப் படம். தமிழில் அவரது முதல் படம் அழியாத கோலங்கள். மூன்றாம் பிறை கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். அவரது படங்களின் சீரியஸான தன்மையைப் பார்த்துவிட்டு இவர் ஆர்ட் பிலிம்களுக்குத்தான் லாயக்கு என்று எல்லோரும் முத்திரை குத்திவிட, கமர்சியல் படம் எடுப்பது ஒன்றும் எனக்கு கஷ்டமான காரியமல்ல என்பதைக் காட்ட வேண்டுமென்றே பக்கா கமர்சியலாக படம் கொடுத்தார். படத்தின் தலைப்பு ‘நீங்கள் கேட்டவை’. படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
தனது முதல் மலையாளப் படமான ஓளங்களில் இளையராஜாவின் இசையில் ஒளிப்பதிவு செய்து இயக்கினார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழி மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடியது. இளையராஜாவின் இசையில் இவர் இயக்கிய முதல் கன்னடப்படம் நிரீஷணா. சூப்பர்ஹிட்டான் இந்தப்படம் கன்னட க்ளாசிக்குகளில் ஒன்று. இப்படத்தை பின்பு மலையாளத்தில் யாத்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் பெரும் வெற்றிபெற்று மலையாள க்ளாசிக்குகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழில் வீடு, சந்தியா ராகம், மறுபடியும் என்று அருமையான படங்களை கொடுத்தார். வீடு மற்றும் சந்தியா ராகத்துக்காக சிறந்த இயக்குனர் விருதுகளை பெற்றார். மறுபடியும் படத்துக்குப் பின் பெரும் பணக்கஷ்டத்தில் இருந்த பாலுவுக்கு உதவ கமல் கைகொடுத்து நடித்துக் கொடுத்த படம் சதிலீலாவதி. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் இந்தப்படமும் பெரும் வெற்றி பெற்றது.
அவர் இயக்கிய எல்லாப் படங்களுக்கும் அவரே ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை கருத்துடன் செய்வார். தனது திரையுலக வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே எந்தவித தொடர்பும் காண்பித்ததில்லை. இறுதியாக சென்ற ஆண்டு சசிகுமாரின் தயாரிப்பில் அவர் முதன்முதலாக நடித்து, ஒளிப்பதிவு செய்து, இயக்கிய தலைமுறைகள் வெளிவந்தது. பெரும் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றது. தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையேயான பாச்ப்பிணைப்பை அடிப்படையாகக் கொண்ட படம் இது. பாலுமகேந்திராவின் சீடர்களான பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி, அமீர், செல்வராகவன், சந்தோஷ் சிவன், ரவி.கே.சந்திரன், கே.வி.ஆனந்த் எனப் பலர் பாலுமகேந்திராவிடம் பயின்று வெற்றிபெற்றவர்களே. அதிலும் பாலா அவரையும், அவரது மனைவி அகிலாவையும் தாய்-தந்தையராகவே பாவித்து அவர்களால் அன்பாக நேசித்து வளர்க்கப்பட்டவர்.
கலைஞர்களால் மிக மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்த அவர் தனது சுயவாழ்வில் தான் சாதாரண மனிதன் என்பதை எப்போதும் மறைத்ததில்லை. அதேசமயம் அவற்றைப் பேசவும் விரும்புவதில்லை. மறைந்த நடிகை ஷோபாவுடன் இவருக்கு இருந்த காதல், 2005ல் அவருக்கு இரண்டாவது மனைவி என்று அறிவித்த மௌனிகா என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கை சாதாரண மனிதனின் வாழ்க்கையாகவே இருந்தது. மௌனிகா அவரது வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்தவர். பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டபோது அவரை உடனிருந்து கவனித்தவர். பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா. அவர்களுக்குப் பிறந்த மகன் ஷங்கி மகேந்திரா. ஷங்கியும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
கலைஞனாக தமிழ்த திரையுலகை நல்ல உயரங்களுக்கு அழைத்துச் சென்ற பாலுமகேந்திரா தான் வாழும் காலத்தில் தனது தாய்மண்ணான ஈழத்தின் போராட்டங்களிலிருந்து விலகியவராகவே இருந்துள்ளார். அவற்றுடன் தொடர்புடையவன் என்று எந்த அரசியல் அரங்கிற்கும் அவர் வந்ததில்லை. ஈழம் பற்றி ஏன் படம் எடுக்கவில்லை என்று கேட்டபோது கூட தனக்கு அதுபோன்ற படங்கள் எடுக்க யார் பணம் தருவார் என்று கேட்டுவிட்டு விலகிக் கொண்டார். ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயலாத போது அவனில் பாதி மறைந்துபோகிறது. தமிழ்த் திரையுலகில் பெரும் கலைஞர்கள் எல்லோருக்குமே இந்தவித நோய் இருக்கிறது. அதனால் தான் தமிழன் உலகில் எங்குபோனாலும் ஒற்றுமையின்றி இருக்கிறான். மற்றவர்களால் அடித்து விரட்டப்படுகிறான். துன்புறுத்தப்படும் இனங்களில் ஒன்றாக தமிழினம் இருப்பது அரசியலற்று, செயலற்று, ஊனமுற்ற அதன் கலை வடிவங்களில் வெளிப்படுகிறது. அவை வெறும அன்பு, காதல் ,பாசம், சாதி என சமூகம் சார்ந்த பார்வையாகவே நின்று கொண்டன.
தனிப்பட்ட குறைக்ள் இருந்தாலும் ஒரு பெரும் கலைஞனாக வாழ்ந்து மறைந்த அந்தக் கலைஞனின் சாதனைகள் தமிழத் திரையுலகிற்கு முக்கியமானவையாகும். அவருடைய மறைவால் வாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஹலோதமிழ்சினிமாவின் சார்பாக இரங்கல்களை தெரிவித்துக்கொளகிறோம்.